தேடுதல்

2025- ஆம் ஆண்டு கூட்டத்திற்கான விளம்பரம் 2025- ஆம் ஆண்டு கூட்டத்திற்கான விளம்பரம் 

மக்களிடையே நட்புறவை வளர்க்கும் 46-வது கூட்டத்திற்கான திருத்தந்தையின் செய்தி

எதிர்நோக்கின் அடையாளமாக அழைப்பாக இருக்கும் இக்கூட்டமானது, “பாலைவனமான இடங்களை புதிய செங்கற்களால் கட்டுவோம்” என்ற கருப்பொருளில் சிறப்பிக்கப்பட இருக்கின்றது

மெரினா ராஜ் - வத்திக்கான்

உடனிருப்பு, எளிமை, அறிவு, வாழ்க்கையின் உரையாடல் ஆகியவற்றின் பாதையே உண்மையான பணிக்கான பாதை என்றும், கடவுளின் அன்பு வெளிப்படும் இடமாகவும், முக்கியமான தீர்வுகள் எடுக்கப்படும் இடமாகவும், கடவுள் பாலைவனத்தை மாற்றுகின்றார் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 22, வெள்ளிக்கிழமை முதல் 27, ஞாயிறு வரை இத்தாலியின் ரிமினியில் நடைபெற உள்ள, மக்களிடையே நட்புறவை வளர்க்கும் 46-வது கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ. திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள இச்செய்தியில், எதிர்நோக்கின் அடையாளமாகவும் அழைப்பாகவும் இருக்கும் இக்கூட்டமானது, “பாலைவனமான இடங்களை செங்கற்களால் கட்டுவோம்” என்ற கருப்பொருளில் சிறப்பிக்கப்பட இருக்கின்றது என்றும், விலக்கப்பட்ட கல்லாக இருந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விலைமதிக்கப்பட்ட மூலைக்கல்லாக இருக்கின்றார்கள் என்ற மகிழ்வுடன் வாழவும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

"எதிர்நோக்கு ஏமாற்றம் தராது" என்ற இந்த எதிர்நோக்கின் யூபிலி ஆண்டின் கருப்பொருளை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை அவர்கள், நிராகரிக்கப்பட்டதாகவும், வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற இடமாகவும் இருக்கும் பாலைவனமானது கடவுள் - மக்கள் சந்திக்கும் இடமாக இருக்கின்றது என்றும், கடவுளின் அன்பு வெளிப்படும் இடமாகவும் முக்கியமான தீர்வுகள் எடுக்கப்படும் இடமாகவும் கடவுள் பாலைவனத்தை மாற்றுகின்றார் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

பாலைவனத்தில் புதிய உயிர்கள் தோன்றாது என்று கருதப்படும் நிலையில், திருவிவிலியமானது கடவுள் தன்னை வெளிப்படுத்தும் பல பகுதிகள் பாலைவனத்தில் இருப்பதாக எடுத்துரைக்கின்றது என்றும், பாலைவனத்தில் 40 ஆண்டுகள் பயணிக்கும் மக்கள் கடவுளின் பிள்ளைகளாக புதுப்பிறப்பெடுக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

பாலைவனத்தை, அன்பு மற்றும் முடிவு எடுக்கப்படும் இடமாகக் கடவுள் மாற்றுகிறார், அதை நம்பிக்கையின் தோட்டம் போல செழிக்கச் செய்கிறார் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், இறைவாக்கினர்கள், இப்பாலைவனத்தை உடன்படிக்கையின் நினைவாகவும் இதயத்தைக் குளிர்விக்கும் இடமாகவும், கடவுள் நம்பிக்கைக்குத் திரும்பும் இடமாகவும் கருதினார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, துறவற ஆண்களும் பெண்களும், நம் ஒவ்வொருவரின் சார்பாகவும், அனைத்துலக மனித குலத்தின் சார்பாகவும், இப்பாலைவனத்தில் தங்கியிருந்து அமைதியும் வாழ்வுமான கடவுளைப் பெற்றுக்கொண்டனர் என்று கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், இவ்வாண்டு க்கூட்டமானது மறைசாட்சியாளார் அல்ஜேரியா அவர்களின் சான்றுள்ள வாழ்விற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முழு மனிதகுலத்துடனும் ஆழ்ந்த ஒற்றுமையுடனும் பாலைவனத்தில் வாழவும், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பிரிக்கும் அவநம்பிக்கையின் சுவர்களைக் கடந்து, மனிதராகப் பிறந்த இறைமகனின் வாழ்க்கை, மற்றும் தன்னையேக் கையளித்த ஒருங்கிணைந்த அவரது வாழ்வின் பிரதிபலிப்பில் திருஅவையின் அழைப்பு பிரகாசிக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை

உடனிருப்பு மற்றும் எளிமை, அறிவு மற்றும் "வாழ்க்கைக்கான உரையாடல்" ஆகியவற்றின் பாதையே உண்மையான பணிக்கான பாதை என்றும், இரவும் பகலும், மகிழ்ச்சியிலும், துன்பத்திலும், இயேசுவை மட்டுமே ஆண்டவராக வணங்கும் மறைசாட்சியாளரின் தியாகக் கொடையானது துன்பத்திற்கு நடுவிலும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது என்றும் கூறினார் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஆகஸ்ட் 2025, 11:44