தேடுதல்

வத்திக்கான் பணியாளர்கள் வத்திக்கான் பணியாளர்கள்   (VATICAN MEDIA Divisione Foto)

வத்திக்கான் பணியாளர்களுக்கான விடுப்பு, நிதி உதவியில் மாற்றம்

பொருளாதாரத்திற்கான செயலகத்தின் தலைவரால் கையொப்பமிடப்பட்டு, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆணையானது, வத்திக்கான் பணியாளர்கள் பெறும் நிதி உதவி மற்றும் விடுப்புக்கள் பற்றி எடுத்துரைக்கிறது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

வத்திக்கானில் பணிபுரியும் பெற்றோருக்கான பாதுகாப்புகளையும் உரிமைகளையும் விரிவுபடுத்தி பெற்றோர்வழி விடுப்பு, குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கான உரிமைகள், கடுமையான ஊனமுற்ற சூழ்நிலைகளில் இருக்கும் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் நிதி உதவி, கல்வி உதவி போன்றவற்றில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

குடும்ப நலன்கள் மற்றும் குடும்பங்களுக்கான நிதி உதவிகளை வழங்குவதை நிர்வகிக்கும் விதிகள் குறித்த ஒருங்கிணைந்த சட்டத்தின் சில பத்திகளைத் திருத்தி அமைத்து ஆகஸ்டு 11, திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கு மாதத்திற்கு மூன்று நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கு உரிமை உண்டு என்றும், இயலாமை மற்றும் நோயின் தீவிரம் குறித்த மருத்துவ மதிப்பீடு பரிசீலனை செய்யப்பட்டு விடுப்பு அளிக்கப்படுகின்றது என்றும் அவ்வாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப உதவித்தொகைகளைப் பொறுத்தவரை, வத்திக்கான் பணியாளர்களின் 18 வயதுக்கு மேற்பட்ட சட்டபூர்வமான குழந்தைகள், மாணவர்களாக இருந்தால் 26 வயது வரை அவர்களது பல்கலைக்கழகச் சான்றுதல்களின் உறுதியின்படி நிதி உதவியினைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்திற்கான செயலகத்தின் தலைவரால் கையொப்பமிடப்பட்டு, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஆணையானது, வத்திக்கான் பணியாளர்கள் பெறும் நிதி உதவி மற்றும் விடுப்புக்கள் பற்றி எடுத்துரைக்கிறது.

குழந்தை பிறந்தவுடன் வத்திக்கான் ஊழியர்களுக்கு ஐந்து நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு; மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் பெற்றோருக்கு மாதத்திற்கு மூன்று நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஆகஸ்ட் 2025, 13:00