ஒருவர் மற்றவரிடத்தில் கடவுளின் சாயலைக் காண வேண்டும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இயற்கையின் அழகானது கடவுளது படைப்பின் அழகை நமக்கு நினைவூட்டும் வேளையில், கடவுளின் படைப்புக்களில் மிகச்சிறந்த படைப்பாக, அவரது சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களாகிய நாம் இருக்கின்றோம் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது என்றும், நாம் அனைவரும் ஒருவர் மற்றவரிடத்தில் கடவுளின் அச்சாயலைக் காண வேண்டும் என்றும் நினைவூட்டினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்டு 17, ஞாயிறன்று மறைமாவட்ட காரித்தாஸ் பணியாளர்கள் மற்றும் ஏழைகளுடன் மதிய விருந்தில் பங்கேற்ற திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், உணவு விருந்திற்கு முன்னதாக ஆற்றிய உரையில் இவ்வாறு எடுத்துரைத்தார்.
கடவுளது பிரசன்னைத்தை உடனிருப்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த மதிய உணவு விருந்தில் ஒன்றாகக் கூடியிருக்கும் நாம் அனைவரும், ஒன்றிணைந்து வாழவும், ஒன்றிப்புடன் வாழவும் உடன்பிறந்த உணர்வுடன் வாழவும் அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
அப்பத்தைப் பிட்டு சீடர்களுக்கு அதைப் பகிர்ந்தளித்த இயேசு, ஒன்றிணைந்து அவர்களுடன் உணவருந்தியபோது தனது செயல்களின் வாயிலாகத் தன்னை அடையாளப்படுத்தினார் என்றும், அவர் நமக்கு அளித்த அந்த ஒன்றிப்பின் கொடையை நாமும் பிறருடன் பகிர்ந்து கொள்ள திருப்பலி வாயிலாக அழைப்புவிடுக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.
திருப்பலியின் வாயிலாக நாம் அனைவரும் கடவுளின் மக்கள், அவரது சாயலாகப் படைக்கப்பட்டவர்கள், அவர் தம் அன்புப் பிள்ளைகள் என்பதை உணர்கின்றோம் என்றும், அப்பத்தைப் பகிர்ந்து ஒன்றிப்பினை வெளிப்படுத்துகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
மதிய உணவினை சமைத்தவர்கள், அதற்காகப் பணியாற்றியவர்கள் அனைவரையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்க அருள்வேண்டி செபித்த திருத்தந்தை அவர்கள், உணவினை ஆசீர்வதித்து அதனை மகிழ்வுடன் அனைவரும் உண்ண வேண்டி செபித்தார்.
மதிய உணவு விருந்து நிகழ்விற்காகப் பல்வேறு வகைகளில் உழைத்த, உதவிகள் செய்த அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், ஏழைகளுடனான இந்த மதிய உணவு விருந்தினை, நனவாக்க பெரிதும் உதவிய, போர்கோ லௌதாதோசி குழுவினருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார்.
மதிய உணவின் நிறைவில் கடவுளுக்கும் கூடியிருந்த அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்து செபித்த திருத்தந்தை அவர்கள், எப்போதும் உண்மையான பிறரன்புச் செயல்களைச் செய்து வாழவும், கடவுளது அன்பில் ஒன்றுபட்டு, ஒருவருக்கொருவர் உதவி செய்யவும், குடும்பத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பவர்களைத் தேடவும் ஆண்டவரே எங்களுக்கு உதவும், எங்களையும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஆசீர்வதியும் என்று கூறி செபித்தார்.
அதன் பின்னர் அங்கு கூடியிருந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக வாழ்த்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
