தேடுதல்

மதிய விருந்தின்போது ஏழைகளுடன் திருத்தந்தை மதிய விருந்தின்போது ஏழைகளுடன் திருத்தந்தை  (ANSA)

நற்செய்தியின் ஒரு சிறந்த அடையாளம் ஏழைகளுடனான உணவு விருந்து

மதிய விருந்து நடைறும் லௌதாதோசி இல்லமானது வெறும் ஓர் இடமாக மட்டுமல்லாது, தேவையிலிருப்பவர்களுக்கு அதன் கதவுகளைத் திறக்கும் ஒரு நற்செய்தி வாழ்க்கை முறையாகவும் விளங்குகின்றது - கர்தினால் Baggio

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஏழைகளுடனான மதிய உணவு விருந்தானது, நற்கருணை மீதான அன்பு ஒருபோதும் தனக்குள் மூடியதாக இருக்காது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்றும், அது எப்போதும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் உண்மையிலேயே சந்திக்கும் இடமான வறுமை, தனிமை மற்றும் மாண்பிற்கான தேவை உள்ள புறநகர்ப் பகுதிகளை நோக்கி நம்மைத் தள்ளுகிறது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Fabio Baggio

ஆகஸ்டு 17, ஞாயிறன்று லௌதாதோ சி குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அல்பானோ மறைமாவட்ட ஏழைகள் மற்றும் காரித்தாஸ் பணியாளர்களுடனான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் மதிய உணவு விருந்திற்கு முன்னதாக இவ்வாறு எடுத்துரைத்தார் ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டுப் பணிக்கான திருப்பீடத்துறையின் துணைச் செயலாளர் கர்தினால் Fabio Baggio

இயேசுவின் மீதான நமது நம்பிக்கையில் வேரூன்றிய ஒவ்வொரு நபரின் பராமரிப்போடு நமது பொதுவான இல்லமாகிய பூமியின் பராமரிப்பை இணைக்கும் பாதையை திருத்தந்தை உறுதிப்படுத்துகின்றார் என்றும், சமூக நீதி இல்லாமல் உண்மையான சூழலியல் இல்லை என்பதை வலியுறுத்தும் லௌதாதோ சி மற்றும் மற்றும் திருஅவையின் சமூகக் கோட்பாட்டின் சிறந்த பாடமானது, கிறிஸ்தவ பிறரன்புச் செயல்களுக்கான நீதியை நிறைவு செய்து மிஞ்சுகிறது, அதை உறுதியான அன்பாக மாற்றுகிறது என்றும் கூறினார் கர்தினால் Baggio.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறைவாக்குக் கனவு நனவாகும் என்பதன் அடையாளமாக இறைவா உமக்கே புகழ் விளங்குகின்றது என்றும், மதிய விருந்து நடைபெறும் லௌதாதோ சி இல்லமானது வெறும் ஓர் இடமாக மட்டுமல்லாது, தேவையிலிருப்பவர்களுக்கு அதன் கதவுகளைத் திறக்கும் ஒரு நற்செய்தி வாழ்க்கை முறையாகவும் விளங்குகின்றது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Baggio

இது வெறும் உணவு மட்டுமல்ல, இந்த மதிய விருந்தானது நற்செய்தியின் ஒரு சிறந்த அடையாளமாக விளங்குகின்றது என்று வலியுறுத்திய கர்தினால் Baggio அவர்கள், திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றலாக திருஅவையை வழிநடத்தி வரும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பணியேற்றதன் நூறாவது நாளையும் இன்றைய தினம் நினைவுகூர்வதாகவும் எடுத்துரைத்தார்.

இயேசு அப்பத்தைப் பிட்டு, தனது சீடர்களின் கால்களைக் கழுவி, "நான் செய்தது போல் நீங்களும் செய்யுங்கள்" என்று இறுதி இராவுணவின்போது கூறியவற்றை இன்றைய நிகழ்வு அடையாளப்படுத்துகின்றது என்றும், மறக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட ஏழைகளுடனான சந்திப்பில் கடவுளின் பிரசன்னத்தை, முகத்தைக் காண வலியுறுத்துகின்றது என்றும் கூறினார் கர்தினால் Baggio

நற்கருணையில் திருஅவை பிறப்பெடுக்கின்றது, பணியில் அது உயிருடன் வாழ்கின்றது என்பதை தனது உடனிருப்பால் வலியுறுத்தும் திருத்தந்தை அவர்களுக்கு நன்றி கூறிய கர்தினால் Baggio அவர்கள், பிட்கப்படும் அப்பத்தின் அடையாளமாக மாறும் எதிர்நோக்கு, உடன்பிறந்த உணர்வு மற்றும் அன்பின் அடையாளமாக இருப்பதற்குத் தனது நன்றியினையும் தெரிவித்து இது உங்கள் வீடு. நாங்கள் உங்கள் குடும்பம் என்று கூறி தனது உரையினை நிறைவு செய்தார்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஆகஸ்ட் 2025, 14:21