அல்பானோ ஏழைகளுடன் மதிய உணவைப் பகிரும் திருத்தந்தை
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
ஆகஸ்ட் 17, வரும் ஞாயிறன்று, அல்பானோ மறைமாவட்டத்தின் ஏழைகளைச் சந்தித்து திருப்பலி நிறைவேற்றுவதுடன், மூவேளை செப உரைக்குப் பின் அவர்களுடன் மதிய உணவில் திருத்தந்தை பதினான்காம் லியோ கலந்துகொள்வார் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவிற்கு அருகில், அல்பன் மலைகளில் உள்ள சிறிய நகரத்தில் உள்ள புனித மரிய ரொத்தோந்தா ஆலயத்திற்கு திருத்தந்தை பதினான்காம் லியோ வருகை தருவார் என்று திருப்பீடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறைமாவட்ட காரித்தாஸ் அமைப்பின் பணியாளர்கள், திட்டமிட்டபடி அன்று காலை 9:30 மணிக்கு அத்திருப்பலியில் கலந்து கொள்வார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸ்தல் கந்தோல்போவில் உள்ள லிபெர்த்தா வளாகத்தில் மூவேளை ஜெப உரையை வழங்குவார் என்றும், அதைத் தொடர்ந்து அல்பானோ மறைமாவட்டத்தின் போர்கோ லௌதாத்தோசிக்கு வருகை தருவார் என்றும், அங்கு ஏழைகளுடன் மதிய உணவைப் பகிர்ந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை அல்பானோவுக்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், ஏழைகளுடனும், அவர்களை அன்போடும் அக்கறையோடும் தினமும் பராமரிக்கும் மக்களுடனும் மதிய உணவை பகிரும் வாய்ப்பை அவர் ஏற்றுக்கொண்டதிலும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் அல்பானோ மறைமாவட்டத்தின் ஆயர் வின்சென்ஸா விவா தெரிவித்துள்ளார்.
மறைமாவட்டத்திலுள்ள 100 குடும்பங்களையும், காரித்தாஸ் அமைப்பின் வழியாக உதவிபெறுவோர்களையும் திருத்தந்தை சந்திக்க உள்ளதாக மேலும் அம்மறைமாவட்ட அறிக்கை கூறியுள்ளது.
ஏற்கனவே காஸ்தல் கந்தோல்போவில் ஒரு குறுகிய விடுமுறையை கழித்த திருத்தந்தை அவர்கள், ஆகஸ்ட் 15-ஆம் தேதி மீண்டும் திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லத்திற்கு வருகை தருவார் என்றும், ஆகஸ்ட் 17, மூவேளை செப உரைக்குப் பிறகு வத்திக்கான் திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
