திருஅவையின் புதிய மறைவல்லுநராகும் புனித ஜான் ஹென்றி நியூமன்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
19-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இறையியலாளரான புனித ஜான் ஹென்றி நியூமன், புனிதர்பட்ட படிநிலைகளுக்கான திருப்பீடத் துறையின் உறுதியான பரிந்துரையைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் முறையாக திருஅவையின் மறைவல்லுநராக அறிவிக்கப்பட உள்ளார்.
முதலில் ஆங்கிலிகன் திருஅவையின் குருவும் சிறந்த அறிஞருமாக விளங்கிய நியூமன், இத்தாலியில் தனது படிப்பு மற்றும் ஆன்மிகப் பயணங்களால் அகத்தூண்டல் பெற்று, 1845- ஆம் ஆண்டு கத்தோலிக்கத் திருஅவையைத் தழுவிக்கொண்டார்.
தொடக்க கால கிறிஸ்தவத்தின் உண்மையான தொடர்ச்சியாகக் கத்தோலிக்கத் திருஅவையைப் பற்றிய நியூமனின் புரிதலை, கிறிஸ்தவ மறைப் படிப்பினையின் வளர்ச்சி குறித்த அவரது கட்டுரை கோடிட்டுக் காட்டியது.
நியூமன் 1847-ஆம் ஆண்டில் கத்தோலிக்க அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பெற்றார். பின்னர் 1879-ஆம் ஆண்டில், கர்தினாலாக உயர்த்தப்பெற்ற அவர், தனது வாழ்க்கையை மேய்ப்புப் பணி, கல்வி மற்றும் இறையியல் நூல்களை எழுதுவதற்காக அர்ப்பணித்துக் கொண்டார்.
"இறைவா, சுற்றி சூழ்ந்திருக்கும் இருளுக்கு மத்தியில், தயவுகூர்ந்து ஒளி தந்து வழிநடத்தும்" (Lead, Kindly Light, Amid the encircling gloom) என்ற புகழ்பெற்ற பாடலுக்கும், "இதயம் இதயத்துடன் பேசுகிறது" (Cor ad cor loquitur) என்ற அவரது விருதுவாக்கிற்கும் பெயர் பெற்ற நியூமன், குறிப்பாக, திருநற்கருணை வழியாக கிறிஸ்துவுடன் தனிப்பட்ட மற்றும் இறைவேண்டல் உறவை வளர்த்துக்கொள்ள வலியுறுத்தினார்.
2010-ஆம் ஆண்டு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டு, 2019-ஆம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட நியூமன், இறையியல், கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் ஆன்மிக வாழ்வில் நீடித்த செயல் விளைவுகளுக்காக இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
நியூமனின் கல்லறையிலுள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள, "மங்கலானவற்றிலிருந்து மற்றும் தெளிவானவற்றிலிருந்து உண்மைக்குள்" (From shadows and images into the Truth) என்ற வார்த்தைகள், இறை உண்மைக்கான அவரது வாழ்நாள் தேடலைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்ட அவர் இப்போது கத்தோலிக்கத் திருஅவையில் 'மறைவல்லுநர்' என்ற புதிய பட்டத்தால் மேலும் சிறப்பிக்கப்படுகிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
