ஒன்றிப்பின் பணியினைப் புதுப்பிக்கும் அர்ப்பணிப்புள்ளவர்களாக..
மெரினா ராஜ் – வத்திக்கான்
கூட்டொருங்கியக்க ஆயர் மாமன்றத்தின் 60ஆவது ஆண்டு நினைவு நாளானது, திருத்தூதர் பேதுருவின் வழிவரும் ஆயர்கள் தங்களது ஒன்றிப்பை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் வழிவகுக்கின்றது என்றும், திருஅவையின் பணி மற்றும் ஒன்றிப்பின் பணி ஆகியவற்றைப் புதுப்பிக்கும் அர்ப்பணிப்பை ஊக்குவிக்கும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 14, ஞாயிறன்று வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்த மூவேளை செப உரையின் இறுதியில் வழங்கிய செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஆயர் மாமன்றமானது திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களின் உள்ளுணர்வினால் 60 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 15 அன்று உருவானது என்றும் தெரிவித்தார்.
செப்டம்பர் 14 அன்று தனது 70ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில் எல்லாம் வல்ல இறைவனுக்கும் தனது பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இந்நாளில் தன்னை நினைவுகூர்ந்து வாழ்த்தி செபித்த அனைவருக்கும் தனது நன்றியினையும் தெரிவித்தார்.
உரோம் மட்டுமல்லாது இத்தாலியின் பல மறைமாவட்டங்கள், உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், கூடியிருந்த அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்து தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
