நற்செய்தியின் அறிவிப்பாளர்களாக மாற வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அழகு என்பது, தலைமுறைகளை ஒன்றிணைத்து கடவுளைப் போற்றுதலில் தொடர்பு கொள்ள வைக்கின்ற விலைமதிப்பற்ற கனி என்றும், இத்தகைய இயற்கை அழகால் சூழப்பட்டிருக்கும் உம்பிரியா மறைமாவட்ட மக்கள் அனைவரும் நற்செய்தியின் அறிவிப்பாளர்களாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 13, சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் மத்திய இத்தாலியின் உம்ப்ரியா மறைமாவட்ட மக்கள் ஏறக்குறைய 6000 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இயற்கை அழகின் வழியாகக் கடவுள் நம்மிடம் பேச நாம் அனுமதிக்க வேண்டும் என்றும், நன்றியுணர்வு, ஒன்றிப்பு, பராமரிப்பு, வியப்பு, அன்பு மற்றும் அமைதியின் மறைப்பணியாளர்களாக இருக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார் திருத்தந்தை.
யூபிலி ஆண்டில் உரோமிற்கு வந்து புனித கதவு வழியாக ஆலயத்திற்குள் நுழைந்திருக்கும் மக்கள் எல்லாரும், மனமாற்றம் மற்றும் புதுப்பித்தலின் அடையாளமாகத் திகழ்கின்றார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், புனித கதவை நோக்கிய பாதையானது புதிய வாழ்க்கைக்கான பாதையை சுட்டிக்காட்டுகின்றது என்றும் கூறினார்.
இத்தாலியின் பசுமையான, செழிப்பான இதயம் போன்று விளங்கும் உம்பிரியா மறைமாவட்டத்தின் பகுதியானது பல புனிதர்களை உருவாக்கிய நிலப்பகுதி என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அனைத்து மக்களையும் ஒரே இடத்தில் ஒன்றிணைத்து பார்ப்பது கிறிஸ்துவின் திருஉடலின் உறுப்புக்களின் அழகைக் காண்பது போல் உள்ளது என்றும் கூறினார்.
இறைவனின் படைப்பு மனிதனின் கைவேலைப்பாட்டுடன் கலக்கும் இடமாகவும், கலை மற்றும் இயற்கை ஒன்றையொன்று பிரதிபலிக்கும் இடமாகவும் உம்பிரியா பகுதி விளங்குகின்றது என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், மறைபொருள்வாதிகள் மற்றும் மனமாற்றம் பெற்றவர்கள், கவிஞர்கள், இறையியலாளர்கள், ஆழத்தை ஏற்படுத்துவர்கள், நம்பிக்கை மற்றும் துணிவு நிறைந்த பெண்கள், உற்சாகமான இளைஞர்கள் என பலரை அப்பகுதி திருஅவைக்கும் உலகத்திற்கும் வழங்கியுள்ளது என்றும் கூறினார்.
அந்நிலத்தின் ஆன்மிக நதியின் செழிப்பில் உத்வேகம் பெற்று சிறந்தவர், ஆற்றல் பெற்றவர் அண்மையில் திருஅவையில் புனிதராக உயர்த்தப்பட்ட இளம்புனிதர் கார்லோ அகுதீஸ் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நாம் பெற்றுள்ள ஆன்மிகப் புதையலானது நாம் தொடர்ந்து வளர நமக்கு வலியுறுத்துகின்றது என்றும், நாம் கொடியாக வளர்ந்து பூத்துக் காய்த்துக் கனிதர வேண்டும் என்றும், நல்ல புளிக்காரமாக மாறி நற்செய்தியின் சுவையை நறுமணத்தைப் பரப்புபவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
"நாம் வாழும் இந்த உலகம் விரக்தியில் மூழ்காமல் இருக்க அழகு தேவை" என்ற திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களின் கருத்துக்களை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள், படைப்பின் அழகு கடவுளைப்பற்றி நம்மிடம் எடுத்துரைக்கட்டும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
