70-ஆவது பிறந்த நாள் காணும் திருத்தந்தைக்கு வாழ்த்துகள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
செப்டம்பர் 14, ஞாயிறன்று தனது 70ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு உலகமெங்கும் உள்ள நாட்டின் தலைவர்கள் மற்றும் தங்களது வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.
மே 18 முதல் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏறக்குறைய நான்கு மாதங்களை நிறைவு செய்த திருத்தந்தை அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு, திருத்தந்தையின் இளமைப்பருவம் முதல் தலைமைத்துவக் காலத்தின் நிகழ்வுகளை சுட்டிக்காட்டும் வகையில் காணொளி ஒன்றினை வத்திக்கான் ஊடகமானது தயாரித்து வெளியிட்டுள்ளது.
திருத்தந்தையின் ஆன்மிக மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வுக்கான உண்மையான வாழ்த்துக்களுடன், போர் நிறுத்தம் மற்றும் மக்களின் பொது நலனுக்காக, உரையாடல் பாதைக்குத் திரும்புவதற்கான திருத்தந்தையின் அழுத்தமான ஆழமான வேண்டுகோள்களை சுட்டிக்காட்டி தனது வாழ்த்துக்களை இத்தாலிய மக்களின் சார்பாக தெரிவித்துள்ளார் இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா.
"சூழ்நிலைகள் மேம்படுவதை உறுதி செய்வதற்கும், உரையாடல், நீதி மற்றும் ஒவ்வொரு நபரின் மாண்பின் உறுதியான பாதுகாப்பை மீண்டும் திறப்பதற்கும்" தங்களை அர்ப்பணித்துக் கொள்வது அனைவருக்கும், குறிப்பாக பதவியில் இருப்பவர்களுக்கும்" உள்ளது என்பதை வலியுறுத்துபவர் திருத்தந்தை பதினான்காம் லியோ என்றும் தெரிவித்துள்ளார் மத்தரெல்லா.
உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமல்லாது இத்தாலிய ஆயர் பேரவை, ஜெர்மன் ஆயர் பேரவை, உரோம் மறைமாவட்ட ஆயர் பேரவையினர் தங்களது வாழ்த்துக்களைத் திருத்தந்தைக்குத் தெரிவித்தனர்.
உரோமில் உள்ள குழந்தை இயேசு மருத்துவமனையில் இருக்கும் சிறார் தங்களது வாழ்த்துக்களை ஓவியங்களாகவும் வார்த்தைகளாகவும் வடித்து திருத்தந்தையை வாழ்த்தினர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
