தேடுதல்

La Civiltà Cattolica இதழ் நிறுவனத்தைச் சார்ந்தவர்களுடன் திருத்தந்தை La Civiltà Cattolica இதழ் நிறுவனத்தைச் சார்ந்தவர்களுடன் திருத்தந்தை   (ANSA)

La Civiltà Cattolica திருப்பீடச் சார்பு இதழின் 175-ஆம் ஆண்டு

அறிவாற்றலுடன் சுறுசுறுப்புடனும் உலகில் ஈடுபட மக்களுக்குக் கற்பித்தல், கடைநிலையில் இருக்கும் மக்களின் குரலாக இருத்தல் மற்றும் எதிர்நோக்கின் அறிவிப்பாளர்களாக இருத்தல் என்னும் மூன்று சிறப்பியல்புகளைக் கொண்டு La Civiltà Cattolica என்னும் திருப்பீடச் சார்பு இதழானது தனித்தன்மையுடன் திகழ்கின்றது - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

உலகின் சாளரமாக விளங்கும் கத்தோலிக்க இதழானது அதன் திறந்த தன்மைக்கு அடையாளமாக விளங்குகின்றது என்றும், தற்போதைய நிகழ்வுகளை அவற்றின் சவால்கள் மற்றும் முரண்பாடுகளை எதிர்கொள்ளும் அச்சமின்றி அணுகும் திறனைக்கொண்டு செயல்படுகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 25, வியாழனன்று வத்திக்கான் கொன்சிஸ்தோரோ அறையில் இயேசு சபையினரால் நடத்தப்படும் திருப்பீடச் சார்பு இதழான La Civiltà Cattolica என்னும் இதழ் அலுவலக உறுப்பினர்கள் ஏறக்குறைய 40 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், அந்நிறுவனம் தொடங்கப்பட்ட 175ஆவது ஆண்டிற்கான தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.  

கடந்த 175 ஆண்டுகளாக  திருஅவைக்கு செய்து வரும் உண்மையுள்ள தாராளமான பணிக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை அவர்கள், திருத்தந்தையின் மறையுரைகள், திருப்பீடத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, கலாச்சார உலகில் திருஅவையை நிலைநிறுத்துவதற்கு இதுவரை ஆற்றியுள்ள பணிக்காகவும் தொடர்ந்து பங்களித்து வருவதற்காகவும் தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

அறிவாற்றலுடன் சுறுசுறுப்புடன் உலகில் ஈடுபட மக்களுக்குக் கற்பித்தல், கடைநிலையில் இருக்கும் மக்களின் குரலாக இருத்தல் மற்றும் எதிர்நோக்கின் அறிவிப்பாளர்களாக இருத்தல் என்னும் மூன்று சிறப்பியல்புகளைக் கொண்டு La Civiltà Cattolica என்னும் திருப்பீடச் சார்பு இதழானது தனித்தன்மையுடன் திகழ்கின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அறிவாற்றல் சுறுசுறுப்புடன் உலகில் ஈடுபட மக்களுக்குக் கற்பித்தல்

நாம் வாழும் சிக்கலான சமூகத்தை வாசகர்கள் நன்கு புரிந்துகொள்ளவும், அதன் ஆற்றல் மற்றும் பலவீனங்களை மதிப்பிடவும், நமது கவனத்தை ஈர்த்த இரண்டாம் வத்திக்கான் சங்கம் வலியுறுத்தும் "காலத்தின் அறிகுறிகளை" தேடவும் இவ்விதழ் உதவுகின்றது என்றும், சமூக நீதி, குடும்பம், கல்வி, புதிய தொழில்நுட்ப சவால்கள், அமைதி போன்ற அடிப்படைப் பிரச்சனைகளில் மதிப்புமிக்க பங்களிப்புகளைச் செய்து உதவுகின்றது என்றும் தெரிவித்தார்.

கட்டுரைகள் வழியாக, வாசகர்களுக்கு பயனுள்ள விளக்கக் கருவிகள் மற்றும் செயல்பாட்டிற்கான அளவுகோல்களை வழங்கலாம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இதன் வழியாக அனைவரும் உண்மை, சுதந்திரம், மிகவும் நீதியான மற்றும் சகோதரத்துவ உலகத்தை உருவாக்க பங்களிக்க முடியும் என்றும் கூறினார்.

குரலற்றவர்களுக்குக் குரலாக இருத்தல்

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் எளியவர்களின் குரலாக இருப்பது ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்க்கை மற்றும் பணியின் அடிப்படை அம்சம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், செவிசாய்க்கவும், துன்பப்படுபவர்களுக்கு அருகில் இருக்கவும், அவர்களின் அமைதியான அழுகையில் ​​“தாகமாயிருக்கின்றேன்" என்ற சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் குரலை அடையாளம் காணவும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

துன்புறுபவர்களை இயேசுவாக அங்கீகரித்து அவர்களுக்கு செவிசாய்ப்பதன் வழியாக, தேவையிலிருப்பவர்களின் குரலின் உண்மையுள்ள மற்றும் நம்பிக்கையின் எதிரொலியாக இருக்க முடியும் என்றும், தனிமை, தனித்துவிடப்படுதல், துயரக்குரலுக்கு செவிசாய்க்காதிருத்தல் ஆகியவற்றின் ஒவ்வொரு வட்டத்தையும் நம்மால் உடைக்க முடியும் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

எதிர்நோக்கின் அறிவிப்பாளர்களாக

எதிர்நோக்கின் அறிவிப்பாளர்களாக இருப்பது என்பது, மற்றவர்களிடம் உணர்ச்சியற்றவர்களாக எதிர்காலத்திற்கான அவர்களது குரல் மற்றும் நியாயமான தேவைகளை அலட்சியம் செய்பவர்களை எதிர்ப்பது என்றும், அத்துடன் புதிய பாதைகளில் இறங்குவதற்கான சாத்தியக்கூறுகளில் நம்பிக்கை இல்லாதவர்களின் ஏமாற்றத்தை வெல்வது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்துவே, நமது வழி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, இறுதி நம்பிக்கையாகக் கொண்டு அவரை எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், நற்செய்தியின் மதிப்பீடுகளை மட்டுமே மையப்படுத்தி, அனைத்து மக்களின் குரல்களையும் கேட்டு, இதயத்திற்கு நன்மை செய்யும் இந்த நல்ல பத்திரிகை வழியாக, உங்கள் பணியை மகிழ்ச்சியுடன் தொடர நான் உங்களை ஊக்குவிக்கிறேன்” என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரிகளை மேற்கோளிட்டு வாழ்த்தினார்.

  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 செப்டம்பர் 2025, 16:43