தேடுதல்

புனித அகுஸ்தீன் சபையாருடன் திருத்தந்தை பதினான்காம் லியோ புனித அகுஸ்தீன் சபையாருடன் திருத்தந்தை பதினான்காம் லியோ   (@Vatican Media)

ஒன்றிணைந்து செபிக்க, சிந்திப்பதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பு

இறைவனின் இரக்கம் ஒவ்வொருவரின் எண்ணங்களையும் செயல்களையும் ஊக்குவித்து திருத்தூதர்களாகவும் நற்செய்தியின் சான்றுகளாகவும் மாற்றட்டும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

சபையின் பொதுப்பேரவை என்பது நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செபிக்கவும், நாம் பெற்றுக்கொண்ட கொடைகளைப் பற்றி சிந்திக்கவும், சபையின் தனிவரம், நமது சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றியும் சிந்திப்பதற்கான ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பு என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 15, திங்களன்று உரோமில் உள்ள அகுஸ்தீனியானும்  என்னுமிடத்தில் அச்சபையினரின் பொதுப்பேரவையில் பங்கேற்கும் உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் புனித அகுஸ்தீன் சபையின் புதிய சபைத்தலைவருக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

“உங்களுக்குள்ளிருந்து வெளியே செல்லாதீர்கள், உங்களிடமே திரும்புங்கள்: உண்மை மனிதனுக்குள் வாழ்கிறது" என்ற புனித அகுஸ்தினாரின் வார்த்தைகளுக்கேற்ப வாழ வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், உள்ளார்ந்த நிலை என்பது நமது பணிக்கான உந்துதல் மற்றும் உற்சாகம் பெறுவதற்காக நமக்குள் நாமே செல்லும் நிலை என்றும் தெரிவித்தார்.

அழைத்தல் மற்றும் தொடக்க உருவாக்கம், இறையியல் கல்வி மற்றும் உள்ளார்ந்த உருவாக்கம், குழுவாழ்வு மற்றும் மறைத்தூதுப்பணிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வாழ வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், 1533-ஆம் ஆண்டு முதன்முதலில் அகுஸ்தினார் சபையினர் உலகமெங்கும் மறைப்பணியாற்ற துவங்கினர் என்றும் எடுத்துரைத்தார்.  

உடன்பிறந்த உணர்வின் மகிழ்ச்சியிலும், ஆவியின் ஆலோசனைகளைப் பெறுவதற்குத் திறந்த இதயங்களுடனும் பொதுப்பேரவையின் பணியைத் தொடர்வதற்கு அச்சபையாரை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இறைவனின் இரக்கம் ஒவ்வொருவரின் எண்ணங்களையும் செயல்களையும் ஊக்குவித்து திருத்தூதர்களாகவும் நற்செய்தியின் சான்றுகளாகவும் மாற்றட்டும் என்றும் கூறினார்.

இறையழைத்தல் மற்றும் உருவாக்கம் என்பது முன்பே நிறுவப்பட்ட எதார்த்தங்கள் அல்ல: அவை ஒரு நபரின் முழு வரலாற்றையும் உள்ளடக்கிய ஒரு ஆன்மிக வியத்தகு செயல் என்றும், இது முதன்மையாக கடவுளுடனான அன்பின் வியத்தகு செயல் என்றும் தெரிவித்தார்.

அகுஸ்தீன் தனது ஆன்மிக தேடலின் மையத்தில் வைத்த அன்பு, இறையியல் ஆய்வு மற்றும் அறிவுசார் உருவாக்கத்தின் பரிமாணத்திற்கான ஓர் அடிப்படை அளவுகோல் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இறைவனின் மகத்துவத்தால் நம்மை வியப்பில் ஆழ்த்த அனுமதித்தல், நம்மை நாமே கேள்விக்குள்ளாக்குதல், படைப்பாளரின் அடிச்சுவடுகளைக் கண்டறிய நடக்கும் விடயங்களின் அர்த்தத்தை கேள்விக்குள்ளாதல், எல்லாவற்றிற்கும் மேலாக அவரை அன்பு செய்தல், அவர் நம்மை அன்பு செய்ய வைத்தல் ஆகியவை குறித்தும் எடுத்துரைத்தார்.

நமது சமூக வாழ்க்கை, மறைத்தூதுப்பணி செயல்பாடு போன்றவற்றை முழுமையாக வாழவும், நமது பொருள்கள், மனித மற்றும் ஆன்மிகக் கொடைகளைப் பகிர்ந்து கொள்ளவும் விரும்பினால், இறை இரக்கத்தின் விவரிக்க முடியாத கொடையை நாம் கவனிக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 செப்டம்பர் 2025, 14:05