நமது செல்வங்கள் இறைவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட கொடை
மெரினா ராஜ் - வத்திக்கான்
நாம் நம் வாழ்க்கையின் எஜமானர்கள் அல்ல, நாம் அனுபவிக்கும் பொருட்களின் எஜமானர்கள் அல்ல என்றும், எல்லாவற்றையும் நமது கவனிப்பு, சுதந்திரம் மற்றும் பொறுப்பில் ஒப்படைத்த இறைவனால் நமக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 21, ஞாயிறு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர் உவமை பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இன்றைய நற்செய்தியில் நாம் கேட்கும் உவமையானது நமது பொருள் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவது பற்றியும், பொதுவாக, நமது வாழ்க்கையையே மிகவும் விலைமதிப்பற்றதாக மாற்றும் நன்மையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றியும் சிந்திக்க வைக்கிறது என்று கூறினார் திருத்தந்தை.
இறைவனிடம் இருந்து கொடையாக அனைத்தையும் பெற்றுக்கொண்ட நாம், ஒருநாள் நமது உடைமைகள் மற்றும் பூமியின் வளங்கள் அனைத்தையும் கடவுள் மற்றும் மனிதகுலம் இருவரின் முன்பாகவும், சமூகத்தின் முன்பாகவும், குறிப்பாக நமக்குப் பின் வருபவர்களின் முன்பாகவும் எவ்வாறு அதனை நிர்வகித்தோம் என்பதற்கான கணக்கைக் கொடுக்க அழைக்கப்படுவோம் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
“நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்” என்று வலியுறுத்தும் இயேசு போல நாமும் வாழவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அதுவரை தனது சொந்த இலாபத்தை மட்டுமே தேடிக்கொண்டிருந்த வீட்டுப்பொறுப்பாளர் கணக்குக் க்கொடுக்கவேண்டிய நாள் வந்தபோது எதிர்காலத்தைப் பாதுகாக்க தனது செல்வத்தை இழக்க தயாராக இருந்தார் என்றும் கூறினார்.
கடினமான சூழ்நிலையில், இந்த உலகத்தின் செல்வங்கள் கடந்து செல்கின்றன என்பதால், பொருள் குவிப்பு மிக உயர்ந்த மதிப்பு அல்ல என்பதை வீர்ருப்பொறுப்பாளர் உணர்கிறார் என்றும், கடன்பெற்றவர்களை அழைத்து அவர்களது கடனை இரத்து செய்தததன் வழியாக ஆபத்துக் காலத்தில் அவருக்கு உதவவும், அவரை ஆதரிக்கவும் தயாராக இருக்கும் நண்பர்களைப் பெறுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
உலகத்தின் நேர்மையற்ற செல்வத்தை நிர்வகிக்கும் வீட்டுப்பொறுப்பாளரே, தனது சொந்த சுயநலத்தை விட்டுவிட்டு, நண்பர்களை உருவாக்க ஒரு வழியைக் கண்டுபிடித்து அதில் வெற்றி பெறுகிறார் எனில், நற்செய்தியின் வெளிச்சத்தில் வாழும் சீடர்களாகிய நாம், இந்த உலகத்தின் பொருட்களையும், நம் வாழ்க்கையையும், உண்மையான செல்வமான கடவுளுடனும் நம் சகோதர சகோதரிகளுடனும் நட்புடன் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.
போட்டி, மனக்கசப்பு, தன்னலம், பேராசை போன்றவற்றை ஏற்படுத்தும் உலக செல்வத்தை விடுத்து அதற்கு பதிலாக, நம்மிடம் உள்ள அனைத்தையும் கடவுளிடமிருந்து கிடைத்த கொடையாக, நிர்வகிக்கப்பட்டு பகிர்ந்து கொள்வதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தவும், நட்பு மற்றும் ஒற்றுமையின் வலைப்பின்னல்களை உருவாக்கவும், பொது நன்மைக்காக உழைக்கவும், நீதியான, சமத்துவமான மற்றும் சகோதரத்துவமான ஒரு உலகத்தை உருவாக்கவும் வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்