ஒன்றிப்பின் கொடைக்கு சான்றாக இருக்க வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒவ்வொரு நபரையும் இரக்கம், மென்மை, அரவணைப்பு என்னும் கிறிஸ்துவின் அன்பான பார்வை கொண்டு காண வேண்டும் என்றும், மறையுரை தியானங்கள், ஆன்மிக உடனிருப்பு, திருஅவைப் பணி, இளையோர் கல்வி வழியாக சமூகங்களில் தொண்டுப்பிணைப்பு மற்றும் ஒன்றிப்பின் கொடைக்கு சான்றாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 9, செவ்வாய் முதல் 26 வெள்ளிக்கிழமை வரை இந்தோனேசியாவின் மலாங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கார்மலேட் சபை பொதுப்பேரவையை முன்னிட்டு சபைத்தலைவர் அருள்பணி Míċeál O'Neill அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
°நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். எனவே, நாம் எதிர்நோக்கியிருப்பதைப் பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக” (எபிரேயர் 10:23) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்கேற்ப, நடைபெறும் இப்பொதுப்பேரவையானது ஆன்மிக புதுப்பித்தலுக்கான ஒரு சந்தர்ப்பமாக இருக்கும் என்றும் அச்செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
நமது ஆன்மிக உடன்பிறந்த உணர்வு அதன் பணியினை தேர்ந்து தெளிகின்றது என்ற கருப்பொருளானது கார்மலேட் சபை சகோதரர்களின் வாழ்வினையும் தனிவரத்தையும் பிரதிபலிக்கின்றது என்றும், அவர்களின் பொதுவான செப வாழ்வானது திருஅவைக்கும் உலகிற்கும், பணிக்கும் அடித்தளத்தை எவ்வாறு உருவாக்குகின்றது என்பதை விளக்குகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
அமைதியான செபம் மற்றும் நல்லிணக்கப் பராமரிப்பில் வேரூன்றி, காலத்தின் அறிகுறிகளை, குறிப்பாக ஏழைகளின் கண்ணோட்டத்தின் வழியாக அறிய வேண்டும் என்றும், அன்பின் அமைதியான நிலைத்தன்மையுடன் பதிலளிக்கவும் அனுமதிக்கும் ஓர் அமைதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
பிரிவினை மற்றும் எல்லைப் பிரச்சனைகளால் துண்டு துண்டான சமூகத்தின் பகுதிகளில் கிறிஸ்துவின் மன நிலைகொண்டு வாழ வேண்டும் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், சபையின் பொதுப்பேரவையை கார்மேல் அன்னையின் பரிந்துரையில் ஒப்படைத்து செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
