தேடுதல்

தென்னாப்பிரிக்கா பகுதி ஆயர்கள் தென்னாப்பிரிக்கா பகுதி ஆயர்கள்  

தென்னாப்பிரிக்கா ஆயர் பேரவைக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

சகோதரத்துவ ஒற்றுமையின் பிணைப்புகளால் பலப்படுத்தப்பட்ட தென்னாப்பிரிக்க ஆயர்களின் கூட்டொருங்கியக்கப் பயணம் வளர்ச்சியடைய வாழ்த்தியுள்ளார் திருத்தந்தை.

மெரினா ராஜ் - வத்திக்கான்  

தென்னாப்பிரிக்காப் பகுதி ஆயர் பேரவையின் (IMBISA) 16ஆவது முழு நிறையமர்வுக் கூட்டத்திற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

தென்னாப்பிரிக்காப்பகுதி ஆயர் பேரவையின் 16-ஆவது முழு நிறையமர்வுக் கூட்டம் மற்றும் அதன் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தென்னாப்பிரிக்கா ஆயர்கள் சார்பாக ஆகஸ்டு 7 ஆம் நாள் திருத்தந்தைக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் அளித்து செப்டம்பர் 26, வெள்ளியன்று, வாழ்த்துச்செய்தி எழுதியுள்ள திருத்தந்தை அவர்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளாக கிறிஸ்தவ சமூகங்களுக்கு அவர்கள் ஆற்றிய மதிப்புமிக்க பணிக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஆயர் பேரவைப் பகுதி நிறுவனங்களின் பணி, திருஅவையின் நற்செய்திப் பணியில், இறைமக்களின் செயலில் பங்கேற்பைத் தொடர்ந்து அனுமதிக்கும் என்று தான் நம்புவதாகவும், சகோதரத்துவ ஒற்றுமையின் பிணைப்புகளால் பலப்படுத்தப்பட்ட அவர்களின் கூட்டொருங்கியக்கப் பயணம் வளர்ச்சியடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

திருஅவை மற்றும் பரந்த சமூகத்தின் நன்மைக்காக தென்னாப்பிரிக்க ஆயர்கள் உழைக்கும்போது, கடவுளுடைய இரக்கமுள்ள இதயத்திலிருந்து நிலையான ஊட்டச்சத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்காக செபிப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

தென்னாப்பிரிக்கப் பகுதியில் உள்ள ஆயர்கள், அருள்பணியாளார்கள், துறவறத்தார், இறைமக்கள் என ஈஸ்வதினியில் நடைபெறும் யூபிலிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும், தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்து இறைவனில் அமைதி மற்றும் அன்பின் உறுதிமொழியை வழங்கியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 செப்டம்பர் 2025, 15:35