சிறந்த அன்பின் செயலாகக் கருதப்படும் கீழ்ப்படிதல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
கீழ்ப்படிதல் என்பது மற்றவர்களுக்குச் சுறுசுறுப்பாகவும் தாராளமாகவும் செவிசாய்ப்பது என்ற அதன் ஆழமான அர்த்தத்தில், ஒரு சிறந்த அன்பின் செயலாகக் கருதப்படுகின்றது என்றும், இதன் மூலம் நம் சகோதர சகோதரிகள் வளர்ந்து வாழ முடியும் என்பதற்காக நாம் நம்மை நாமே இழப்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 18, வியாழனன்று வத்திக்கானில் இவ்வாண்டு தங்களது சபையின் பொதுப்பேரவை மற்றும் மன்றங்களை சிறப்பிக்கும் துறவற சபையாரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
துறவற வாழ்வு, கீழ்ப்படிதல், காலத்தின் அறிகுறிக்கேற்ற பணி என்ற தலைப்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை அவர்கள், துறவற சபையினர் நடத்தும் பொதுப்பேரவைகள், திருஅவையின் சிறந்த கொடை ஒரு பெரிய பொறுப்பு என்றும் அதனை இறைவனிடத்தில் ஒப்படைத்து நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
துறவற நிறுவனங்கள் ஓர் "அற்புதமான மற்றும் மாறுபட்ட சான்றுகளாகத் திகழ்கின்றன, தூயஆவியாரின் செயல்பாட்டிற்கு திறந்த மனதுடன், காலத்தின் அடையாளங்களை வெற்றிகரமாக விளக்கி, புதிய தேவைகளுக்கு புத்திசாலித்தனமாக பதிலளித்த நிறுவனர்கள் மற்றும் நிறுவனர்களுக்கு கடவுள் வழங்கிய பல கொடைகளை அவைகள் பிரதிபலிக்கின்றன என்ற திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் வரிகளையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
துறவற சபையின் நிறுவனர்கள் ஆற்றிய பணிகளைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய திருத்தந்தை அவர்கள், பதினேழாம் நூற்றாண்டில், இளம் பெண்களுக்கான உருவாக்கத்தின் மதிப்பை சமூகம் எப்போதும் முழுமையாக அங்கீகரிக்காதபோது, பிரிஜிடா டி கெசு மோரெல்லோ அவர்கள், எதிர்காலத்தில் அதிக பலனைத் தரும் பெண்களின் மாண்பினை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியைத் தொடங்கினார் என்றும் எடுத்துரைத்தார்.
புனித காஸ்பேர் டெல் புஃபாலோ, கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தின் பக்தியைப் பரப்புவதன் வழியாக, தனது காலத்தை பாதித்த "துறவு மற்றும் மதச்சார்பின்மை" என்ற பரவலான மனப்பான்மையை எதிர்ப்பதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என்றும், பிரான்ஸ் அருள்பணியாளர் ஜீன்-கிளாட் கோலின், நாசரேத்தின் மரியாவின் தாழ்ச்சி, பணிவு மற்றும் விவேகத்தின் மனப்பான்மையால் ஈர்க்கப்பட்டு பணியாற்றினார் என்றும் கூறினார் திருத்தந்தை.
துறவற வாழ்வில் சமூக வாழ்க்கையின் முக்கியத்துவம் தூய்மைப்படுத்தலுக்கான இடமாகவும், மறைபரப்பு ஆர்வம் மற்றும் ஆற்றலின் அடிப்படையாகவும் உள்ளது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒரு தனிநபரில் செயல்படும் தூய ஆவியாரின் ஆற்றல், ஒரே நேரத்தில் அனைவருக்கும் செல்கின்றது என்றும் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
