எல்லைகளைத் திறக்கும் ஞானம் பெற்றது இறையியல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இறையியல் என்பது அறிவியல், தத்துவம், கலை மற்றும் அனைத்து மனித அனுபவங்களுடனும் உரையாடி, இருத்தலியல் எல்லைகளைத் திறக்கும் ஞானம் என்றும், இறையியலாளர் என்பவர், தனது சொந்த இறையியலில், நம்பிக்கையின் "அறிவு" மற்றும் "சுவையை" அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற மறைப்பணி ஆர்வத்துடன் வாழும் ஒரு நபர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 13, சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் திருப்பீட இறையியல் கல்லூரி வழிநடத்தும் கருத்தரங்கின் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 130 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இறையியலாளர்களின் பணி அவர்களின் இருப்பை ஒளிரச் செய்கின்றது என்றும், பலவீனமானவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கின்றது என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், துன்புறும் ஏழைகளைத் தொட்டு குணப்படுத்தவும், உடன்பிறந்த உணர்வு மற்றும் ஆதரவான உலகத்தை உருவாக்கவும் இறையியல் பணி உதவலாம் என்றும் எடுத்துரைத்தார்.
கடவுளுடனான சந்திப்பிற்கு நம்மை இட்டுச் செல்லும் ஒரு வழியாக இறையியல் உள்ளது என்றும், தனிப்பட்ட, சமூக மற்றும் அரசியல் என அனைத்து பரிமாணங்களிலும் மனிதகுலத்திற்கு பணியாற்றும் நம்பிக்கையின் அறிவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சான்று திருஅவையின் சமூகக் கோட்பாடு என்றும் கூறினார் திருத்தந்தை.
இன்றைய மனிதகுலத்தின் உறுதியான நிகழ்வுகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்ட, கிறிஸ்துவுடனான தனிப்பட்ட மற்றும் மாற்றத்தக்க சந்திப்பை அடிப்படையாகக் கொண்ட ஓர் இறையியலை வளர்க்க வேண்டும் என்றும், தத்துவத்தில் மட்டுமல்ல, இயற்பியல், உயிரியல், பொருளாதாரம், சட்டம், இலக்கியம் மற்றும் இசையில் ஈடுபடவும், தங்களையும் பிறரையும் வளப்படுத்தவும் ஊக்கமூட்டினார் திருத்தந்தை.
நற்செய்தியின் புளிக்காரத்தை வெவ்வேறு கலாச்சாரங்களுக்கும் பகிரவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், பிற மத நம்பிக்கையாளர்கள், அவிசுவாசிகள் ஆகியோருடனும் சந்திப்புக்கள் மற்றும் உரையாடல்கள் வழியாகக் கொண்டு செல்லவேண்டும் என்றும் ஊக்கமூட்டினார் திருத்தந்தை.
இறையியல் கல்விக்கழகங்கள் இறையியலாளர்களிடையே சந்திப்பு மற்றும் நட்பின் இடமாகவும், கிறிஸ்துவை நோக்கி நாம் ஒன்றாக நடக்கக்கூடிய ஒற்றுமை மற்றும் பகிர்விற்கான இடமாகவும் மாறும் என்று தான் நம்புவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், செபம், கேட்டல் மற்றும் பகிர்தல் வழியாக, கடவுளின் தவறான உருவங்களை முறியடிக்க உதவுதல் மற்றும் ஆன்மிக வாழ்க்கையை வளர்த்தல் அவற்றின் பணி என்றும் கூறினார்.
கடவுளைப் பற்றிய உண்மையான அறிவு, அன்பினால் மாற்றப்பட்ட வாழ்க்கையில் வடிவம் பெறுகிறது. இறையியலாளர்களிடையே, கடவுளின் முகத்தை ஒன்றாக நடப்பதன் வழியாக மட்டுமே தேட முடியும் என்ற அறிவை கூடுதலாகக் கோருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
