மனித உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது முக்கியமானது
மெரினா ராஜ் - வத்திக்கான்
பல்சமய உரையாடல் என்பது உண்மையானதாகவும் நன்கு வளர்க்கப்பட்டதாகவும் இருக்கும்போது, மத பரிமாணம் ஒருவருக்கொருவர் உறவுகளை பெரிதும் மேம்படுத்தி, சமூகத்தில் வாழ மக்களுக்கு உதவுகின்றது என்றும், மனித உறவுகளின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது இன்று மிக முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 29, திங்கள் கிழமை வத்திக்கானில் பல்சமய மற்றும் கலாச்சார உரையாடலுக்கான செயல்பாட்டுக்குழு உறுப்பினர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலை ஊக்குவிப்பது ஒரு கிறிஸ்தவ அரசியல்வாதிகளுக்கு ஒரு முக்கிய நோக்கம் என்றும், மேலும் இது தொடர்பாக நற்சான்று பகர்ந்தவர்கள் குறைவில்லாமல் இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
உரையாடலில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருப்பது என்பது நற்செய்தியிலும் அதிலிருந்து வரும் மதிப்புகளிலும் நாம் ஆழமாக வேரூன்றி இருப்பதற்கான அடையாளம் என்றும், அதே நேரத்தில், பிற பின்னணியிலிருந்து வருபவர்களுடன் திறந்த மனப்பான்மை, கேட்டல் மற்றும் உரையாடலை வளர்த்தல், எப்போதும் மனித ஆளுமை, மனித மாண்பு, நமது உறவுகள் போன்றவற்றை மையத்தில் வைத்து செயல்படுவது மிகச் சிறந்தது என்றும் கூறினார் திருத்தந்தை.
மதங்களுக்கு இடையேயான உரையாடலில் பங்கேற்பது, அதன் இயல்பால், மதம் தனிப்பட்ட மட்டத்திலும் சமூகத் துறையிலும் மதிப்புமிக்கது என்பதை அங்கீகரிக்கிறது என்றும், மதம் என்ற வார்த்தையே மனிதகுலத்தின் அசல் கூறு என்ற கருத்தை குறிக்கிறது என்றும் தெரிவித்தார்.
ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஆரோக்கியமான மதச்சார்பின்மையை எவ்வாறு வாழ்வது என்பதை அறிந்தவர்கள் தேவை, அதாவது, அரசியல் துறையிலிருந்து பிரிவினை அல்லது குழப்பத்தை அல்ல, மாறாக வேறுபாட்டைப் பாதுகாக்கும் அதே வேளையில் மதத்தின் மதிப்பை உறுதிப்படுத்தும் சிந்தனை மற்றும் செயல்பாட்டு நடைமுறை தேவை என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
குறிப்பாக, ராபர்ட் ஷூமன், கொன்ராட் அடினௌர் மற்றும் அல்சைட் டி காஸ்பெரி ஆகியோரின் உதாரணங்களைக் குறிப்பிடுவது மதிப்பு மிக்கது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உரையாடலை ஊக்குவிப்பதிலும், அனைத்து மக்களிடமும் மரியாதை செலுத்துவதிலும் செய்யும் பணிக்கு நன்றி தெரிவித்து அவர்களுக்கு ஆசீர் வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
