திருஅவையின் மறைவல்லுநராக அறிவிக்கப்பட இருக்கும் புனித ஜான் ஹென்றி நியூமன்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இறையியல் புதுப்பித்தலுக்கும் கிறிஸ்தவ கோட்பாட்டின் வளர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கும் தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய புனித ஜான் ஹென்றி நியூமனுக்கு திருஅவையின் மறைவல்லுநர் என்ற பட்டத்தை வழங்க இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 28, ஞாயிறு வத்திக்கான் வளாகத்தில் நடைபெற்ற திருப்பலியின் நிறைவில் வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், கடவுள் மீது நம்பிக்கை வைத்து மற்றவர்களுடன் ஒற்றுமையைக் காட்ட அனைவரையும் அழைப்பதாகவும், ஒவ்வொரு துன்பத்தையும் சமாளிக்க இறைவன் வலிமையையும் துணிவையும் தர செபிப்பதாகவும் எடுத்துரைத்தார்.
பிலிப்பீன்ஸ், தைவான் தீவு, ஹாங்காங் நகரம், குவாங்டாங் பகுதி மற்றும் வியட்நாமைத் தாக்கியுள்ள சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தனது ஆறுதலையும் செபத்தையும் வழங்குவதாகவும், காணாமல் போனவர்கள், இடம்பெயர்ந்த பல குடும்பங்கள், துன்பங்களை அனுபவித்த எண்ணற்ற மக்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தனது நெருக்கத்தையும் பிரார்த்தனைகளையும் உறுதியளித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நவம்பர் 1 ஆம் தேதி, உலகக் கல்வியாளர்களுக்கான யூபிலியின் போது, இறையியல் புதுப்பித்தலுக்கும் கிறிஸ்தவ கோட்பாட்டின் வளர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கும் தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய புனித ஜான் ஹென்றி நியூமனுக்கு திருஅவையின் மறைவல்லுநர் என்ற பட்டத்தை வழங்க இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.
இறுதியாக கூடியிருந்த மறைக்கல்வியாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், அனைவரையும் கன்னி மரியாவின் பரிந்துரையில் ஒப்படைத்து செபிப்பதாகவும் எடுத்துரைத்தார்.
இயேசுவின் தாயாகவும் முதல் சீடராகவும் இருந்த கன்னி மரியா இன்று நம்பிகையை அறிக்கையிடுவதற்கானத் திருச்சபையின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவாராக. என்று கூறி தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
