தேடுதல்

தேசிய வட்டி எதிர்ப்பு சங்க உறுப்பினர்களுடன் திருத்தந்தை தேசிய வட்டி எதிர்ப்பு சங்க உறுப்பினர்களுடன் திருத்தந்தை   (@Vatican Media)

குடும்பங்களில் நெருக்கடியையும், இதயத்தில் சோர்வையும் ஏற்படுத்தும் வட்டி

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! (எசாயா 58:6)

மெரினா ராஜ் - வத்திக்கான்

மக்களை அடிமைப்படுத்தி நசுக்குபவர்களின் மனப்பான்மை கடவுளிடமிருந்து அதிகதொலைவில் உள்ளது, அது ஒரு பெரிய பாவம், மிகவும் கடுமையானது என்றும், வட்டி குடும்பங்களுக்கு நெருக்கடியைக் கொண்டுவரக்கூடும், அது மனதையும் இதயத்தையும் சோர்வடையச் செய்து தற்கொலையை ஒரே வழி என்று மக்களை நினைக்க வைக்கும் அளவுக்கு சோர்வடையச் செய்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 18, சனிக்கிழமையன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் தேசிய வட்டி எதிர்ப்பு சங்க உறுப்பினர்கள் ஏறக்குறைய 150 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், கடந்த முப்பது ஆண்டுகளாக, பல மக்கள் மற்றும் பல குடும்பங்களின் வாழ்க்கையில் பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பிரச்சினையை எதிர்த்துப் போராட உழைத்து வரும் அவர்களின் அர்ப்பணிப்புள்ள பணிக்கு நன்றி தெரிவித்தார்.

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! (எசாயா 58:6) என்ற எசாயா இறைவாக்கினரின் வரிகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள், விவிலியத்தில் இறைவனும் இறைவாகினர்கள் வழியாக சுரண்டல் மற்றும் ஏழைகளுக்கு ஊறு விளைவிக்கும் இந்த அநீதியைச் சுட்டிக்காட்டுகின்றார் என்றும் கூறினார்.    

வட்டி வாங்குவதை ஊக்கப்படுத்தவும், இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உறுதிபூண்டுள்ளவர்களின் பணி மிகவும் மதிப்புமிக்கது என்றும், யூபிலியின் உணர்வு மற்றும் நடைமுறையுடன் இத்தகையோர்களின் பணி ஒத்துப்போகிறது, எதிர்நோக்கின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

வரி வசூலிப்பவரான சக்கேயு பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை அவர்கள், கிறிஸ்துவுடனான அவரது சந்திப்பு அவரது இதயத்தை மாற்றியது  பின்னர் எல்லாம் மாறியது என்றும், அது நமது மனிதகுலத்தின் அர்த்தத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது என்றும் எடுத்துரைத்தார்.

இலாபத்தைத் தேடுவது அதிகமாகும்போது, ​​மற்றவர்கள் இனி மக்களாக இல்லை, அவர்களுக்கு இனி ஒரு முகம் இல்லை, அவர்கள் சுரண்டப்பட வேண்டிய பொருட்கள் மட்டுமே என்ற எண்ணம் உருவாகின்றது என்றும், அதனால் நாம் நம்மையும் நம் ஆன்மாவையும் இழக்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 அக்டோபர் 2025, 13:32