அமைதிக்காக உழைக்க முதிர்ச்சியும் தன்னலமற்ற தன்மையும் அவசியம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அமைதிக்காக உழைப்பதற்கும், மற்றவரின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும், அனைவரும் செழிக்க அனுமதிக்கும் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதில் ஒத்துழைப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட முதிர்ச்சி மற்றும் தன்னலமற்ற தன்மை தேவை என்றும், அமைதியை அடைவதற்கு மன்னிப்பு அவசியம் என்று இயேசு நமக்குக் கற்பிக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
அக்டோபர் 17, வெள்ளியன்று மாலை உரோமின் ஓஸ்தியா கடற்கரையில் அமைதிப் பயிற்சிக் கப்பலான MED 25 – பெல் எஸ்போயரில் (MED 25 – Bel Espoir) பயிற்சி பெறும் மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஏறக்குறைய 200 இளைஞர்களுடன் மத்தியதரைக் கடலில் எட்டு மாதங்கள் பயணம் செய்து, 30 துறைமுகங்களைப் பார்வையிட்ட பயிற்சிக் கப்பலான பெல் எஸ்போயர், இறுதியாக அதன் பயணத்தின் முடிவை நெருங்குகிறது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், ஒவ்வொரு மாதமும் பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தனித்துவமான இளைஞர் குழுவை ஒன்றிணைத்து, ஒருவருக்கொருவர் இணைவதற்கும், பல்வேறு தலைப்புகளைப் பற்றி விவாதிப்பதற்கும், குழுப் பணிகளில் பங்கேற்பதற்கும் வாய்ப்பளித்துள்ளது என்றும் கூறினார்.
தப்பெண்ணங்கள், வெறுப்புகள் அல்லது கசப்புகளை விட்டுவிட்டு, நம் சொந்த தவறுகளுக்கு மன்னிப்பைப் பெறும்போதுதான், முதலில் நாம் அமைதியின் பரிசைப் பெற முடியும் என்றும் அதன் பின்னரே அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
“அமைதியைக் கட்டியெழுப்புதல்” என்ற கருப்பொருளுக்கு ஏற்றவாறு அமைதியை ஏற்படுத்த உழைப்பவர்களாகவும், உரையாடலை ஊக்குவிக்கவும், பொதுவான குறிக்கோளின் பார்வை மற்றும் வெவ்வேறு மக்களைச் சந்திப்பதன் வழியாக வரும் மகிழ்ச்சிகளைப் பயன்படுத்தவும் இளைஞர்களுக்கு அறிவுறுத்திய திருத்தந்தை அவர்கள், இறுதியாக தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அவர்களுக்கு அளித்து தனது உரையினை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
