நம்பிக்கை அறிக்கையை ஒன்றிணைந்து புதுப்பிக்க உதவும் திருப்பயணம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
யூபிலி திருப்பயணம் என்பது நமது நம்பிக்கை அறிக்கையை ஒன்றாகப் புதுப்பிப்பதற்கும், கிறிஸ்தவ சீடத்துவத்தின் கூட்டு மற்றும் திருஅவையின் பரிமாணத்தை வெளிப்படுத்துவதற்குமான ஓர் அற்புதமான வாய்ப்பு என்றும், மறைமாவட்டங்கள் நம்மை கத்தோலிக்கத்திற்கும், கடவுளின் குழந்தைகள் என்ற முறையில் ஒரே குடும்பமாக உணரவும், சோதனைகளைக் கடந்து, ஒற்றுமையில் வாழவும் அழைக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
அக்டோபர் 11, சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த தொஸ்கானா மறைமாவட்டம் மற்றும் இத்தாலியின் ஏனைய மறைமாவட்டங்களில் இருந்து உரோமிற்கு திருப்பயணிகளாக வந்திருந்த மக்கள் அனைவரையும் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஒவ்வொரு மறைமாவட்டமும் அதன் சொந்த திருஅவை வரலாறு, புவியியல், மேய்ப்புப் பிரிவு வேறுபாடுகளைக் கருத்தில் கொள்வதாலும், உண்மையான சினோடல் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம் என்றும், கேள்விகள் கேட்டல், ஒன்றிணைந்து நடத்தல், பரிசோதனைகளைத் தொடங்குதல், செயல்முறையின் சாத்தியக்கூறுகள் மற்றும் வரம்புகளை முன்னிலைப்படுத்த அமைதியான மற்றும் வெளிப்படையான பகுத்தறிவைத் தொடங்குதல், முன்னேறுவதற்கான நிலைமைகள் உள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்த்தல் அவசியம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
தொஸ்கானா நிலப்பகுதியானது, இடைக்காலம் மற்றும் மறுமலர்ச்சியின் அழியாத தடயங்களைப் பாதுகாக்கின்ற மற்றும் டான்டே அலிகியேரி, லியோனார்டோ டா வின்சி, மைக்கேலேஞ்சலோ புவோனாரோட்டி மற்றும் பல புகழ்பெற்ற நபர்களைப் பெற்றெடுத்த ஒரு அசாதாரண கலாச்சாரம் மற்றும் கலைத் தொட்டிலாகும் என்றும், இது ஒரு வளமான கிறிஸ்தவ வரலாற்றின் வாரிசாக, சியன்னாவின் புனித கேத்தரின், புனித ஜெம்மா கல்கானி மற்றும், அதே போல் ஏராளமான முக்கியமான திருத்தந்தையர்களினாலும், புனிதத்துவ வாழ்வின் விதை முதிர்ச்சியடைந்த பகுதியாக திகழ்கின்றது என்றும் கூறினார்.
மக்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஏழைகளின் வாழ்க்கையைப் பற்றி அக்கறை கொண்ட ஒரு திருஅவையின் முகத்தை வடிவமைக்க வேண்டும் என்று தொஸ்கானா மறைமாவட்டத் திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், சமூகத்தில், வீடுகளில், பணிபுரியும் தொழிற்சாலைகளில், 'மக்கள் மத்தியில் என எல்லா இடங்களிலும் நாம் ஒரே திருஅவையாக இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
