தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ. திருத்தந்தை பதினான்காம் லியோ.  (@Vatican Media)

திருஅவைக்கு ஒருங்கிணைந்த பார்வை தேவை

அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும், இறப்பிலிருந்து வாழ்விற்கும் கடந்து செல்லும் பாஸ்கா கடத்தலை யூபிலி ஆண்டில் நாம் நினைவுகூர வேண்டும் - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

இன்றைய மற்றும் நாளைய திருஅவைக்கு ஒருங்கிணைந்த பார்வை தேவை என்பதை மாணவர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும்,  மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் ஆகியோரின் இரக்கமானது தொலைநோக்குப் பார்வையைப் பெறுவது, கேள்விகளுக்கு அஞ்சாதது, அறிவுசார் சோம்பலை வெல்வது, இதனால் ஆன்மிக பலவீனத்தைத் தோற்கடிப்பது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 27, திங்கள் உரோம் உள்ளூர் நேரம் மாலை 5.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் திருப்பீடப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

யூபிலி ஆண்டைக் கொண்டாடும் நாம் தொடர்ந்து மனம்மாற வேண்டும், எப்போதும் இயேசுவைப் பின்தொடர வேண்டும், அவரைப் பின்தொடர  எந்தவிதமான தயக்கமும் சோதனையும் இன்றி, அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும், இறப்பிலிருந்து வாழ்விற்கும் கடந்து செல்லும் பாஸ்கா கடத்தலை நினைவுகூர வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

ஒரு மாணவன், ஒரு ஆராய்ச்சியாளன், ஒரு அறிஞனின் வாழ்க்கையை எந்த அருள் தொட முடியும்? என்ற கேள்விக்கு, ஒருங்கிணைந்த அருளின் பார்வை, எல்லைகளைக் கடந்து வரவேற்கும் பார்வை, எல்லைகளுக்கு அப்பால் செல்லும் திறன் கொண்ட பார்வை என்று பதிலளித்து தனது மறையுரையினை வழங்கினார் திருத்தந்தை.

நற்செய்தியில் இடம்பெறும் கூன் விழுந்த பெண் பற்றிய நிகழ்வு குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயேசுவால் குணமடைந்து, ஒரு புதிய பார்வையின் அருளைப் பெற்றார் என்றும், ஒரு பெரிய பார்வை, மூடிய மனப்பான்மை, ஆன்மிக மற்றும் அறிவுசார் ஆர்வமின்மையுடன் இணைக்கப்பட்டுள்ள அறியாமையின் நிலையானது இப்பெண்ணின் நிலையை ஒத்திருக்கிறது என்றும் கூறினார்.

மனிதர்கள் தங்கள் சொந்த அனுபவம், சொந்த கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள், தங்கள் சொந்த வடிவங்களைத் தாண்டிப் பார்க்க இயலாதபோது, ​​அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள், அவர்கள் அடிமைகளாகவே இருக்கிறார்கள், தங்கள் சொந்த தீர்ப்பை உருவாக்க அவர்களால் இயலாது என்று கூறிய திருத்தந்தை அவர்கள்,  நற்செய்தியில் உள்ள கூன் விழுந்தப் பெண்ணைப் போலவே, எப்போதும் சுயநல பார்வையின் கைதிகளாக இருப்பது ஆபத்து என்றும் சுட்டிக்காட்டினார்.

வாழ்க்கையில் முக்கியமான பல அடிப்படை விடயங்கள் நமக்கு நாமே கொடுத்துக்கொள்வதில்லை, அவற்றை மற்றவர்களிடமிருந்து பெறுகிறோம், ஆசிரியர்களிடமிருந்தும், சந்திப்புகளிலிருந்தும், வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் அவற்றை வரவேற்கிறோம். இது கடவுளது அருளின் அனுபவம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இயேசுவால் குணமடைந்த பெண் நம்பிக்கையைப் பெறுகிறார், தன் பார்வையை உயர்த்தி வித்தியாசமான ஒன்றைக் காண்கிறார். ஒரு புதிய வழியில் உலகைப் பார்க்கின்றார் என்றும் எடுத்துரைத்தார்.

நம் வாழ்க்கையில் நாம் கிறிஸ்துவை சந்திக்கும் போது இச்செயல் நிகழ்கிறது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய, நம்மை நம்மிடமிருந்து திசைதிருப்பக்கூடிய, நம்மை வெளியே கொண்டு வரக்கூடிய ஒரு உண்மைக்கு நாம் நம்மையேத் திறக்கிறோம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 அக்டோபர் 2025, 18:20