புலம்பெயர்ந்தோர் கடந்து வந்த பாதைகள் மீட்பின் இடங்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
புலம்பெயர்ந்தோர் கடந்து வந்த கடல்களும் பாலைவனங்களும், விவிலியத்தில் மீட்பின் இடங்களாக இருக்கின்றன என்றும், அங்கு கடவுள் தனது மக்களைக் காப்பாற்ற தன்னை வெளிப்படுத்தியது போல மறைப்பணியாளர்களில் கடவுளின் முகத்தைக் காண்பீர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
அக்டோபர் 5, ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற புலம்பெயர்ந்தோர்க்கான யூபிலிசிறப்புத் திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நம்பிக்கையிலிருந்து வரும் வாழ்க்கை மற்றும் மீட்பின் ஒரு புதிய வாய்ப்பானது, நன்மையில் விடாமுயற்சியுடன் தீமையை எதிர்க்க நமக்கு உதவுகின்றது என்றும், கடவுள் இன்று உலகில் கொண்டு வர விரும்பும் மீட்பின் கருவியாக மாறும் அளவுக்கு நம் இருப்பை மாற்றுகிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இயேசு நற்செய்தியில் நமக்கு எடுத்துரைக்கும் ஒரு மென்மையான ஆற்றலாக, நம்பிக்கை விளங்குகின்றது என்றும், ஆற்றலிலும் அசாதாரண வழிகளிலும் தன்னைத் திணித்துக் கொள்ளாது, சிந்திக்க முடியாத காரியங்களைச் செய்ய அது ஒரு கடுகு விதை அளவுள்ள நம்பிக்கையானது, மீட்பிற்கானப் பாதைகளைத் திறந்து கடவுளின் அன்பின் சக்தியை தன்னுள் கொண்டுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.
நாம் தனிப்பட்ட முறையில் நம்மை அர்ப்பணித்து, நற்செய்தியின் இரக்கத்துடன், நம் அண்டை வீட்டாரின் துன்பத்தைக் கவனித்துக் கொள்ளும்போது அம்மீட்பானது நம்மில் உணரப்படும் என்றும், அன்றாட செயல்கள் மற்றும் வார்த்தைகளில் அமைதியாகவும் பயனற்றதாகவும் தோன்றினாலும் இயேசு கூறும் சிறிய விதை போல மாறும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நாம் "பயனற்ற ஊழியர்களாக" மாறும்போது, அதாவது, நமது சொந்த நலன்களைத் தேடாமல், உலகிற்கு கடவுளுடைய அன்பைக் கொண்டுவருவதற்காகவும், நற்செய்தி மற்றும் நம் சகோதர சகோதரிகளின் பணியில் நம்மை ஈடுபடுத்தும்போதும் மெதுவாக நம்மில் மீட்பு வளரும் என்றும் கூறினார் திருத்தந்தை
நம்பிக்கையுடன், நமது மறைப்பணி அழித்தலின் நெருப்பை நம்மில் புதுப்பிக்க அழைக்கப்படுகிறோம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் கூறிய வார்த்தைகளான, "மனித வரலாற்றின் இந்த அசாதாரண காலகட்டத்தில், முன்னோடியில்லாத ஒரு காலத்தில், முன்னோடியில்லாத அளவிலான முன்னேற்றங்கள் குழப்பம் மற்றும் விரக்தியின் ஆழங்களுடன் சேர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நற்செய்தியை அறிவிப்பது நமது பணியாகும்" என்பதையும் மேற்கோளிட்டுக் கூறினார்.
கிறிஸ்துவை அறிவிக்க வெளியே செல்வது பற்றி மட்டுமல்ல மாறாக வரவேற்பு, இரக்கம் மற்றும் ஒன்றிப்பின் வழியாகக் கிறிஸ்துவை அறிவிக்க "தங்குவது" மிக முக்கியம் என்றும், நமது தனித்துவத்தின் ஆறுதலில் தஞ்சம் அடையாமல் இருப்பது, தொலைதூர மற்றும் துன்புறுத்தப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்களின் முகங்களைப் பார்ப்பது, அவர்களுக்கு நம் கரங்களையும் இதயங்களையும் திறப்பது, அவர்களை சகோதர சகோதரிகளாக வரவேற்பது, அவர்களுக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் இருப்பினை வழங்குவது முக்கியம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
மறைப்பணி அழைத்தல் மற்றும் மறைப்பணி ஒத்துழைப்பு மிக அவசியம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், மேற்கத்திய நாடுகளைப் போல, பண்டைய கிறிஸ்தவ பாரம்பரியத்தைக் கொண்ட சமூகங்களில், உலகின் தெற்கிலிருந்து ஏராளமான சகோதர சகோதரிகள் இங்கு வருவது, திருஅவையின் முகத்தைப் புதுப்பிக்கின்ற, மிகவும் திறந்த, உயிருள்ள மற்றும் துடிப்பான கிறிஸ்தவத்தை உருவாக்கும் ஒரு பரிமாற்றத்திற்கான வாய்ப்பாகக் கருதப்பட வேண்டும் என்றும் கூறினார்.
பிற நாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொரு மறைப்பணியாளரும், அவர் சந்திக்கும் கலாச்சாரங்களில் மரியாதையுடன் வாழவும், நல்ல மற்றும் உன்னதமான அனைத்தையும் நன்மைக்கு வழிநடத்தவும், நற்செய்தியின் இறைவாக்கைக் கொண்டு வரவும் அழைக்கப்படுகிறார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
யூதேயா மலைகளுக்கு விரைவாக நடந்து சென்று, இயேசுவைத் தன் வயிற்றில் சுமந்து, எலிசபெத்திர்குப் பணியாற்ற தன்னை அர்ப்பணித்து, தனது மகனின் முதல் மறைப்பணியாளராக விளங்கிய அன்னை மரியாவின் பரிந்துரையில் அனைவரையும் ஒப்படைத்து செபிப்பதாகவும் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், அன்பு, நீதி மற்றும் அமைதியின் அரசான கிறிஸ்துவின் ராஜ்யத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பாளர்களாக மாற, அன்னையின் ஆசீர் நாடுவோம் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
