தேடுதல்

ஆயர் Miroslaw Stanislaw Wachowski, திருநிலைப்பாட்டுத் திருப்பலியின்போது ஆயர் Miroslaw Stanislaw Wachowski, திருநிலைப்பாட்டுத் திருப்பலியின்போது  

ஆயர் Mirosław Stanisław Wachowski ஆயர் திருநிலைப்பாட்டுத் திருப்பலி

எப்போதும் ஒற்றுமை, அமைதி, கேட்டல் மற்றும் உரையாடலின் மனிதராக இருங்கள். வார்த்தைகளில் உருவாகும் மென்மையையும், பார்வையில் ஆறுதல் அளிக்கும் அமைதியையும் கொண்டு வாருங்கள். - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒற்றுமையின் பிணைப்புகளை வலுப்படுத்தவும், அரசு அதிகாரிகளுடன் உரையாடலை ஊக்குவிக்கவும், திருஅவையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், மக்களின் நன்மையை வளர்க்கவும் ஆயர் அனுப்பப்படுகிறார் என்றும், அப்போஸ்தலிக்க தூதர் என்பவர் வெறும் அரசுப்பணி ஆற்றுபவர் மட்டுமல்ல, மக்களுக்குத் துணையாக இருந்து, ஆறுதல் கூறி, இணைப்பின் பாலங்களைக் கட்டும் ஒரு திருஅவையின் முகமாக அவர் செயல்படுகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 26 உரோம் உள்ளூர் நேரம் மாலை 5 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் பேரருள்திரு Mirosław Stanisław Wachowski அவர்களின் ஆயர் பட்ட திருப்பலிக்குயின்போது வழங்கிய மறையுரையில் இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆயரின் பணி கட்சி சார்ந்த நலன்களைப் பாதுகாப்பது அல்ல, மாறாக ஒற்றுமைக்கு சேவை செய்வதாகும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், “நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்." (2 தீமோத்தேயு 4:7) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளையும் மேற்கோள்காட்டினார்.

புனித பவுலின் நற்செய்தி அறிவிக்கும் ஆற்றல் அவரது பெருமையிலிருந்து வரவில்லை, நன்றியுணர்வுதான் அதற்குக் காரணம், ஏனெனில், கடவுள் அவரது போராட்டங்களிலும் சோதனைகளிலும் தாங்கினார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

செனகலிலும், தனது சொந்த ஊரான போலந்திலும் உள்ள திருப்பீட பணிகளிலும், வியன்னாவில் உள்ள பன்னாட்டு அமைப்புகளிலும், மாநிலச் செயலகத்திலும், மினுடான்டே மற்றும் மாநிலங்களுடனான உறவுகளுக்கான துணைச் செயலாளராகவும் திருஅவைக்குப் பணியாற்றும் பாதையில் பயணித்தவர் பேரருள்திரு Mirosław Stanisław Wachowski என்று கூறினார் திருத்தந்தை.

நற்செய்தியின் உண்மைக்குக் கீழ்ப்படிதல் உள்ளவராகவும், விவேகத்துடனும் திறமையுடனும், மரியாதையுடனும் அர்ப்பணிப்புடனும் திருஅவைக்கான அரசுப் பணிகளை  ஆற்றியவர் என்றும், அதன் கொடையாக தற்போது ஈராக் அரசுத்தூதுவராக மாற கடவுள் வாய்ப்பளித்துள்ளார் என்றும் கூறினார்.

வரலாற்றில் முதல் முறையாக, ஈராக்கிற்கு பயணம் செய்தவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் சகோதரத்துவத்தின் திருப்பயணியாக அங்கு சென்றார் என்றும், விசுவாசத்தில் நம் தந்தையான ஆபிரகாம் கடவுளின் அழைப்பைக் கேட்ட அந்த நாட்டில், "மனிதர்களை மாண்பிலும் உரிமைகளிலும் சமமாகப் படைத்த கடவுள், அன்பு, கருணை மற்றும் நல்லிணக்கத்தைப் பரப்ப நம்மை அழைக்கிறார்" என்று நினைவு கூர்ந்தார் எனவும் மொழிந்தார் திருத்தந்தை.

ஈராக்கிலும், கத்தோலிக்க திருச்சபை அனைவருக்கும் நண்பராக இருக்கவும், உரையாடல் மூலம், அமைதிக்காக மற்ற மதங்களுடன் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைக்கவும் விரும்புகிறது" என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரிகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள், அதந்த அமைதியின் பாதையில் பயணத்தைத் தொடர ஆயர் அழைக்கப்படுகிறார் என்றும் கூறினார்.

நம்பிக்கையின் விதைகளை வளர்க்கவும், அமைதியான சகவாழ்வை ஊக்குவிக்கவும், புனித ஆட்சிக் குழுவின் ராஜதந்திரம் நற்செய்தியிலிருந்து பிறந்து செபத்தால் வளர்க்கப்படுகிறது என்பதைக் காட்டவும் ஆயர் அவர்கள் அழைக்கப்படுகின்றார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், எப்போதும் ஒற்றுமை மற்றும் அமைதி, கேட்பது மற்றும் உரையாடலின் மனிதராக இருங்கள். வார்த்தைகளில் உருவாகும் மென்மையையும், பார்வையில் ஆறுதல் அளிக்கும் அமைதியையும் கொண்டு வாருங்கள் என்றும் கூறினார்.

ஈராக்கில் வாழும், மக்கள் நீங்கள் சொல்லும் வார்த்தைக்காக அல்ல, மாறாக நீங்கள் எப்படி அன்பு செய்கின்றீர்கள் என்பதற்காக உங்களை அங்கீகரிப்பார்கள் என்று கூறிய திருத்தந்தை அவர்கள் புனித கன்னி மரியா, புனித தாமஸ், அடாய், மற்றும் ஈராக்கில் உள்ள அனைத்து நம்பிக்கையாளார்களின் சான்றுள்ள வாழ்வும் பாதையில் ஒரு வெளிச்சமாக இருக்கட்டும் என்றும் வாழ்த்தினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 அக்டோபர் 2025, 18:27