தேடுதல்

திருஅவையில் 7 புதிய புனிதர்களுக்கான புனிதர் பட்ட திருப்பலி

புதிய ஏழு புனிதர்களைத் திருஅவையில் இணைக்கும் இத்திருப்பலியில் பங்கேற்பதற்காக உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏறக்குறைய 70000 அதிகமான மக்கள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்தனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அக்டோபர் 19 பொதுக்காலத்தின் 29ஆம் ஞாயிற்றுக்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் புனிதர் பட்ட கூட்டுத் திருப்பலியானது நடைபெற்றது, புதிய ஏழு புனிதர்களைத் திருஅவையில் இணைக்கும் இத்திருப்பலியில் பங்கேற்பதற்காக உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏறக்குறைய 70000 அதிகமான மக்கள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்தனர்.  

துருக்கியாவைச் சார்ந்த பேராயர் இஞ்ஞாசியோ மலோயன், பாப்புவா நியு கினியைச் சார்ந்த பீட்டர் தோ ரோத்,  இறைஇரக்கத்தின் அருள்சகோதரிகள் சபை நிறுவனரான அருள்சகோதரி வின்சென்ஷா மரியா பொலோனி, திருநற்கருணை இயேசுவின் பணியாளர்கள் சபையைச் சார்ந்த அருள்சகோதரி மரியா கார்மன் ரெண்டிலஸ் மார்தினெஸ், கிறிஸ்தவர்களின் பாதுகாவலியான அன்னை மரியா சபையை சார்ந்த அருள்சகோதரி மரிய துரொன்காத்தி, வெனிசுலாவைச் சார்ந்த ஏழையரின் மருத்துவர் என அழைக்கப்படும் ஜோஸ் கிரகோரியோ ஹெர்னன்ஸ் சிஸ்னேரோஸ், பொம்பே புனித செபமாலை அன்னை தொமேனிக்கன் அருள்சகோதரிகள் சபையை நிறுவியவரான பர்த்தலோ லோங்கோ, ஆகியோர் புனிதர்களாக உயர்த்தப்பட்டனர்.

வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரையும் திறந்த காரில் வலம் வந்து வாழ்த்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ. தூய பேதுரு பெருங்கோவிலின் உள்புறத்தில் இருந்து பீடப்பணியாளர்கள், அருள்பணியாளர்கள், ஆயர்கள், கர்தினால்கள் பவனி வர வருகைப் பாடலானது பாடகர் குழுவினரால் பாடப்பட்டது. ஆயிரக் கணக்கான மக்கள் கூடியிருந்த வத்திக்கான் வளாகத்தில் புனிதர் பட்டக் கூட்டுத்திருப்பலியினை சிலுவை அடையாளம் வரைந்து திருத்தந்தை அவர்கள் துவக்கி வைத்தார். அதன் பின் புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மர்செல்லோ செமராரோ அவர்கள், திருத்தந்தையிடம் 7 அருளாளர்கள் புனிதராக அறிவிக்கப்படுவதற்கான பரிந்துரையை முன்வைத்தார். புதிய புனிதர்களின் வாழ்க்கை குறிப்பானது திருப்பயணிகள் அனைவருக்கும் வாசிக்கப்பட்டது.

புனிதர்களின் வாழ்க்கைக் குறிப்பானது வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து புனிதர்களின் பரிந்துரையைக் கேட்கும் மன்றாட்டு இடம்பெற்றது. அதன்பின் புனித புனிதர்கள் 7 பேரின் புனிதப்பொருள்களுக்கு இடும் தூபப்பொருட்களை அப்புனிதர்களின் சபையை சார்ந்தவர்கள் பீடத்திற்கு பவனியாக எடுத்து வந்து அன்னை மரியா திரு உருவச்சிலைக்கு முன் வைத்தனர். அதன் பின் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இந்த 7 அருளாளர்களையும் புனிதர்களாக அறிவித்தார். மக்கள் அனைவரும் இணைந்து வானவர் கீதத்தை மகிழ்வுடன் பாடிய பின்னர் கர்தினால் செமராரோ திருத்தந்தைக்கு நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து திருப்பலியின் இறைவார்த்தை வழிபாட்டு பகுதிகள் தொடர்ந்து நடைபெற்றன. முதல் வாசகமானது இஸ்பானிய மொழியில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிஸ்டைன் சிற்றாலயப் பாடகர் குழுவினரால் பதிலுரைப்பாடல் எண் 120 பாடலாகப் பாடப்பட்டது. இரண்டாம் வாசகமானது இத்தாலிய மொழியில் வாசிக்கப்பட நற்செய்தி வாசகமானது இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டது. நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தன் மறையுரையினை வழங்கினார். 

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது கருத்துக்களை நிறைவு செய்ததும் திருத்தந்தையின் மறையுரையைத் தொடர்ந்து நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் அர்மீனியம், ஆங்கிலம், அரபு, போர்த்துக்கீசியம், துருக்கியம் ஆகிய மொழிகளில் எடுத்துரைக்கப்பட்டன. மறைசாட்சியாக மரித்து புனிதராக உயர்த்தப்பட்ட மசாப்கி குடும்பத்தார், அருள்பணியாளர் மற்றும் அருள்சகோதரிகள் திருநற்கருணை வழிபாட்டுக்குத் தேவையான காணிக்கைப் பொருள்களை திருத்தந்தையிடம் அளித்தனர்.

திருநற்கருணை வழிபாட்டைத் தொடர்ந்து திருப்பலியின் நிறைவில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அதன்பின் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார். இறுதிப்பாடலுடன் கூட்டுத் திருப்பலியானது நிறைவிற்கு வந்தது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 அக்டோபர் 2025, 12:03