இலக்கை நோக்கி பயணிக்க இடைவிடாது செபிப்போம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தன் மறையுரையினை வழங்கினார்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” (லூக் 18:8) என்ற கேள்வி, கடவுளுடைய பார்வையில் மிகவும் விலைமதிப்பற்றது. நம்பிக்கை கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான அன்பின் பிணைப்பு. இன்று நமக்கு முன் ஏழு புதிய புனிதர்கள் உள்ளனர். அவர்கள் கடவுளின் அருளால், நம்பிக்கை விளக்கை எரிய வைத்தனர். உண்மையில், அவர்களே கிறிஸ்துவின் ஒளியைப் பரப்பும் திறன் கொண்ட விளக்குகளாகவும் மாறினர்.
கடவுளுடனான நமது உறவு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் காலத்தின் தொடக்கத்தில் அவர் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்தார். கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல், நாம் மீட்பை எதிர்பார்க்க முடியாது. கடவுளுடைய வார்த்தைகள் எப்போதும் "நற்செய்தி", மீட்பின் மகிழ்ச்சியான அறிவிப்பு. இந்த மீட்பு என்பது இறைத்தந்தையிடமிருந்து மகன் வழியாக, தூயஆவியாரின் வல்லமையில் நாம் பெறும் நிலையான வாழ்வின் கொடை.
அன்பான நண்பர்களே, இதனால்தான் கிறிஸ்து தனது சீடர்களிடம் "மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் (லூக்கா 18:1) என்று கூறுகிறார். நாம் சுவாசிப்பதில் சோர்வடையாதது போல, செபிப்பதில் சோர்வடையாதிருப்போமாக! சுவாசம் உடலின் உயிரைப் பேணுவது போல, செபம் ஆன்மாவின் உயிரைப் பேணுகிறது: உண்மையில், நம்பிக்கை செபத்தில் வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் உண்மையான செபம் விசுவாசத்தில் வாழ்கிறது.
இயேசு ஓர் உவமையுடன் இந்தத் தொடர்பை நமக்குக் காட்டுகிறார்: நடுவர் ஒருவர் கைம்பெண்ணின் அழுத்தமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் இருக்கிறார். அவளுடைய விடாமுயற்சி இறுதியில் அவரைச் செயல்பட வழிநடத்துகிறது. ஒரு வகையில், அத்தகைய விடாமுயற்சி நமக்கு நம்பிக்கையின் ஓர் அழகான எடுத்துக்காட்டாக, குறிப்பாக சோதனை மற்றும் இன்னல்களின் காலங்களில் மாறுகின்றது. ஆயினும் கூட, அந்தப் பெண்ணின் விடாமுயற்சியும், தயக்கத்துடன் செயல்படும் நடுவரும், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?" (லூக் 18:7) என்று இயேசுவிடமிருந்து வெளிப்படும் ஒரு கேள்விக்குக் காரணமாக அமைகின்றனர்.
இந்த வார்த்தைகள் நம் இதயங்களில் எதிரொலிக்க அனுமதிப்போம். கடவுள் அனைவருக்கும் ஒரு நீதியுள்ள நடுவர் என்று நாம் நம்புகிறோமா என்று கடவுள் நம்மிடம் கேட்கிறார். இறைத்தந்தை எப்போதும் நம் நன்மையையும் ஒவ்வொரு நபரின் மீட்பையும் விரும்புகிறார் என்று நாம் நம்புகிறோமா? என்று மகன் நம்மிடம் கேட்கிறார். இது சம்பந்தமாக, இரண்டு சோதனைகள் நம் நம்பிக்கையை சோதிக்கின்றன: முதலாவது தீமையின் அவதூறிலிருந்து வலிமையைப் பெறுகிறது, இது கடவுள் ஒடுக்கப்பட்டவர்களின் அழுகையைக் கேட்பதில்லை என்றும் துன்பப்படும் அப்பாவிகள் மீது அவருக்கு எந்த இரக்கமும் இல்லை என்றும் சிந்திக்க வைக்கிறது. இரண்டாவது சோதனை, கடவுள் நாம் விரும்பும் விதத்தில் செயல்பட வேண்டும் அதாவது, நமது செபமானது கடவுளுக்கு கட்டளை பிறப்பித்து அவர் எவ்வாறு நீதியாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கும் சோதனை.
நம்பிக்கையின் சரியான சான்றாகிய இயேசு, இரண்டு சோதனைகளிலிருந்தும் நம்மை விடுவிக்கிறார். அவர் தனது பாடுகளின் போது, இவ்வாறு செபிக்கிறார்: தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் (cf. லூக்கா 22:42).
இறைத்தந்தை இந்த வார்த்தைகளையே நமக்குக் கொடுக்கிறார். நமக்கு என்ன நடந்தாலும், இயேசு தம்மை மகனாக தந்தையிடம் ஒப்படைத்தார் என்பதை நினைவில் கொள்வோம். எனவே, நாம் அவருடைய பெயரில் சகோதர சகோதரிகள், எனவே நாம் அறிவிக்க முடியும்: "ஆண்டவரே, தூய இறைத்தந்தையே எல்லா வல்லமையுள்ளவரும் நிலையானவருமான இறைவனே, எங்கள் கடவுளாகிய கிறிஸ்துவின் வழியாக உமக்கு நன்றி செலுத்துவது எப்போதும் எல்லா இடங்களிலும் உண்மையாகவும் நியாயமாகவும் எங்கள் கடமையும் எங்கள் மீட்பும் ஆகும்" என்று செபிப்போம்.
இறைவன் அனைவருக்கும் நீதி வழங்குகிறார், அனைவருக்கும் தனது உயிரைக் கொடுக்கிறார் என்பதை திருஅவையின் செபம் நமக்கு நினைவூட்டுகிறது. இவ்வாறு, நாம் கர்த்தரிடம், "நீர் எங்கே?" என்று கூப்பிடும்போது, இந்த அழைப்பை ஒரு செபமாக மாற்றுவோம், பின்னர் அப்பாவிகள் துன்பப்படும் இடத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை நாம் அங்கீகரிப்போம். கிறிஸ்துவின் சிலுவை கடவுளின் நீதியை வெளிப்படுத்துகிறது, கடவுளின் நீதி மன்னிப்பு. அவர் தீமையைக் காண்கிறார், அதைத் தானே எடுத்துக்கொள்வதன் வழியாக அதை மீட்டெடுக்கிறார். நாம் வலியாலும் வன்முறையாலும், வெறுப்பாலும், போராலும் "சிலுவையில் அறையப்படும்போது", கிறிஸ்து ஏற்கனவே சிலுவையில், நமக்காகவும் நம்முடனும் இருக்கிறார். நாம் இருக்கும் நிலையிலேயே நம்மை அரவணைக்கிறார், அவர் இருக்கும் நிலையிலேயே நம்மை மாற்றுகிறார். கடவுளின் இரக்கத்தை நிராகரிப்பவர்கள் தங்கள் அண்டை வீட்டாரிடம் இரக்கம் காட்ட இயலாதவர்களாகவே இருக்கிறார்கள். அமைதியை ஒரு கொடையாக ஏற்காதவர்கள் அமைதியை எவ்வாறு வழங்குவது என்று அறிய மாட்டார்கள்.
அன்பான நண்பர்களே, இயேசுவின் கேள்விகள் நம்பிக்கை மற்றும் செயலுக்கான சக்திவாய்ந்த அழைப்பு என்பதை இப்போது புரிந்துகொள்வோம். இறைமகன் வரும்போது, அவர் கடவுளின் அருளில் நம்பிக்கையைக் காண்பாரா? உண்மையில், நீதிக்கான நமது உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவது இந்த நம்பிக்கைதான், ஏனென்றால் கடவுள் உலகத்தை அன்பினால் காப்பாற்றுகிறார், நம்மை இறப்பிலிருந்து விடுவிக்கிறார் என்று நாம் நம்புகிறோம்.
கிறிஸ்துவின் இந்த உண்மையுள்ள நண்பர்களும் இன்றைய புனிதர்களுமான பேராயர் இக்னாசியோ சௌக்ரல்லா மலோயன், அருள்பணியாளர் பீட்டர் டு ரோட் போன்றவர்கள் தங்கள் நம்பிக்கைக்காக மறைசாட்சிகளாக இறந்தவர்கள். அருள்சகோதரி மரியா ட்ரோன்காட்டி மறைப்பணியாளர், அருள்சகோதரி வின்சென்சா மரியா போலோனி மற்றும் அருள்சகோதரி மரியா டெல் மான்டே கார்மெலோ ரெண்டில்ஸ் மார்டினெஸ் சபையின் நிறுவனர்கள், பர்த்தலோ லோங்கோ மற்றும் ஜோஸ் கிரகோரியோ ஹெர்னாண்டஸ் சிஸ்னெரோஸ் போன்ற மனிதகுலத்தின் பயனாளிகள்.
புதிய புனிதர்களின் பரிந்துரை நமது சோதனைகளில் நமக்கு உதவட்டும், அவர்களின் முன்மாதிரி தூய்மைத்துவத்திற்கான நமது பகிரப்பட்ட அழைப்பில் நம்மை ஊக்குவிக்கட்டும். இந்த இலக்கை நோக்கி நாம் பயணிக்கும்போது, இடைவிடாமல் செபிப்போம், நாம் கற்றுக்கொண்டவற்றிலும் உறுதியாக நம்புவதிலும் தொடர்ந்து நிலைத்து இருப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
