தேடுதல்

Pதிருத்தந்தை பதினான்காம் லியோ. Pதிருத்தந்தை பதினான்காம் லியோ.   (Francesco Fotia)

கடவுளின் அருளால் சிறந்ததைத் தேர்வு செய்த புனித கிளாரா

அக்டோபர் 4, சனிக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்னும் யூபிலி ஆண்டிற்கான சிறப்பு மறைக்கல்வி உரையினை எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருப்பயணம் என்பதும் ஒரு தேர்வு, யூபிலி ஆண்டில் புனித கதவைக் கடந்து செல்லும் நாம் நம்பிக்கையில் ஆழப்படுகின்றோம், புதிய வாழ்க்கைக்குள் நுழைகின்றோம் என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 4, சனிக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்னும் யூபிலி ஆண்டிற்கான சிறப்பு மறைக்கல்வி உரையின் போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 4, 5 ஆகிய நாள்களில் புலம்பெயர்ந்தோர்க்கான யூபிலியானது வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த யூபிலியில் பங்கேற்பதற்காக வந்திருக்கும் திருப்பயணிகள் அனைவருக்கும் தனது மறைக்கல்வி உரையினை எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

திருச்சட்டமும் இறையாட்சியும்

லூக்கா 16:13 - 14

எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது.”  பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர்.

திருத்தந்தையின் மறைக்கல்வி உரைச்சுருக்கம்

யூபிலி என்பது உறுதியான நம்பிக்கையின் காலம், அதில் நம் இதயங்கள் மன்னிப்பையும் இரக்கத்தையும் காண முடியும் என்றும், இதனால் எல்லாம் புதிதாகத் தொடங்க முடியும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

எதிர்நோக்கு என்பது தேர்வு செய்வது என்று குறிப்பிட்ட திருத்தந்தை அவர்கள், நாம் மாறினால் உலகம் மாறுகிறது, தேர்வு செய்பவர்கள் விரக்தி மனம் இல்லாதவர்கள் என்னும் இரண்டு மிக முக்கியமான கருத்துக்களை அது எடுத்துரைப்பதாகவும் கூறினார்.

கடவுளின் அருளால் நன்மையானவற்றைத் தேர்ந்த அசிசியின் புனித கிளாரா பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அக்டோபர் 4 அன்று புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருவிழாவைக் கொண்டாடும் இந்நாளில், மிகவும் வித்தியாசமான துணிவுள்ள பெண்ணாகத் திகழ்ந்த புனித கிளாரா பற்றி அறிந்துகொள்வது சிறந்தது என்றும் கூறினார்.

நற்செய்தியின் எளிமையைத் தனதாக்கிக்கொண்ட புனித அசிசி பிரான்சிஸ் தனது செல்வச்செழிப்பான குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார் என்றும், அவர் ஓர் ஆணாக இருந்ததால் அவருக்கு இருந்த இடர்ப்பாடுகள் குறைவாக இருந்தன. ஆனால், புனித கிளாராவின் வாழ்க்கைத் தேர்வானது அதைவிட அதிகமான இடர்ப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது என்றும் கூறினார் திருத்தந்தை.

நற்செய்தி தன்னிடத்தில் என்ன கேட்கிறது என்பதைப் புரிந்து கொண்டவராக புனித கிளாரா இருந்தார் என்றும், அவரைப் பின்பற்றி ஏராளமான பெண்கள் துறவறத்தை மேற்கொண்டனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

எளிமை வாழ்வை அக்காலத்துப் பெண்கள் தேர்ந்தெடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வாக மட்டுமில்லாமல் இன்று வரை துறவற அழைத்தல் பெற்று வருவது நிலையான நிகழ்வாக இருக்கின்றது என்றும் இதற்குக் காரணமாக இருந்தவர்  புனித கிளாரா என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

திருஅவை இளமையானது, இளைஞர்களை ஈர்க்கிறது என்றும், இளைஞர்கள் நற்செய்தியை விரும்புகிறார்கள் என்பதை அசிசியின் புனித கிளாரா நமக்கு நினைவூட்டுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இளைஞர்களுக்காக செபிப்போம்; பணத்துக்கோ அல்லது தனக்குத்தானோ சேவை செய்யாமல், கடவுளின் அரசிற்கும் அவருடைய நீதிக்கும் சேவை செய்யும் ஒரு திருஅவையாக இருக்க செபிப்போம். புனித கிளாராவைப் போலவே, நகரத்தில் வித்தியாசமாக வாழ துணிவு கொfண்ட ஒரு திருஅவையாக வாழ்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 அக்டோபர் 2025, 14:22