தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ. திருத்தந்தை பதினான்காம் லியோ. 

திருமணத்தை புனிதத்திற்கான பாதையாக எடுத்துக்காட்டியவர்கள் லூயிஸ், ஜெலி

கடவுளால் அழைக்கப்படும் ஆண்களும் பெண்களும் ஒன்றிணையும் திருமணம் மிகவும் உன்னதமானது மற்றும் உயர்ந்தது என்றும், திருமணத்தின் வழியாக, திருமணத்தில், மற்றும் திருமணத்தினால் தாங்கள் புனிதர்களாக முடியும் என்பதை அறிந்துகொண்டவர்கள் குழந்தை இயேசுவின் புனித தெரசாவின் பெற்றொர்களான புனித லூயிஸ் மற்றும் ஜெலி மார்ட்டின். - திருத்தந்தை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

புனிதர் பட்டம் பெற்ற முதல் தம்பதியினராக புனித லூயிஸ் மற்றும் ஜெலி மார்ட்டின் தம்பதியினர் விளங்குகின்றனர் என்றும், திருமணத்தை புனிதத்திற்கான பாதையாக எடுத்துக்காட்டுவதால் இவர்கள் வாழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 18, சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்படும் குழந்தை இயேசுவின் புனித தெரசாவின் பெற்றொர்களான புனித லூயிஸ் மற்றும் ஜெலி மார்ட்டின் ஆகியோருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்ட 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

திருத்தந்தை அவர்களின் வாழ்த்து செய்தியானது Séez மறைமாவட்ட ஆயர் Bruno Feillet அவர்களுக்கு பிரென்சு மொழியில் அனுப்பப்பட்டுள்ளது.

கடவுளால் அழைக்கப்படும் ஆண்களும் பெண்களும் ஒன்றிணையும் திருமணம் மிகவும் உன்னதமானது, உயர்ந்தது என்றும், திருமணத்தின் வழியாகவும், திருமணத்தில், மற்றும் திருமணத்தினாலும் தாங்கள் புனிதர்களாக முடியும் என்பதை அறிந்துகொண்டவர்கள்  அவர்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

அவர்களின் திருமணம் ஒன்றாக ஒரு பயணத்தின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்பட வேண்டும் என்பதை லூயிஸும் ஜெலியும் நன்கு புரிந்துகொண்டனர் என்ற கர்தினால் மார்ட்டீன் அவர்களின் கருத்துக்களை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை அவர்கள், இறைவனின் பார்வையில், மகிழ்ச்சி மற்றும் சோதனையான தருணங்களில், ஓர் அழகான மற்றும் நல்ல வாழ்க்கையை நடத்துவதற்கான உண்மையான விருப்பம், தாராள மனப்பான்மை கொண்ட ஆன்மாக்களுக்கு அலென்சோனின் புனித தம்பதியினர் ஒரு பிரகாசமான மற்றும் ஊக்கமளிக்கும் மாதிரியாக விளங்குகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடும்பங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள், தேர்வு செய்தல்கள் போன்றவற்றின் மையத்தில் இயேசுவை வைத்து செயல்பட அறிவுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், குழந்தைகள் இறைவனுடைய எல்லையற்ற அன்பையும் மென்மையையும் கண்டறிய உதவவேண்டும் என்றும், அவருக்குத் தகுதியான விதத்தில் குழந்தைகளும் அவரை அன்பு செய்ய வைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

குழந்தை இயேசுவின் புனித தெரசாவின் பெற்றோர்களான லூயிஸும் ஜெலியும் நமக்குக் கொடுக்கும் சிறந்த பாடம், திருஅவைக்கும் உலகத்திற்கும் மிகவும் தேவை என்றும், தெரேசா தனது பெற்றோரிடமிருந்து சிறு வயதிலிருந்தே அதைக் கற்றுக்கொள்ளாவிட்டால், இயேசுவையும் மரியாவையும் இவ்வளவு அன்பு செய்து திருஅவையில் சிறப்புற்று இருக்க முடியாது என்றும் விளக்கினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 அக்டோபர் 2025, 13:19