அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபட வேண்டும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அமைதியை மீண்டும் நிலைநாட்ட நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும், நீதி, சமத்துவம் மற்றும் மக்களிடையே ஒத்துழைப்பு ஆகியவற்றின் கொள்கைகள், அதன் ஈடுசெய்ய முடியாத அடித்தளத்தை உருவாக்கும் கொள்கைகள் இன்னும் அதிகமாக வளர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ
அக்டோபர் 14, செவ்வாயன்று உரோம் காலை 11 மணியளவில் இத்தாலிய அரசுத்தலைவர் சேர்ஜோ மத்தரெல்லா மற்றும் அரசு அதிகாரிகளை குயிரினாலெ எனப்படும் அரசு மாளிகையில் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இத்தாலிய நிலத்தைச் சுற்றி அமைந்துள்ள எண்ணற்ற ஆலயங்கள் மற்றும் மணி கோபுரங்களில் பெரும்பாலும் கலை மற்றும் பக்தியின் உண்மையான புதையல்கள் மற்றும் அதன் அடையாளங்களை நாம் காண்கிறோம் என்றும், இதில் மக்களின் உள்ளார்ந்த படைப்பாற்றலானது, உண்மையான மற்றும் உறுதியான நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து, சிறந்த அழகின் சான்றை கலை வழியாக மட்டுமன்றி ஒழுக்கம் மற்றும் மனிதாபிமானம் வழியாகவும் நமக்கு வழங்கியுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.
இத்தாலிய நாடு தனது கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு வழங்கும் தாராளமான உதவிக்கும், மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் முயற்சிகளுக்கும் நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், நமது காலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றான இதிலிருந்து இத்தாலி ஒருபோதும் பின்வாங்கவில்லை என்றும் கூறினார்.
வெளிப்படைத்தன்மை மற்றும் ஒற்றுமை மனப்பான்மையை உயிருடன் வைத்திருக்க இத்தாலிய மக்களை ஊக்குவிப்பதாகக் கூறிய திருத்தந்தை அவர்கள், இத்தாலிய சமூகத்தின் மதிப்புகள் மற்றும் மரபுகளில் புதியவர்களை ஆக்கப்பூர்வமாக ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அதன் அடையாளங்கள் மற்றும் வெளிப்பாடுகளுடன் அன்பு செய்வதும் பகிர்ந்து கொள்வதும் எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், ஒருவர் யார் என்பதை எவ்வளவு அமைதியாக அடையாளம் கண்டு அன்பு செய்கின்றாரோ, அவ்வளவுக்கு மற்றவரை பயமின்றி திறந்த இதயத்துடன் சந்திப்பதும் ஒருங்கிணைப்பதும் எளிதாக இருக்கும் என்றும் எடுத்துரைத்தார்.
இத்தாலி மகத்தான செல்வம் கொண்ட ஒரு நாடு எனவே நம்பிக்கையைப் பெறவும், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும், அனைத்து இத்தாலியர்களுக்கும் ஊக்கமூட்டுவதாக கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
