தேடுதல்

சுவிஸ் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருடன் திருத்தந்தை சுவிஸ் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருடன் திருத்தந்தை   (@Vatican Media)

நல்லிணக்க வாழ்வைக் கட்டியெழுப்பக்கூடிய தூண்கள்

யூபிலி ஆண்டில், எளிய சான்றுகளின் வழியாக, சந்திக்கும் மக்களுக்கு எதிர்நோக்கின் மறைப்பணியாளர்களாக இருங்கள். - திருத்தந்தை பதினான்காம் லியோ

மெரினா ராஜ் - வத்திக்கான்

இரக்கம், நேர்மை, ஒற்றுமை, பரஸ்பர மரியாதை ஆகியவை இணக்கமான வாழ்க்கையைக் கட்டியெழுப்பக்கூடிய தூண்கள் என்றும், ஒவ்வொருவரும் மற்றவருக்குத் தங்களது வார்த்தை, செயல், இரக்கம், நம்பிக்கை பிறரன்புப் பணிகள் போன்றவற்றினால் முன்மாதிரிகையாக இருக்க முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 3, வெள்ளியன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், புதிய சுவிஸ் காவலர்கள் பணியேற்பு நாளை முன்னிட்டு அக்காவலர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலாச்சாரம் மொழிகள் மற்றும் மரபுகளுடன் வத்திக்கானிற்குப் பணியாற்ற வரும் காவலர்கள் தங்களிடையே வலுவான மற்றும் ஆரோக்கியமான நட்புறவை உருவாக்க அழைக்கப்படுகின்றார்கள் என்றும், பிரிவினை மற்றும் தனிமை அதிகரிக்கும் இவ்வுலகில் கற்றுக்கொள்ளவும், முன்னேறவும், பணியாற்றவும் ஒருவர் மற்றவரின் உதவி தேவைப்படுபவர்களாகவும் இருக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

உரோம் நகரம், அதன் பொக்கிஷங்கள் மற்றும் செல்வங்களுடன், வரலாற்றிலும், கலைகளிலும் மட்டுமல்லாது, எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்தவ நம்பிக்கையின் வழியாகவும், கிறிஸ்துவைப் பின்பற்றிய முதல் மறைசாட்சிகள் வழியாகவும் ஒரு மறக்க முடியாத பயணத்தை வழங்குகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

"நீங்களே வெளியே செல்லாதீர்கள், உங்களிடம் திரும்புங்கள்; உண்மை உள் மனிதனில் வாழ்கிறது" என்ற புனித அகுஸ்தினாரின் வார்த்தைகளுக்கேற்ப, வாழ வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், பொருளாதார மாற்றங்கள், சமூக பதட்டங்கள், டிஜிட்டல் புரட்சி, செயற்கை நுண்ணறிவு, பகுத்தறிவு மற்றும் பொறுப்புணர்வு தேவைப்படும் பிற சிக்கலான யதார்த்தங்கள் ஆகியவை தலைமுறைகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்றும் கூறினார்.

தங்களது பணியினை வத்திக்கானில் நிறைவு செய்யும் சுவிஸ்காவலர்கள், படிப்பு, பணி, குருத்துவம் என எந்த பணியினை மேற்கொண்டாலும் ரோமன் கியூரியாவில் அவர்கள் பெற்ற அனுபவம் நம்பிக்கையுடனும் கிறிஸ்தவர்களுக்கு ஏற்ற உலகளாவிய பார்வையுடனும் மாற்றங்களை எதிர்கொள்ள உதவும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இந்த யூபிலி ஆண்டில், எளிய சான்றுகளின் வழியாக, சந்திக்கும் மக்களுக்கு எதிர்நோக்கின் மறைப்பணியாளர்களாக இருங்கள் என்றும், நம்பிக்கையின் சுடர் வாழ்க்கையை ஒளிரச் செய்து, அன்பின் நாகரிகத்திற்கு துணிவைக் கொடுக்கவும், ஒன்றிணைந்துப் பங்களிப்பதற்கு ஆற்றலையும் அளிக்கட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 அக்டோபர் 2025, 16:47