தேடுதல்

அனைத்துலக இளையோர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை அனைத்துலக இளையோர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை   (ANSA)

திருஅவையில் இளையோரின் குரல்கள் கேட்கப்பட்டு மதிக்கப்படுகின்றன

தனது உரையில் உலகத்தையும் தங்கள் ஒத்த வயதினரையும் கிறிஸ்துவின் கண்களால் பார்க்கவும், பரிவுடனும் நம்பிக்கையுடனும் பதிலளிக்கவும் இளையோரை ஊக்குவித்தார் திருத்தந்தை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"இயேசுவுக்கு நெருக்கமானவர்கள், இறைவேண்டல், அருளடையாளங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை வழியாக அவருடைய நண்பர்களாக மாறுபவர்கள், அவர் உணருவது போல் உணரத் தொடங்குகிறார்கள்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 31, வெள்ளிக்கிழமை, அனைத்துலக இளையோர் ஆலோசனைக் குழுவின் (IYAB) உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை, திருஅவை இளைஞர்களை நன்கு புரிந்துகொள்ளவும் அவர்களுடன் பயணிக்க  உதவும் வகையில் அவர்களின் முன்னோக்குகளை வழங்கியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

பங்கேற்பு, ஒன்றிணைந்த பயணம் மற்றும் பணி  ஆகிய மூன்று கருப்பொருள்களை மையமாகக் கொண்டு தனது சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை .

01. பங்கேற்பு - Participation

முதலாவதாக பங்கேற்பு. திருஅவையின் வாழ்க்கையில் உண்மையான பங்கேற்பு என்பது கருத்தியல் அல்லது அரசியலில் இருந்து அல்ல, மாறாக கிறிஸ்துவின் இதயத்திற்கு அருகாமையில் இருப்பதிலிருந்து வருகிறது என்று மொழிந்த திருத்தந்தை, இயேசுவின் அனைத்து மக்களிடமும் உள்ள இரக்கத்தைப் பகிர்ந்து கொள்வதன் வழியாக, விசுவாசிகள் முதிர்ச்சியில் வளர்கிறார்கள் என்றும், மற்றவர்களைப் பற்றி அக்கறை கொண்டு, திருஅவையின் உலகளாவியப் பணிக்கு பங்களிக்கிறார்கள் என்றும் எடுத்துக்காட்டினார்.

மேலும் உலகத்தையும் தங்கள் ஒத்த வயதினரையும்  கிறிஸ்துவின் கண்களால் பார்க்கவும், பரிவுடனும்  நம்பிக்கையுடனும் பதிலளிக்கவும் இளையோரை ஊக்குவித்தார் திருத்தந்தை.

02. ஒன்றிணைந்த பயணம் - Synodality

இரண்டாவதாக, ஒன்றிணைந்த பயணம் என்பது திருஅவையை, தூய ஆவியாருக்கும் ஒருவருக்கொருவர் செவிசாய்த்து, ஒன்றாகப் பயணிக்கும் மக்களின் ஒன்றிப்பை வெளிப்படுத்துகிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இளையோரின் குரல்கள், குறிப்பாக ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் குரலற்றவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் சமூகம் மற்றும் உருவகம் இல்லாத தனிமைப்படுத்தப்பட்ட, நிகழ்நிலையில் (on line) மட்டுமே உள்ள நம்பிக்கைக்கு எதிராக அவர்களை எச்சரித்த திருத்தந்தை, உண்மையான ஒன்றிணைந்த பயணம் என்பது, இளையோர் ஒன்றாக விசுவாசத்தில் வாழவும், அவர்களின் மகிழ்ச்சியையும் போராட்டங்களையும் பகிர்ந்து கொள்ளவும், கூட்டுறவில் வளரவும் உதவுகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

03. பணி (Mission)

மூன்றாவதாக, தூய ஆவியால் வழிநடத்தப்படும் பணிக்கு ஒன்றிணைந்த பயணம் (Synodality) இயல்பாகவே வழிவகுக்கிறது என்றும், இன்றைய உலகிற்கு நற்செய்தியை எவ்வாறு கொண்டு வருவது என்பதை இளையோர் தெளிந்து தேர்ந்து, திறந்த இதயங்களுடனும், ஆவியானவருக்கும் மற்றவர்களுக்கும் செவிசாய்க்க விருப்பத்துடனும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

அனைத்துலக இளையோர் ஆலோசனைக் குழு மற்றும் பிற இளையோர் முயற்சிகளில் பங்கேற்பதன் வழியாக, இளையோர் திருஅவையை என்றென்றும் இளமையாகவும் அதன் மறைபரப்பு பணிக்கான அழைப்பில் உற்சாகமாகவும் வைத்திருக்க உதவுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

இறுதியாக, இளையோரின் குரல்கள் கேட்கப்பட்டு மதிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தி தனது உரையை நிறைவு செய்த திருத்தந்தை, மேலும் தூய ஆவியார் அவர்களை மகிழ்ச்சியான கிறிஸ்தவச் சான்றுபகர்தலில் வழிநடத்தி பலப்படுத்த வேண்டும் என்றும் இறைவேண்டல் செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 அக்டோபர் 2025, 15:35