தேடுதல்

மெலிசா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மெலிசா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி   (ANSA)

மெலிசா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தையின் செய்தி

பேரழிவினால் உயிர்களை இழந்தவர்களுக்காகவும், தப்பி பிழைத்தவர்ளுக்காகவும், புயல் மீண்ரும் வருமோ என்ற அச்சத்தில் பதட்டத்தையும் கவலையையும் அனுபவித்து வருபவர்களுக்காகவும் செபிப்பதாக எடுத்துரைத்தார் திருத்தந்தை .

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஜமைக்காவைத் தாக்கிய மெலிசா சூறாவளியானது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், வீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் பல மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன என்றும் எடுத்துரைத்து அம்மக்களுக்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 29, புதனன்று வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பேரழிவினால் உயிர்களை இழந்தவர்களுக்காகவும், தப்பி பிழைத்தவர்ளுக்காகவும், புயல் மீண்ரும் வருமோ என்ற அச்சத்தில் பதட்டத்தையும் கவலையையும் அனுபவித்து வருபவர்களுக்காகவும் செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அனைவருக்கும் தனது ஆழ்ந்த உடனிருப்பை வெளிப்படுத்தினார்.

அரசு அதிகாரிகள் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய ஊக்கமூட்டிய திருத்தந்தை அவர்கள், கிறிஸ்தவ சமூகங்கள், தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து, அவர்கள் வழங்கும் உதவிக்கு நன்றியினையும் தெரிவித்தார்.

அக்டோபர் 28, அன்று திருஅவையில் நினைவுகூரப்பட்ட திருத்தூதர்கள் புனித சீமோன் மற்றும் யூதா ததேயு திருவிழாவினை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், புனிதர்களின் முன்மாதிரிகையைப் பின்பற்றி, நோயுற்றவர்கள், சோதனையின் பாதையில் எப்போதும் இயேசுவைப் பின்பற்ற ஊக்கப்பெறட்டும் என்றும் வாழ்த்தினார்.

புதுமணத் தம்பதிகள், தங்களது குடும்பத்தை கடவுள் மற்றும் சகோதர சகோதரிகளை அன்புடன் சந்திக்கும் இடமாக மாற்ற உதவட்டும், இளைஞர்கள் கிறிஸ்துவுக்கு நம்பிக்கையாக இருப்பதற்கான உங்கள் உறுதிப்பாட்டில் இது உங்களைத் தாங்கட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், குறிப்பாக தங்களது சபையின் பொதுப்பேரவையினை சிறப்பிக்கும் அல்காண்டரின் பிரான்சிஸ்கன் சபை அருள்சகோதரிகள், ஒலிவெத்தெ மலைத் துறவியர் குழு, Conversano-Monopoli மறைமாவட்ட ஆயர், Giuseppe Favale மற்றும் மக்கள், Bolzano-Bressanone, மறைமாவட்ட ஆயர் Ivo Muser மற்றும் மக்கள் ஒவ்வொருவரும் அவர்கள் எங்கிருந்தாலும் நற்செய்திக்கு தாராளமாக சாட்சி கொடுக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 அக்டோபர் 2025, 12:20