தேடுதல்

சிறு குழந்தையை அரவணைக்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ. சிறு குழந்தையை அரவணைக்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ.  (ANSA)

அன்பின் அடையாளங்களாக அமைதியின் கருவிகளாக...

நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அன்பான திட்டத்திற்கு பதிலளிக்கத் தயாராக இருக்க அன்னை மரியாவின் ஆசீரை நாடுவோம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

நற்செய்தி மற்றும் திருஅவைக்கு துறவறத்தார் ஆற்றும் விலைமதிப்பற்ற பணிக்கு நன்றி என்றும், ஒவ்வொரு சூழலிலும் கடவுளின் அன்பின் அடையாளங்களாகவும் அமைதிக்கான கருவிகளாகவும் இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 8 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 600 ஆயிரத்திற்கும் அதிகமான திருப்பயணிகளுக்கு வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில் வழங்கிய செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவீன உலகின் பல எல்லைகளில் நம்பிக்கைக்கு சான்றளிப்பதில் ஒருபோதும் சோர்வடைய வேண்டாம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், மறைப்பணி துணிச்சலுடன் நற்செய்தி மற்றும் மனித முன்னேற்றத்தின் புதிய பாதைகளை அடையாளம் காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.

போலோக்னா, பெர்கமோ, காசலே மான்ஃபெராதோ மற்றும் காலியாரி மறைமாவட்டங்களின் திருப்பயணிகளையும், பேராயர் ஜூசப்பே பதுரியையும் அன்புடன் வரவேற்று வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இளைஞர்கள், நோயாளிகள் மற்றும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினார்.

அக்டோபர் மாதத்தில் புனித செபமாலையின் அரசியாக அழைக்கப்படும் மரியாவிடம் நம் எண்ணங்களைத் திருப்ப அனைவருக்கும் அழைப்பு விடுத்த திருத்தந்தை அவர்கள், நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அன்பான திட்டத்திற்கு பதிலளிக்கத் தயாராக இருக்க அன்னை மரியாவின் ஆசீரை நாடுவோம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 அக்டோபர் 2025, 13:18