தேடுதல்

மாணவர்களுடன் திருத்தந்தை மாணவர்களுடன் திருத்தந்தை  

சிகரங்களை நோக்கி முன்னேறுங்கள்! - திருத்தந்தை லியோ

திருஅவைக்கும் உலகிற்கும் நம்பிக்கை மற்றும் புதுப்பித்தலின் தலைமுறையாக மாற்றம்பெற இளையோர் அனைவரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வரலாற்றின் இருண்ட காலங்களில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கை ஏற்றி, "சிகரங்களை நோக்கி" தொடர்ந்து முன்னேற நான் உங்களை ஊக்குவிக்கிறேன் என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 30, வியாழக்கிழமை, வத்திக்கானில் உள்ள திருத்தந்தை ஆறாம் பவுல் அருகில், "கல்வி உலகின் விழா" என்ற  தலைப்பில் இடம்பெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற மாணவர்கள் வழங்கிய உரை ஒன்றில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இளம் பார்வையாளர்களை அன்புடன் வரவேற்று, அவர்களைச் சந்திப்பதில் தனது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்திய திருத்தந்தை, புனித பியர் ஜியோர்ஜியோ ஃப்ராசாத்தியின்  உத்வேகத்தைப் பெற்று, இளைஞர்கள் வாழ்க்கையை முழுமையாக வாழவும், நம்பிக்கையையும் உண்மையையும் பின்பற்றவும், மேலோட்டமான போக்குகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக "சிகரத்தை நோக்கி உயர்ந்து செல்ல உழைக்கவும் தனது உரையில் அவர்களை ஊக்குவித்தார்.

சமூகத்தை மாற்றுவதற்கான திறவுகோல் கல்வி என்பதை தனது உரையில் எடுத்துக்காட்டிய திருத்தத்தை, முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கல்விக்கான உலகளாவிய ஒப்பந்தத்தை நினைவு கூர்ந்த அதேவேளை, இளைஞர்கள் உண்மையைப் பேசுபவர்களாகவும், அமைதியை உருவாக்குபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும், சிறந்த எதிர்காலத்தை உருவாக்க கற்றல் மற்றும் தார்மீக ஒருமைப்பாட்டை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

விண்வெளியில் காணப்படும் விண்மீன்களின் படங்களைப் பயன்படுத்தி, அவைகள் பயணிகளுக்கு வழிகாட்டுவது போல, கல்வி தனிநபர்கள் தங்களைக் கடந்து பார்க்கவும், மற்றவர்களுடன் இணையவும், உலகை ஒளிரச் செய்யவும் உதவுகிறது என்று விளக்கினார் திருத்தந்தை.

கல்வி என்பது பார்வையை விரிவுபடுத்தி, இதயங்களை உண்மை மற்றும் கடவுளை நோக்கி உயர்த்தும் ஒரு தொலைநோக்கி என்று விவரிக்கப்படுகிறது என்று உரைத்த திருத்தந்தை, மூன்று முக்கிய கல்வி சவால்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.

01. உள் வாழ்க்கையின் கல்வி

முதலாவதாக, உள் வாழ்க்கையின் கல்வி என்பது, அமைதியற்ற, திசைதிருப்பப்பட்ட உலகில் ஆன்மிகத்தையும் சுய விழிப்புணர்வையும் வளர்ப்பது; அர்த்தத்தையும் அமைதியையும் கண்டறிய மௌனம், இறைவேண்டல் மற்றும் பிரதிபலிப்பைக் கற்றுக்கொள்வது என்றும் விளக்கினார் திருத்தந்தை.

02. டிஜிட்டல் உலகில் கல்வி

இரண்டாவதாக, தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை அறிவுக்கூர்மையுடன் பயன்படுத்தி அதற்கு அடிமையாகாமல்; இணையத்தை நன்மைக்காகவும் பயன்படுத்திய புனித கார்லோ அக்குய்ட்டியின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

03. அமைதிக்கான கல்வி

மூன்றாவதாக, அமைதிக்கான கல்வி என்பது, வன்முறை, ஒருதலை சார்பற்ற நிலை மற்றும் சமத்துவமின்மையை நிராகரித்தல்; ஒவ்வொரு நபருக்கும் இரக்கம் மற்றும் மரியாதை வழியாக உள்ளடக்கம், நீதி மற்றும் உடன்பிறந்த உறவை ஊக்குவித்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

இறுதியாக, இளைஞர்கள் விரைவாக விழும் "விண்மீன்களை" நோக்கிப் பார்க்காமல், உண்மையான வழிகாட்டும் ஒளியான இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்க்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள் என்றும், அவர் ஒரு நோக்கமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கைக்கு நம்மை வழிநடத்துகிறார் என்றும் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 அக்டோபர் 2025, 15:19