வன்முறை, மோதல்களை எதிர்கொள்ள கிறிஸ்தவர்களை ஒன்றித்திருக்க நீசேயா அழைக்கிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நவம்பர் 28, வெள்ளியன்று, இஸ்னிக்கில் (நீசேயா) இடம்பெற்ற நீசேயாவின் முதல் திருச்சங்கத்தின் 1700-வது ஆண்டு நிறைவு விழாவில் நிகழ்ந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டலில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய அருளுரை.
அன்பான சகோதரர் சகோதரிகளே,
பல துயரமான அடையாளங்களால் குறிக்கப்பட்ட வரலாற்றின் காலகட்டத்தில், மக்கள் தங்கள் மாண்பு எண்ணற்ற அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நீசேயாவின் முதல் திருச்சங்கத்தின் 1700-வது ஆண்டுவிழா, இன்றைய ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து யார், நம் ஒவ்வொருவருக்கும் அவர் யார் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள அருமையானதோர் வாய்ப்பாக அமைந்துள்ளது.
இயேசு கிறிஸ்துவை ஒரு வகையான வசீகரமான தலைவராகவோ அல்லது அதிமனிதனாகவோ (super man) எண்ணத்தோன்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது. ஆனால் இது இறுதியில் சோகத்திற்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கும் ஒரு தவறான விளக்கமாகும் (திருத்தந்தை 14-ஆம் லியோ மறையுரை, திருப்பலி புரோ எக்லேசியா, 9 மே 2025).
கிறிஸ்துவின் இறை இயல்பை மறுப்பதன் மூலம், அரியஸ் (Arius) அவரை கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையில் ஓர் இடைநிலையாளராகக் குறைத்து, மனுவுருவெடுத்தலின் எதார்த்தத்தைப் புறக்கணித்தார், இதனால் இறைமையும் மனிதமும் மீளமுடியாத அளவுக்குப் பிரிக்கப்பட்டன.
ஆனால் கடவுள் மனுவுரு எடுத்திருக்காவிடில், இறப்புக்குரிய உயிரினங்கள் அவருடைய நிலைவாழ்வில் எவ்வாறு பங்கேற்க முடியும்? நீசேயாவில் வெளிப்பட்ட நம்பிக்கை இன்றும் இருக்கின்றது. அது இயேசு கிறிஸ்துவின் வழியாக, இறை இயல்பில் பங்குகொள்ள நமக்கு உதவ நம்மைப் போல ஆன கடவுள் மீதான நமது நம்பிக்கை (2 பேதுரு 1:4; cf. Saint Irenaeus, Adversus Haereses, 3, 19; Saint Athanasius, De Incarnationale, 54, 3).
கிறிஸ்தவர்கள் முழுமையான ஒன்றிப்பை நோக்கி மேற்கொள்ளும் பயணத்தில், இந்தக் கிறிஸ்தியல் நம்பிக்கை அறிக்கை அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது உலகெங்கிலும் உள்ள அனைத்துத் தலத்திருஅவைகள் மற்றும் சமூகங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது, பல்வேறு காரணங்களுக்காக, தங்கள் வழிபாட்டு முறைகளில் நீசேயாவின் நம்பிக்கை அறிக்கையைப் பயன்படுத்தாதவை உட்பட. உண்மையில், "கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் காலங்களுக்கு எல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்" (நீசேயா நம்பிக்கை அறிக்கை), என்பது ஏற்கனவே அனைத்து கிறிஸ்தவர்களையும் ஒன்றிணைக்கும் ஓர் ஆழமான பிணைப்பாகும்.
இந்த அர்த்தத்தில், புனித அகுஸ்தினாரை மேற்கோள் காட்ட, கிறிஸ்தவ ஒன்றிப்பின் சூழமைவில், "கிறிஸ்தவர்கள் நாம் பலராய் இருந்தாலும், ஒரே கிறிஸ்துவில் நாம் ஒன்றாய் இருக்கிறோம்" (திருப்பாடல் 127 பற்றிய விளக்கம்) என்றும் கூறலாம். இதன் விளைவாக, நாம் ஏற்கனவே அத்தகைய ஆழமான பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து, இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் வார்த்தையை தூய ஆவியாரின் வழிகாட்டுதலின் கீழ், ஒருவருக்கொருவர்மீதான அன்பு மற்றும் உரையாடலில் மேலும் மேலும் ஆழமாகப் பின்பற்றும் பயணத்தைத் தொடரலாம்.
இந்த வழியில், எதிர்பாராதவிதமாக இன்னும் நிலவும் பிளவுகளின் அவதூறுகளை வென்று, ஆண்டவராகிய இயேசு இறைவேண்டல் செய்து தம் உயிரைக் கொடுத்த ஒன்றிப்புக்கான விருப்பத்தை வளர்க்க நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். நாம் எவ்வளவு அதிகமாக ஒப்புரவு செய்யப்படுகிறோமோ, அவ்வளவு அதிகமாக கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்கு நம்பகமான சான்றளிக்க முடியும். இது அனைவருக்கும் நம்பிக்கையின் அறிக்கை ஆகும். மேலும், இது நமது சமூகங்கள் மற்றும் நாடுகளின் எல்லைகளைக் கடந்து அமைதி மற்றும் உலகளாவிய உடன்பிறந்த உறவின் செய்தியாகும். (cf. Francis, Address to participants in the Plenary Session of the Pontifical Council for Promoting Christian Unity, 6 May 2022)
இன்று, வன்முறை மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள முழு மனிதகுலமும் ஒப்புரவிற்காகக் கூக்குரலிடுகிறது. இயேசு கிறிஸ்துவில் உள்ள அனைத்து விசுவாசிகளிடையேயும் முழுமையான ஒன்றிப்பிற்கான விருப்பம், அனைத்து மனிதர்களிடையே உடன்பிறந்த உறவுக்கான தேடலுடன் எப்போதும் இணைந்துள்ளது. நீசேயாவின் நம்பிக்கை அறிக்கையில், நாம் "ஒரே கடவுளான இறைத்தந்தைமீது நமது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம். இருப்பினும், கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மற்ற எல்லா ஆண்களையும் பெண்களையும் சகோதரர் சகோதரிகளாக அங்கீகரிக்க மறுத்தால், கடவுளை தந்தை என்று அழைக்க முடியாது (cf. Second Vatican Ecumenical Council, Declaration Nostra Aetate, 5).
நாடு, இனம், மதம் அல்லது தனிப்பட்ட கண்ணோட்டங்களைப் பொருட்படுத்தாமல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஓர் உலகளாவிய உடன்பிறந்த உறவு உள்ளது. மதங்கள், அவற்றின் இயல்பிலேயே, இந்த உண்மையின் கருவூலங்களாக திகழ்கின்றன. மேலும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் மக்கள் இதை அங்கீகரித்து நடைமுறைப்படுத்த ஊக்குவிக்க வேண்டும் (cf. Leo XIV, Address at the conclusion of the Meeting for Prayer for Peace, 28 October 2025). மேலும், போர், வன்முறை அல்லது எந்தவொரு அடிப்படைவாதம் அல்லது வெறித்தனத்தையும் நியாயப்படுத்த மதத்தைப் பயன்படுத்துவதை நாம் கடுமையாக நிராகரிக்க வேண்டும். அதற்குப் பதிலாக, உடன்பிறந்த உறவுக்கான சந்திப்பு, உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் பாதைகள் பின்பற்றப்பட வேண்டும்.
நீசேயா முதல் திருச்சங்கத்தின் 1700-வது ஆண்டு நிறைவை அது நடைபெற்ற இடத்திலேயே கொண்டாட மிகுந்த ஞானத்துடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் முடிவு செய்ததற்காக, முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கின்றேன். இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பை ஏற்றுக்கொண்ட தலத்திருஅவைத் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ உலக ஒன்றிப்பு பிரதிநிதிகளுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாம் வல்லவரும் இரக்கமுள்ளவருமான இறைத்தந்தையாகிய கடவுள், இன்று நாம் அவரிடம் எழுப்பும் உருக்கமான இறைவேண்டல்களுக்குச் செவிசாய்த்து, இந்த முக்கியமான ஆண்டுநிறைவு விழாவில் ஒப்புரவு, ஒன்றிப்பு மற்றும் அமைதியின் ஏராளமான பலன்களைத் தருவாராக!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
