ஏழைகளுடன் மதிய உணவைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒன்பதாவது உலக வறியோர் நாளன்று, வத்திக்கானிலுள்ள திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் ஏறத்தாழ 1,300 ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் மதிய உணவைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நவம்பர் 16, இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் எளிய உணவுகள், மனதுக்குப் இசை நிகழ்ச்சிகள் மற்றும் உடன்பிறந்த உறவையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் அழகிய சூழலும் இடம்பெற்றன.
இந்த உணவு விருந்தின்போது, தன்னார்வலர்களின் சேவைக்கு, குறிப்பாக, வின்சென்டே சபையினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த நாள் அர்ப்பணிப்பை நினைவு கூர்ந்ததுடன் உலகளவில் போர், வன்முறை மற்றும் பசியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவேண்டல் செய்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களில் இத்தாலி, உக்ரைன், நைஜீரியா, சோமாலியா, பெரு, கியூபா மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்தவர்களும் அடங்குவர், பலர் வேலை இழப்பு, இடப்பெயர்வு, நோய் மற்றும் போரின் தாக்கம் போன்ற துன்பங்கள் குறித்த தங்களின் தனிப்பட்ட கதைகளைச் சுமந்து வந்தனர். இந்தப் போராட்டங்களின் மத்தியிலும் கூட, பலர் தங்கள் நம்பிக்கை மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தினர்.
தன்னார்வலர்கள் உணவு மற்றும் தங்கள் தோழமையை வழங்கியதுடன், தனிப்பட்ட முறையில் உடைகளை பரிசாக வழங்கினர், அதேவேளையில், வீட்டிற்குப் பழங்கள் மற்றும் பரிசுக் கூடைகளை எடுத்துச் செல்ல விருந்தினர்களை ஊக்குவித்தார் திருத்தந்தை.
சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உடனிருப்பு மற்றும் ஒன்றிப்பின் ஒரு தருணத்தை உருவாக்குவதே இந்த நிகழ்வின் நோக்கமாக இருந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
