தேடுதல்

இயேசுவைப் பின்பற்றி, நீதி மற்றும் அமைதிக்குச் சான்று பகிர்வோம்!

வரலாற்று துயரங்கள் கடந்து போகும், கிறிஸ்துவை நம்புபவர்களின் மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திருக்கும். கடவுளின் ஞானத்தால் பலப்படுத்தப்பட்ட சகிப்புத்தன்மை, துன்பங்களில் விசுவாசிகளுக்கு வலிமையை அளிக்கிறது : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகில் துன்பம், வன்முறை மற்றும் அக்கறையின்மை நிலவி வரும் சூழலிலும் கூட கிறிஸ்தவர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், இயேசுவின் வார்த்தைகள், விசுவாசிகளின் நம்பிக்கையை தீமையால் வெல்ல முடியாது என்பதைக் காட்டுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 16, ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளையைச் சேர்ந்த ஏறத்தாழ 40,000 திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்துவுக்குச் சான்று பகர வேண்டும்

சோதனைகள், மோதல்கள் மற்றும் இறுதி காலங்களைப் பற்றிப் பேசும் இன்றைய வாசகமான லூக்கா  நற்செய்தியிலிருந்து (காண்க. லூக் 21: 5-19) தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இருள் சூழ்ந்த நேரத்தில்தான், கதிரவனைப் போல நம்பிக்கை அதிகமாக ஒளிர்கின்றது என்றும் மொழிந்தார்.

உடல் ரீதியாகவோ அல்லது பொய்கள் மற்றும் தவறான கருத்தியல் அழுத்தம் மூலமாகவோ துன்புறுத்தப்பட்டாலும் கூட, கிறிஸ்தவர்கள் சிலுவையில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, உண்மை, நீதி மற்றும் அமைதிக்குச் சான்று பகர அழைக்கப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

வரலாற்றுத் துயரங்கள் கடந்து போகும்

வரலாற்றுத் துயரங்கள் கடந்து போகும் என்றும், கிறிஸ்துவை நம்புபவர்களின் மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, கடவுளின் ஞானத்தால் பலப்படுத்தப்பட்ட சகிப்புத்தன்மை, துன்பங்களில் விசுவாசிகளுக்கு  வலிமையை அளிக்கிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

இறுதியாக, மறைச்சாட்சிகளின் சான்று வாழ்வை எடுத்துரைத்ததுடன், துன்பப்படுபவர்கள் அனைவரையும் கிறிஸ்தவர்களின் சகாய அன்னையாம் மரியாவிடம் ஒப்படைத்து, அவரிடம் ஆறுதலையும் பாதுகாப்பையும் வேண்டி தனது மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 நவம்பர் 2025, 11:17