தேடுதல்

நேர்காணல் வழங்கும் ஆயர் Paolo Bizzeti. நேர்காணல் வழங்கும் ஆயர் Paolo Bizzeti. 

திருத்தந்தையின் வருகை, கிறிஸ்தவச் சமூகத்தை வலுப்படுத்தும்!

திருத்தந்தையின் வருகை, கிறிஸ்தவச் சமூகத்தை வலுப்படுத்தும் அதேவேளை, துருக்கி காரித்தாஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு புத்தெழுச்சியை அளிக்கும் : ஆயர் Paolo Bizzeti.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“நவம்பர் மாத இறுதியில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் துருக்கி நாட்டிற்கு மேற்கொள்ளவிருக்கின்ற திருத்தூதுப் பயணம் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் நோக்கத்தைப் புத்துயிர் பெறச் செய்ய ஒரு வாய்ப்பாக அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஆயர் Paolo Bizzeti.

நவம்பர் 10 இத்திங்களன்று, வத்திக்கான் வானொலிக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள அனத்தோலியாவின் முன்னாள் திருத்தந்தையின் பிரதிநிதி ஆயர் Bizzeti அவர்கள், கிறிஸ்தவர்களுக்கும், பல் மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

துருக்கியின் மதப் பன்முகத்தன்மையை - இஸ்லாம் (பல்வேறு மரபுகள்) முதல் அறிதலியலாக்கொள்கை (agnosticism) மற்றும் கிறிஸ்தவச் சிறுபான்மையினர் வரை தனது சிந்தனைகளை வழங்கியுள்ள ஆயர், அங்குக் கட்டுப்பாட்டுச் சட்டங்களால் கத்தோலிக்கர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு துருக்கியிலுள்ள காரித்தாஸ் நிறுவனம் மேற்கொண்ட நிவாரணப் பணிகளை நினைவு கூர்ந்த ஆயர், இது முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஒத்துழைப்பை வளர்த்தது மற்றும் ஏழைகளுக்கான சேவை மூலம் "வாழ்க்கையின் உரையாடலை" எடுத்துக்காட்டியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தந்தையின் வருகை, கிறிஸ்தவச் சமூகத்தை வலுப்படுத்தும் அதேவேளை, துருக்கி காரித்தாஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்குப் புத்தெழுச்சியை அளிக்கும் என்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு சேவை செய்வதற்கான அவர்களின் நோக்கத்தை உறுதிப்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஆயர் Bizzeti.

முதல் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பொதுச் சங்கத்தின் 1,700வது ஆண்டு விழாவிற்காக திருத்தந்தை லியோ அவர்கள்  அங்காரா, இஸ்தான்புல் மற்றும் இஸ்னிக் (நீசேயா) ஆகிய இடங்களுக்குச் செல்கின்றார் என்றும், இப்பயணம் ஒன்றிப்பு மற்றும் நம்பிக்கை புதுப்பித்தலில் ஒரு வாய்ப்பை வழங்கும் விதமாக அமையும் என்றும் உரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 நவம்பர் 2025, 14:38