தேடுதல்

திருஅவை, வளர்ச்சியின் இடமாகத் திகழும் ஒரு "கட்டுமானத் தளம்"

“உண்மையான வழிபாட்டு முறை, தெய்வீக அன்பை அதன் எளிமை மற்றும் நல்லிணக்கத்தின் வழியாக வெளிப்படுத்துகிறது, கடவுளின் வாழும் கோவிலாகத் திருச்அவையை வளர்க்கிறது” : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு, அனைத்துக் கிறிஸ்தவர்களும் தங்கள் வாழ்க்கையையும் சமூகங்களையும் உண்மையான அடித்தளமான கிறிஸ்துவின் மீது கட்டியெழுப்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைவூட்டுகிறது என்றும், விசுவாசம், பணிவு மற்றும் அன்பின் வழியாக திருஅவையின் வழிபாட்டு முறையின் அழகு மற்றும் ஒன்றிப்பில் முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 9, இஞ்ஞாயிறன்று, புனித இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்புப் பெருவிழாச் சிறப்பிக்கப்பட்ட வேளை, உரோமையிலுள்ள இப்பெருங்கோவிலில் தலைமையேற்று நிகழ்த்திய சிறப்புத் திருப்பலியில் இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

அனைத்துக் கோவில்களுக்கும் தாய்க்கோவில்

புனித இலாத்தரன் பெருங்கோவில் ‘அனைத்துக் கோவில்களின் தாய்க்கோவில்’ என்று தனது மறையுரையில் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அதனின் ஆன்மிக அர்த்தத்தைக் குறித்தும் தனது மேலான சிந்தனைகளை விசுவாசிகளுடன் பகிர்ந்துகொண்டார்.

இந்த விழா ஒரு வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் அதேவேளையில், பேரரசர் கான்ஸ்டன்டைன் மற்றும் திருத்தந்தை முதலாம் சில்வெஸ்டரின் மேற்பார்வையின் கீழ் இப்பெருங்கோவில் கட்டப்பட்டது என்றும், இது எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான திருஅவை என்பது "உயிருள்ள கற்களால்" ஆனது என்பதை நினைவூட்டுகிறது, அதாவது விசுவாசிகள் தாங்களாகவே, மூலைக்கல்லான கிறிஸ்துவின் மீது கட்டப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

வாழ்வு கிறிஸ்துவின் நற்செய்தியில் கட்டப்பட வேண்டும்

உறுதியான அடித்தளங்களின் முக்கியத்துவத்தை தனது மறையுரையில் வலியுறுத்திய திருத்தந்தை, புனித இலாத்தரன் பெருங்கோவில் உறுதியான அடித்தளத்தில் நிற்பது போல, விசுவாசிகளும் தங்கள் வாழ்க்கையையும் சமூகங்களையும் இயேசு கிறிஸ்துவிலும் நற்செய்தியிலும் நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உலகப் பொறுமையின்மையால் இயக்கப்படும் மேலோட்டமான அல்லது அவசரமான கட்டிடம் திருஅவையைத் தாங்க முடியாது. மாறாக, விசுவாசம், அன்பு மற்றும் பணியின் நீடித்த சமூகத்தைக் கட்டியெழுப்ப பணிவு, பொறுமை மற்றும் தூய ஆவியாரிடம் திறந்த மனம் கொண்டிருத்தல் ஆகியவை தேவை என்று சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் சக்கேயுவின் வாழ்வை (காண்க. லூக் 19:1–10) எடுத்துக்காட்டி, தனிப்பட்ட மனமாற்றம் மற்றும் பணிவின் அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை, மரத்தின்மீது ஏறி இயேசுவைக் காண விரும்பிய அவரது ஆர்வமும், தனது தற்பெருமையை வீழ்த்த அவர் கொண்ட விருப்பமும் அவரை கிறிஸ்துவைச் சந்திக்க வழிவகுத்தது என்பது கிறிஸ்தவர்கள் கடவுளின் அழைப்பால் எவ்வாறு தங்களை மாற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு முன்மாதிரி என்றும் குறிப்பிட்டார்.

திருஅவை ஒரு 'கட்டுமானத் தளம்'

திருஅவையை "கட்டுமானத் தளம்" என்று ஒப்பிட்டுக்கட்டி, இது சுறுசுறுப்பான, சில வேளைகளில் கடினமான, ஆனால் பலனளிக்கும் வளர்ச்சியின் இடமாகத் திகழ்கிறது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

மேலும் நடந்து கொண்டிருக்கும் ஒன்றிணைந்த செயல்முறையைப் பற்றி குறிப்பிட்டுக்காட்டிய திருத்தந்தை, விடாமுயற்சியையும் நம்பிக்கையையும் விசுவாசிகளிடம் ஊக்குவித்ததுடன், உண்மையான முன்னேற்றமும், ஒத்துழைப்பும், பொறுமை மற்றும் கடவுள் நம்பிக்கை வழியாக வருகின்றன என்பதை அவர்களுக்கு நினைவூட்டினார்.

உண்மையான வழிபாடு தெய்வீக அன்பை வெளிப்படுத்துகிறது

இறுதியாக, திருஅவை மற்றும் வாழ்க்கையின் உச்சமாகவும் தோற்றுவாயாகவும் விளங்கும் வழிபாட்டு முறையைப் பற்றி பேசிய திருத்தந்தை, விதிமுறைகளை மதித்தல், கலாச்சாரத்தை வளர்த்தல் மற்றும் உரோமைப் பாரம்பரியத்தின் புனிதமான அழகைப் பாதுகாத்தல் அடிப்படையில் அதைக் கொண்டாடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் உண்மையான வழிபாட்டு முறை, தெய்வீக அன்பை அதன் எளிமை மற்றும் நல்லிணக்கத்தின் வழியாக வெளிப்படுத்துகிறது என்றும், கடவுளின் வாழும் கோவிலாகத் திருஅவையை வளர்க்கிறது என்றும் கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 நவம்பர் 2025, 13:22