தேடுதல்

திருப்பலியில் மறையுரை வழங்கும் திருத்தந்தை திருப்பலியில் மறையுரை வழங்கும் திருத்தந்தை   (ANSA)

உலகில் விண்மீன்களைப் போல ஒளிர்ந்திடுங்கள்!

மக்கள் தங்கள் முழு மனித மாண்புடன் விண்மீன்களைப் போல ஒளிவீசும்படி, அவர்களை உருவாக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் - திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வாழ்க்கை முழுமையாக சுடர்ந்து ஒளிவீசுவது, நாம் பணக்காரர்களாகவோ, அழகாகவோ அல்லது வலிமை வாய்ந்தவர்களாகவோ இருப்பதால் அல்ல. மாறாக, நாம் கடவுளால் அழைக்கப்பட்டுள்ளோம், நமக்கு ஒரு பணி உள்ளது, ஒரு குறிக்கோள் உள்ளது, நம் வாழ்க்கை நம்மை விட உயர்ந்த ஒன்றைச் செய்கிறது என்ற உண்மையை நமக்குள் கண்டறியும்போது அது ஒளிர்கிறது என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 1, சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துப் புனிதர் பெருவிழா மற்றும் கல்வி உலகத்தின் யூபிலிக்கான திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, உலகில் விண்மீன்களைப் போல ஒளிர்ந்திடுங்கள் என்று கல்வியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

நியூமன் திருஅவையின் கல்விப் பணியின் இணைப் பாதுகாவலர்

இந்த அனைத்து புனிதர்களின் பெருவிழாவில், திருஅவையின் மறைவல்லுநர்களில் புனித ஜான் ஹென்றி நியூமனை சேர்க்கும் அதேவேளையில், கல்வி உலகத்தின் யூபிலி  விழாவில், திருஅவையின் கல்விப் பணியின் இணைப் பாதுகாவலராகப் புனித தாமஸ் அக்வினாஸுடன் சேர்ந்து அவரைப் பெயரிடுவதும் பெருமகிழ்வளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் சவால்கள் மத்தியிலும் கூட, புனித ஜான் ஹென்றி நியூமனின் வாழ்க்கையும் கருத்துக்களும் எதிர்கால சந்ததியினரை உண்மையையும் மகத்துவத்தையும் தேட ஊக்குவிக்கும் என்று மொழிந்தார் திருத்தந்தை.

உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்

"உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்" (பிலி 2:15) என்ற அப்போஸ்தலிக்கப் பொறுப்பாணையைப் (mandate) புறக்கணிக்காமல், நிகழ்காலத்தின் சிக்கலான தன்மையின் மத்தியில் முழுமையான ஆர்வத்துடன் வாழ்வது சாத்தியம் என்பதை புனிதர்களின் வாழ்க்கை நமக்குக் கற்பிக்கிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

உண்மையைப் பின்தொடர்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதன் வழியாகவும், இளைஞர்களுக்கு குறிப்பாக, ஏழைகளுக்கு சேவை செய்வதன் வழியாகவும், கிறிஸ்தவ அன்பு  முன்னுணர்ந்துரைக்கிறது மற்றும் அருளடையாளங்களை நிகழ்த்துகிறது என்பதைக் காட்டுவதன் வழியாகவும் உலகில் விண்மீன்களைப் போல ஒளிர்ந்திட அவர்களை வலியுறுத்தினார் திருத்தந்தை.

கல்வி என்பது ஓர் "எதிர்நோக்கின் திருப்பயணம்"

கல்வி என்பது ஓர் "எதிர்நோக்கின் திருப்பயணம்" என்றும், பள்ளிகளும் பல்கலைக் கழகங்களும் எதிர்நோக்கை வளர்த்து நடைமுறைப்படுத்தப்படும் "முன்னுணர்ந்துரைக்கிற (prophetic) ஆய்வகங்களாக" இருக்க வேண்டும் என்றும் உறுதிப்படுத்தினார் திருத்தந்தை.

இயேசுவின் மலைப்பொழிவைக் குறித்துச் சிந்தித்த திருத்தந்தை, அவற்றை இயேசுவின் போதனையின் மையமாகவும், கிறிஸ்தவக் கல்வியின் அடித்தளமாகவும் விவரித்ததுடன், ஏழைகள், தாழ்ச்சிக் குணம் கொண்டவர்கள் மற்றும் அமைதியை ஏற்படுத்துபவர்கள் உண்மையிலேயே ஆசீர்பெற்ற ஒரு தெய்வீகக் கண்ணோட்டத்தை அவை வெளிப்படுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

இயேசு மிகச்சிறந்த குருவாகவும் கல்வியாளராகவும் காட்டப்படுகிறார் என்றும், மேலும் கத்தோலிக்க நிறுவனங்கள் நற்செய்தியைக் கேட்கவும், அதனை வாழ்ந்து காட்டவும் கூடிய இடங்களாகத் திகழ்ந்திட அழைக்கப்படுகின்றன என்றும் எடுத்துக்காட்டினார்.

நம்பிக்கையை விட்டுவிட அச்சுறுத்தும் அவநம்பிக்கை மற்றும் நீலிசத்திற்கு (nihilism) எதிராக எச்சரித்த திருத்தந்தை, நியூமனின் "தயவுகூர்ந்து ஒளியை நோக்கி நடத்தும்" (Lead, Kindly Light) என்ற பாடலை கல்வியாளரின் பணிக்கான உருவகமாகப் பயன்படுத்தி, சுற்றிலுமுள்ள இருள் வழியாக மற்றவர்களை ஒளியைநோக்கி வழிநடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் கல்வி, இந்த ஒளியைப் பரப்ப வேண்டும், உரையாடல், அமைதி மற்றும் நீதியை ஊக்குவிப்பதன் வழியாக, அச்சம் மற்றும் நம்பிக்கையற்ற நிலையை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.

கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்துங்கள்

திருப்பலியின் இரண்டாவது வாசகமான திருவெளிப்பாட்டை (காண்க. திவெ 7: 2-4, 9-14) குறித்துக்காட்டிய திருத்தந்தை, ஒவ்வொரு நபரின் மனித மாண்பையும் குறிப்பாக, பலவீனமானவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள் அல்லது குறைந்த திறமை கொண்டவர்களை அங்கீகரிக்கவும், அனைவருக்கும் சமமான மதிப்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தவும் கல்வியாளர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

மேலும் கல்வியின் மதிப்பு என்பது, போராடுபவர்களை அல்லது குறைவான வாய்ப்புகளைக் கொண்டவர்களை அது எவ்வாறு நடத்துகிறது என்பதைப் பொறுத்தது என்றும் கல்வியாளர்களுக்கு எடுத்துக்காட்டினார்.

ஒவ்வொரு நபருக்கும் கடவுளால் அருளப்பட்ட ஒரு தனித்துவமான பணி உள்ளது என்ற நியூமனின் நம்பிக்கையை மேற்கோள் காட்டி, கல்வி ஒவ்வொரு நபருக்கும் இந்த அழைப்பைக் கண்டறிய உதவ வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, உண்மையான ஞானம் என்பது செல்வத்தினாலோ அல்லது அதிகாரத்தினாலோ வருவதில்லை, மாறாக ஒருவரின் இறைப்பணியை உணர்ந்து, தன்னை விட உயர்ந்த ஒன்றிற்காக வாழ்வதிலிருந்தே வருகிறது என்று விளக்கினார் திருத்தந்தை.

கல்வி என்பது புனிதத்திற்கான உலகளாவிய அழைப்பு

இறுதியாக, கல்வியை புனிதத்திற்கான உலகளாவிய அழைப்புடன் இணைத்து, ஒவ்வொரு நபரும் ஒரு புனிதராக மாற உதவுவதே அதன் குறிக்கோள் என்பதை விசுவாசிகளுக்கு நினைவூட்டிய திருத்தந்தை, முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மற்றும் புனித அகுஸ்தினாரை மேற்கோள் காட்டி, அனைத்து விசுவாசிகளும் கிறிஸ்துவின் ஒரே பள்ளியில் சக மாணவர்கள் என்றும், அப்பள்ளியின் இருக்கை விண்ணகத்தில் இருக்கின்றது என்றும் கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 நவம்பர் 2025, 15:30