நம்மை ஒன்றிணைக்கும் நம்பிக்கை ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நவம்பர் 28, வெள்ளிக்கிழமை, காலை 09.30 மணிக்கு இஸ்தான்புல்லிலுள்ள தூய ஆவியார் பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், அருள்பணித்துவ மாணவர்கள் மற்றும் பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களுக்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய அருளுரை.
அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே,
உங்களுடன் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது முதல் திருத்தூதுப் பயணத்தில், இஸ்ரேல் மக்களின் கதை கிறிஸ்தவத்தின் பிறப்பைச் சந்திக்கும் இடமான துருக்கி என்ற "புனித நிலத்தைப்" பார்வையிட எனக்கு அருள் செய்ததற்காக நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் தழுவிய இடம் மற்றும் ஏராளமான திருச்சங்கங்களின் பக்கங்கள் எழுதப்பட்ட இடம் இது.
நம்மை ஒன்றிணைக்கும் நம்பிக்கை ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. கடவுளின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து, நம் தந்தை ஆபிரகாம் கல்தேயர்களின் ஊர் நகரத்திலிருந்து புறப்பட்டு, பின்னர், இன்றைய துருக்கியின் தெற்கே உள்ள ஹரான் பகுதியிலிருந்து, வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குப் புறப்பட்டார் (தொநூ 12:1). இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அவரது சீடர்களும் அனத்தோலியாவுக்கு வந்தனர். புனித இஞ்ஞாசியார் ஆயராக இருந்த அந்தியோகியாவில், அவர்கள் முதல் முறையாக "கிறிஸ்தவர்கள்" என்று அழைக்கப்பட்டனர் (திப 11:26). அந்த நகரத்திலிருந்து, புனித பவுல் தனது சில திருத்தூதுப் பயணங்களைத் தொடங்கினார், இது பல சமூகங்களை நிறுவ வழிவகுத்தது.
மேலும், பைசண்டைன் பேரரசின் மகத்தான வரலாறு, கான்ஸ்டான்டினோபிள் திருஅவையின் மறைப்பணி உந்துதல் மற்றும் லெவண்ட் முழுவதும் கிறிஸ்தவம் பரவியது குறித்து நாம் போற்றுதலுடன் நினைவு கூர்கிறோம். இன்றும் கூட துருக்கியில் கீழைவழிபாட்டு முறை கிறிஸ்தவர்களின் பல சமூகங்கள் உள்ளன - ஆர்மீனியர்கள், சிரியர்கள் மற்றும் கல்தேயர்கள் - அதே போல் இலத்தீன் வழிபாட்டு முறையைச் சேர்ந்தவர்களும். கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையின் ஆட்சி அதன் கிரேக்க விசுவாசிகளுக்கும் பிற ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளுக்கும் மேற்கோள்காட்டப்படும் ஒரு குறிப்பு புள்ளியாக உள்ளது.
தூய ஆவியில் அறிவொளிபெற்ற நற்செய்திப் பார்வை
அன்புள்ள நண்பர்களே, வளமையான இந்த நீண்ட நெடிய வரலாற்றிலிருந்து உங்கள் சமூகங்கள் வெளிப்பட்டன, மேலும் ஆபிரகாம், திருத்தூதர்கள் மற்றும் முதுபெரும் தந்தையர்கள் நமக்குக் கொடுத்த விசுவாச விதையை வளர்க்க இன்று நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். கத்தோலிக்கத் திருஅவை எண்ணிக்கையில் எவ்வளவு சிறியதாகிவிட்டது என்பதை நாம் மனத்தாழ்மையுடன் பார்க்கும்போது, உங்களுக்கு முந்தைய வரலாறு வெறுமனே நினைவில் வைக்கப்பட்டு, பின்னர் ஒரு புகழ்பெற்ற கடந்த காலமாக போற்றப்பட வேண்டிய ஒன்றல்ல. மாறாக, தூய ஆவியால் அறிவொளி பெற்ற ஒரு நற்செய்திப் பார்வையை ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.
மிகச் சிறிய வழியில் (littleness) பயணிக்கும் திருஅவை
நாம் கடவுளின் கண்கள் கொண்டு பார்க்கும்போது, அவர் நம் நடுவில் இறங்கி, சின்னஞ்சிறிய வழியைத் தேர்ந்தெடுத்திருப்பதைக் காண்கிறோம். இதுவே இயேசுவின் வழி, இதற்கு நாம் சான்றுபகர அழைக்கப்படுகிறோம். இந்த சின்னஞ்சிறிய கருத்தியல்தான் திருஅவையின் உண்மையான பலம். திருஅவை என்பது அதன் வளங்கள் அல்லது கட்டமைப்புகளில் இல்லை, மேலும் அதன் பணியின் பலன்கள் எண்ணிக்கை, பொருளாதார வலிமை அல்லது சமூக செல்வாக்கைப் பொறுத்தது அல்ல. மாறாக, திருஅவை என்பது செம்மறியாகிய இயேசுவின் ஒளியால் வாழ்கிறது; அவரைச் சூழ்ந்துகொண்ட நிலையில் அது, தூய ஆவியாரின் வலிமையால் உலகிற்கு அனுப்பப்படுகிறது.
"சிறிய தன்மையின் பாதையைப் பின்பற்றாத விசுவாசிகள், அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களைக் கொண்ட ஒரு கிறிஸ்தவச் சமூகத்திற்கு எதிர்காலம் இல்லை... இறையாட்சி சிறிய காரியங்களில், எப்போதும் சிறியவற்றில் துளிர்விடுகிறது" என்று கூறிய கூறிய முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளையும் நினைவில் கொள்வோம் (சாந்தா மார்த்தா மறையுரை, 3 டிசம்பர் 2019).
மிகவும் அழகான மற்றும் நம்பிக்கைக்குரிய அடையாளங்களில், தங்கள் கேள்விகள் மற்றும் கவலைகளுடன் கத்தோலிக்க திருஅவையின் கதவுகளைத் தட்ட வரும் பல இளைஞர்களை நான் நினைக்கிறேன். இந்த விடயத்தில், நீங்கள் செய்து வரும் நல்ல மேய்ப்புப் பணியைத் தொடருமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்களுக்குச் செவிசாய்த்து அவர்களுடன் பயணிக்கவும், துருக்கியில் உள்ள தலத்திருஅவை சேவை செய்ய அழைக்கப்படும் பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தவும் நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.
பண்பாட்டுமயமாக்கலுக்கு ஒரு சிறப்பு அர்ப்பணிப்பு தேவை
இந்த இறுதிக் கருத்து சிறப்பு சிந்தனைக்கு உரியது. இந்த நாட்டில் புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோரின் குறிப்பிடத்தக்க இருப்பு, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சிலரை வரவேற்று சேவை செய்யும் சவாலை தலத்திருஅவைக்கு முன்வைக்கிறது. அதே நேரத்தில், இந்தத் துருக்கி தலத்திருஅவை பெரும்பாலும் வெளிநாட்டினரை அதிகம் கொண்டுள்ளது. மேலும் உங்களில் பலர் - அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் மேய்ப்புப்பணியாளர்கள் பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள். துருக்கியின் மொழி, பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரம் மேலும் மேலும் உங்கள் சொந்தமாக மாறுவதற்கு, பண்பாட்டுமயமாக்கலுக்கு ஒரு சிறப்பு அர்ப்பணிப்பு தேவை. மேலும், நற்செய்தியின் தொடர்பு எப்போதும் அத்தகைய பண்பாட்டுமயமாக்கல் வழியாகவே செல்கிறது.
நீசேயாவின் முதல் திருச்சங்கம் முன்வைக்கும் 3 சவால்கள்
உங்களுடைய இந்த நாட்டில்தான் முதல் எட்டு கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருச்சங்கங்கள் நடத்தப்பட்டன என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்த ஆண்டு நீசேயாவின் முதல் திருச்சங்கத்தின் 1700-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, இது "திருஅவையின் வரலாற்றில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வரலாற்றிலும் ஒரு மைல்கல்" (பிரான்சிஸ், அனைத்துலக இறையியல் பணியக உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரை, 28 நவம்பர் 2024). இந்த எப்போதும் பொருத்தமான நிகழ்வு, நான் குறிப்பிட விரும்பும் பல சவால்களை நம் முன் வைக்கிறது.
01. நீசேயாவின் நம்பிக்கை அறிக்கையை மையமாகக் கொண்ட கிறிஸ்தவ விசுவாசத்தின் சாரத்தை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம்.
02. நீசேயாவில் உறுதிப்படுத்தப்பட்டபடி, இயேசுவை உண்மையான மற்றும் உயிருள்ள கடவுளாக அங்கீகரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அவரை வெறும் ஒரு வரலாற்று நபராகக் குறைப்பதன் ஆபத்து.
03. நமது காலத்தின் கலாச்சாரங்களுக்குப் பொருத்தமான வழிகளில் வெளிப்படுத்தப்பட வேண்டிய கிறிஸ்தவ கோட்பாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சி.
அன்புள்ள நண்பர்களே, இறுதியாக, எனது உரையை முடிப்பதற்கு முன், இந்த நாட்டின் மக்களை அன்புகூர்ந்து பணியாற்றிய உங்களுக்கு மிகவும் பிடித்தவரான, திருத்தந்தை புனித 23-ஆம் ஜான் அவர்களை நினைவு கூர விரும்புகிறேன். "என் இதயத்தில் நான் உணருவதை நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன்: நான் இந்த நாட்டையும் அதன் மக்களையும் அன்பு கூர்கிறேன்" என்று எழுதினார்.
இயேசுவின் துணிவுமிகு மீனவர்களாகப் பணியாற்றுங்கள்
விசுவாசத்தின் மகிழ்ச்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், இயேசுவினுடைய படகில் துணிவுமிகு மீனவர்களாகத் தொடர்ந்து பணியாற்றவும், நீங்கள் அதே ஆர்வத்தால் தூண்டப்படுவீர்கள் என்று நம்புகிறேன். மூவொரு கடவுளின் அன்னையாம் கன்னி மரியா, உங்களுக்காகப் பரிந்து பேசி, உங்களைத் தன் பராமரிப்பில் வைத்திருக்கட்டும். உங்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
