தேடுதல்

இயேசுவே நமக்கு உண்மையான புனிதக் கோவில்!

"கிறிஸ்தவர்கள், உயிருள்ள கற்களாக, திருஅவையின் ஆன்மிகக் கட்டிடத்தை உருவாக்குகிறார்கள், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இரக்கம், அமைதி மற்றும் ஆறுதலின் நற்செய்தியைப் பரப்ப அழைக்கப்படுகிறார்கள்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் வத்திக்கான்

“இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய நிகழ்வு குறித்த இன்றைய நற்செய்தி, நமக்கு கடவுளின் உண்மையான புனிதக் கோவில் என்பது இறந்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவே என்பதை நினைவூட்டுகிறது” என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 9, ஞாயிறன்று, புனித இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்புப் பெருவிழாச் சிறப்பிக்கப்பட்ட வேளை,  வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளையைச் சேர்ந்த எண்ணற்ற திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, இயேசுவே மீட்பின் ஒரே இடைநிலையாளர், ஒரே மீட்பர் என்றும் மொழிந்தார்.

குறிப்பாக, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை வளர்க்கும் அன்னையாக விளங்கும்  உரோமைத்  திருஅவையை மையமாகக் கொண்டு, அதன் உறவு ஒன்றிப்பு மற்றும் ஒற்றுமையின் மறைபொருளைப் பற்றி தனது சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

இலாத்தரன் பெருங்கோவில் வரலாற்று ரீதியாகவும் கலை ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தபோதிலும், அப்போஸ்தலர்களால் வழங்கப்பட்ட விசுவாசத்தின் பெரும்வலிமையைக் குறிக்கிறது என்பதை வலியுறுத்தினார் திருத்தந்தை.

இயேசுவே கடவுளின் உண்மையான தூய கோவில்

கடவுளின் உண்மையான தூய கோவில் என்பது ஓர் இயற்பொருள் சார்ந்த கட்டிடம் அல்ல, மாறாக, அது மீட்பரான இயேசு கிறிஸ்துவே என்றும், அவர் தனது இறப்பு  மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக மனிதகுலத்தை கடவுளுடன் இணைக்கிறார் என்றும் எடுத்துக்காட்டினார்.

கிறிஸ்தவர்கள், உயிருள்ள கற்களாக, திருஅவையின் ஆன்மிகக் கட்டிடத்தை உருவாக்குகிறார்கள் என்றும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இரக்கம், அமைதி மற்றும் ஆறுதலின் நற்செய்தியைப் பரப்ப அழைக்கப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

திருஅவையில் மனித குறைபாடுகள் மற்றும் தோல்விகள் இருந்தபோதிலும், அதன் புனிதத்தன்மை மனித தகுதியைச் சார்ந்தது அல்ல, மாறாக கடவுளின் நீடித்த அருளைச் சார்ந்தது என்பதை உணர்ந்து, அதனை ஆன்மிகக் கண்ணோட்டத்தில் பார்க்குமாறு விசுவாசிகளுக்கு நினைவூட்டினார்.

கிறிஸ்தவர்கள் கடவுளின் தூய மக்களினம்

கிறிஸ்தவர்கள் கடவுளின் தூய மக்களினம் என்ற அடையாளத்தில் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்திய திருத்தந்தை, கிறிஸ்துவைத் தழுவி அவரது பாதையைப் பின்பற்ற கிறிஸ்தவர்களுக்கு உதவி புரிய திருஅவையின் அன்னையாம் கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டியும், தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கியும் மூவேளை இறைவேண்டல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 நவம்பர் 2025, 13:29