திருத்தந்தையின் மூன்றாம் நாள் நிகழ்வுகள்
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
நவம்பர் 29, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது மூன்றாம் நாள் திருத்தூதுப் பயணத்தை நீல மசூதி என்று அழைக்கப்படும் சுல்தான் அகமது மசூதியில் தொடங்கினார். இம்மசூதியின் உள்ளே சென்ற திருத்தந்தை, அமைதி மற்றும் தியான மனநிலையுடன் சிறிதுநேரம் செலவிட்டார்.
அந்த இடத்திற்கும், அங்குக் கூடி இறைவேண்டல் செய்பவர்களின் நம்பிக்கைக்கு மரியாதை அளித்தார். அவ்விடத்தின் வரலாற்றைக் குறித்து அவருடன் வந்த இஸ்லாமிய தலைவர்கள் அவருக்கு விளக்கிக் கூறினர். மிகுந்த மரியாதையுடன் அவர்களின் விளக்கங்களுக்குச் செவிமடுத்தார் திருத்தந்தை.
அன்று காலை மசூதிக்கு வந்த திருத்தந்தை லியோ அவர்களுடன், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் மெஹ்மத் நூரி எர்சோய் அவர்கள், இஸ்தான்புல் மாநிலத்தின் முப்தி எம்ருல்லா துன்செல்; மற்றும் சுல்தான் அகமது, மசூதியின் இமாம் குர்ரா ஹபீஸ் ஃபாத்தி கயா ஆகியோர் உடனிருந்தனர்.
இஸ்னிக் நிறுவனத்தால் கட்டப்பட்ட 21,000-க்கும் மேற்பட்ட பீங்கான் ஓடுகள், கட்டிடத்தின் சுவர்கள் நீல நிறத்தில் வரையப்பட்டிருந்ததால், நீல மசூதி என்ற புனைப்பெயர் உருவானது இந்த மசூதி, 1617-ஆம் ஆண்டில் சுல்தான் முதலாம் அகமது அவர்களால் கான்ஸ்டான்டிநோபிளின் பெரிய அரண்மனை இருந்த இடத்தின் ஒரு பகுதியில் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த மசூதியை ஒட்டோமான் பேரரசின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலமாக மாற்றுவதே இலக்காக இருந்தது. தற்போது டோப்காபி நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள எட்டு தொகுதிகள், மசூதியின் கட்டுமானத்தை ஆவணப்படுத்தியுள்ளன.
நீல மசூதியைப் பார்வையிட்ட பிறகு, மோர் எஃப்ரெமில் உள்ள சிரியாக் ஆர்த்தடாக்ஸ் கோவிலில் தலத்திருஅவைத் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவச் சமூகங்களின் தலைவர்களுடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார் திருத்தந்தை.
தனது முன்னோடிகளான திருத்தந்தையர் பிரான்சிஸ் மற்றும் பதினாறாம் பெனடிக்ட் ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நீல மசூதிக்குச் செல்லும் மூன்றாவது திருத்தந்தை, திருத்தந்தை பதினான்காம் லியோ ஆவார்.
கடந்த 2001-ஆம் ஆண்டு சிரியாவிற்கு மேற்கொண்ட தனது திருத்தூதுப் பயணத்தின் போது தமஸ்கஸில் உள்ள உமையாத் மசூதிக்கு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், வரலாற்று சிறப்புமிக்க ஒரு வருகையை மேற்கொண்டார். அதன் பிறகு, வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு மசூதிக்குச் சென்ற நபராக திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் வருகை அமைந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
