தேடுதல்

துருக்கியில் திருத்தந்தைக்கு உற்சாக வரவேற்பு!

இந்தப் பயணத்தை நினைவுகூரும் வகையில் "துருக்கி நாட்டிற்கு வருகை தர முடிந்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன், மேலும் இந்த நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நிறைவான அமைதி மற்றும் வளமை கிடைக்க நான் இறைவேண்டல் செய்கிறேன்" என்று அங்கிருந்த தங்கப்புத்தகத்தில் கையெழுத்திட்டார் திருத்தந்தை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் துருக்கி மற்றும் லெபனான் நாடுகளுக்கு மேற்கொள்ளும் ஆறு நாள் பயணத்தின் முதல் நாளான நவம்பர் 27, வியாழக்கிழமையன்று, துருக்கியின் தலைநகர் அங்காரா வந்தடைந்தார். திருதந்தையாக தலைமைப் பொறுப்பை ஏற்றபிறகு இது அவரது முதல் திருத்தூதுப் பயணமாகும்.

திருத்தந்தையை விமான நிலையத்தில் துருக்கியின் கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் மெஹ்மத் நூரி எர்சோய் அவர்கள் வரவேற்றார். அதிகாரப்பூர்வ வரவேற்பு விழாவிற்குப் பிறகு, துருக்கி குடியரசின் தந்தை முஸ்தபா கெமால் அதாதுர்க்கின் கல்லறை நினைவிடத்திற்குச் சென்று ம்லர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தப் பயணத்தை நினைவுகூரும் வகையில் "துருக்கி நாட்டிற்கு வருகை தர முடிந்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன், மேலும் இந்த நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நிறைவான அமைதி மற்றும் வளமை கிடைக்க நான் இறைவேண்டல் செய்கிறேன்" என்று அங்கிருந்த தங்கப்புத்தகத்தில் கையெழுத்திட்டார் திருத்தந்தை.

அதன் பிறகு குதிரைப் படை புடைசூழ அரசுத் தலைவர் அரண்மனைக்கு சென்ற திருத்தந்தையை, அரசுத் தலைவர்  ரெசெப் தய்யீப் எர்டோகன் வரவேற்று மகிழ்ந்தார். ஒரு தனிப்பட்ட சந்திப்பிற்கு பிறகு, இரு தலைவர்களும் தேசிய நூலகத்திற்கு சென்றனர், அங்கு அதிகாரிகள், குடியரசின் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியலமைப்பின் உறுப்பினர்களுடன் சந்திப்பினை மேற்கொண்டனர்.

பின்னர் துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள அரசுத் தலைவர் மாளிகையில்  அந்நாட்டின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை லியோ அவர்கள் அருளுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து துருக்கியில் சன்னி இஸ்லாத்தின் கற்பித்தல் மற்றும் நடைமுறையை ஊக்குவிக்கும் அரசு நிறுவனமான தியானெத் என்ற மத விவகாரங்களுக்கான தலைமை அலுவலகத்தில், அதன் தலைவர் சஃபி அர்பாகுஸுடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பை மேற்கொண்டார்.

இஸ்தான்புல்லுக்கு குறுகிய விமானப் பயணத்திற்காக விமான நிலையத்திற்குத் திரும்புவதற்கு முன்பு, பணியாளர்களுடனான சந்திப்பிற்காக, திருப்பீடத் தூதர் அலுவலகத்திற்கு சென்றதுடன் துருக்கியில் தனது முதல் நாளை நிறைவு செய்தார் திருத்தந்தை.

திருத்தந்தையின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்

நவம்பர் 28, வெள்ளிக்கிழமை, காலை 9.30 மணிக்கு இஸ்தான்புல்லிலுள்ள தூய ஆவியார் பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், அருள்பணித்துவ மாணவர்கள் மற்றும் பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களுக்குத்  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அருளுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஏழைகளின் சிறிய சகோதரிகள் இல்லத்திற்குச் சென்ற திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், அங்குப் பணியாற்றும் அருள்சகோதரிகள், முதியவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அருளுரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 நவம்பர் 2025, 14:57