கனடாவின் கீவாடின்-லெ பாஸின் பேராயராக ஒரு தமிழர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கனடாவின் கீவாடின்-லெ பாஸ் பெருநகரத்தின் புதிய பேராயராக, அமலமரி சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் சூசை சேசு, OMI அவர்களை நியமனம் செய்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
அருள்பணியாளர் சூசை சேசு அவர்கள், முன்பு எட்மண்டன் மறைமாவட்டத்தில் உள்ள பூர்வகுடி திருஇருதய பங்குத்தளத்தின் பங்குத் தந்தையாகவும் மாநிலத் தலைவரின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
தந்தை சூசை ஜேசு அவர்கள் 1971-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதியன்று, இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள புஷ்பவனத்தில் பிறந்தார். இவர் சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள ஏதெனியம் தர்மராம் வித்யா க்ஷேத்திர பாப்பிறைக் கல்லூரியில் (Pontifical Athenaeum Dharmaram Vidya Kshetram) தனது தத்துவயியல் படிப்பைத் தொடர்ந்தார்.
மேலும் மத்திய பிரதேசத்தின் அஷ்டாவில் உள்ள கிறிஸ்ட் பிரேமாலயா இறையியல் கல்லூரியில் (Khrist Premalaya Institute of Theology in Ashta) தனது இறையியல் படிப்பை முடித்தார். அதனைத் தொடர்ந்து ஒட்டாவாவில் உள்ள புனித பவுல் பல்கலைக்கழகத்தில் மேய்ப்புப்பணிசார் ஆற்றுப்படுத்துதல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
2000 -மாம் ஆண்டு அமலமரி சபையில் இறுதி அர்ப்பணத்தை வழங்கிய பிறகு, அதே ஆண்டு ஜூலை 27-ஆம் தேதியன்று, அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.
பேராயராக நியமனம் பெற்றுள்ள அருள்பணியாளர் ஜேசு அவர்கள், இந்தியா மற்றும் கனடா நாடுகளின் பல்வேறு இடங்களில் பங்குப் பணியாளராகப் பணியாற்றியுள்ளார்.
கீவாடின்-லெ பாஸின் பேராயராக அவர் நியமிக்கப்பட்டது, திருஅவைக்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்புள்ள பணிகளில், குறிப்பாக மேய்ப்புப்பணி மற்றும் மறைபரப்புப் பணிகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.
கனடாவின் மிகப்பெரிய மறைமாவட்டங்களில் ஒன்றான கீவாடின்-லெ பாஸ் மறைமாவட்டம், பரந்த வடக்குப் பகுதிகளை உள்ளடக்கியது. மேலும் அருள்பணியாளர் சேசு அவர்களின் பரந்துபட்ட பங்குப் பணி மற்றும் நற்செய்தி அறிவிப்புப் பணி அனுபவங்கள் யாவும், தலத்திருஅவைக்கு நிறைந்த பயனைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவின் வடக்கு மற்றும் பூர்வகுடி சமூகங்களில் திருஅவையின் இருப்பு மற்றும் வெளிப்பாட்டை வலுப்படுத்த திருத்தந்தையின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நியமனம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
