உடன்பிறந்த உறவு மற்றும் அமைதிப் பாலங்களைக் கட்டுவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம்
நவம்பர் 27, வியாழக்கிழமையன்று, மாலை 03.30 மணிக்கு துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள அரசுத் தலைவர் மாளிகையில் அந்நாட்டின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய அருளுரை.
அன்பான சகோதரர் சகோதரிகளே,
எனது திருத்தூதுப் பயணங்களை உங்கள் நாட்டிற்கு வருகை தந்து தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன், ஏனெனில் இந்த நிலம் கிறிஸ்தவத்தின் தோற்றத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது, இன்று அது ஆபிரகாமின் குழந்தைகளையும் அனைத்து மனிதகுலத்தையும் வேறுபாடுகளை அங்கீகரித்து மதிக்கும் ஓர் உடன்பிறந்த உறவுக்கு அழைக்கிறது.
உங்கள் நாட்டின் இயற்கை அழகு, கடவுளின் படைப்பைப் பாதுகாக்க நம்மைத் தூண்டுகிறது. மேலும், நீங்கள் வாழும் இடங்களின் கலாச்சார, கலை மற்றும் ஆன்மிக வளம், வெவ்வேறு தலைமுறைகள், மரபுகள் மற்றும் கருத்துக்கள் சந்திக்கும் போது, சிறந்த நாகரிகங்கள் உருவாகின்றன, அதில் வளர்ச்சியும் ஞானமும் ஒன்றிணைந்து இணைக்கப்படுகின்றன என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன.
கிறிஸ்தவர்கள் துருக்கிய அடையாளத்தின் ஒரு பகுதி
உங்கள் நாட்டின் ஒன்றிப்புக்கு கிறிஸ்தவர்கள் நேர்மறையான பங்களிப்பை வழங்க விரும்புகிறார்கள் என்பதை நான் மனப்பூர்வமாக உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அவர்கள் துருக்கிய அடையாளத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள், அதை உணர்கிறார்கள், இது திருத்தந்தை புனித 23-ஆம் ஜான் அவர்களால் மிகவும் மதிக்கப்பட்டது, அவரை உங்கள் மக்களுடன் எப்போதும் பிணைத்த ஆழமான நட்பிற்காக "துருக்கிய திருத்தந்தை" என்று நீங்கள் நினைவில் கொள்கிறீர்கள்.
அவர் 1935-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரை இஸ்தான்புல்லின் இலத்தீன் மறைவட்டத்தின் நிர்வாகியாகவும், துருக்கி மற்றும் கிரேக்கத்தில் அப்போஸ்தலிக்க பிரதிநிதியாகவும் இருந்தார், மேலும் உங்கள் புதிய குடியரசின் தொடர்ச்சியான வளர்ச்சியிலிருந்து கத்தோலிக்கர்கள் விலக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்ய அயராது உழைத்தார்.
மேலும், நீதியும் இரக்கமும் "வலிமையுள்ளவனுக்கே உரிமை" என்ற மனநிலையை சவால் செய்கின்றன, அத்துடன் இரக்கத்தையும் கூட்டுப்பொறுப்புணர்வையும் வளர்ச்சிக்கான உண்மையான அளவுகோல்களாகக் கருத வேண்டும் என்று கேட்கத் துணிகின்றன. இந்தக் காரணத்திற்காக, துருக்கியில் உள்ளதைப் போன்ற ஒரு சமூகத்தில், மதம் ஒரு வெளிப்படையான பாத்திரத்தை (role) கிக்கிறது, ஆண்கள் மற்றும் பெண்கள், சக நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டினர், ஏழைகள் மற்றும் பணக்காரர்கள் என அனைத்துக் கடவுளின் குழந்தைகளுடைய மாண்பையும் சுதந்திரத்தையும் மதிக்க வேண்டியது அவசியம். நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள், இது தனிப்பட்ட, சமூக மற்றும் அரசியல் தாக்கங்களைக் கொண்டுள்ளது.
கடவுளின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்த இதயங்களைக் கொண்டவர்கள் எப்போதும் அனைவருக்கும் பொதுவான நன்மையையும் மரியாதையையும் ஊக்குவிக்கிறார்கள். இன்று, இது ஒரு பெரிய சவாலாகும், இது உள்ளூர் கொள்கைகளையும் அனைத்துலக உறவுகளையும் மறுவடிவமைக்க வேண்டும், குறிப்பாக தொழில்நுட்ப முன்னேற்றங்களை எதிர்கொண்டு, அநீதியை முறியடிக்க உதவுவதற்குப் பதிலாக அதை அதிகரிக்கக்கூடும்.
செயற்கை நுண்ணறிவு கூட நமது சொந்த விருப்பங்களை மீண்டும் உருவாக்குகிறது மற்றும் செயல்முறைகளை துரிதப்படுத்துகிறது, அவற்றை நெருக்கமாக ஆய்வு செய்தால், அவை இயந்திரங்களின் வேலை அல்ல, மாறாக மனிதகுலத்தின் வேலை என்பது தெரிய வரும் எனவே, வளர்ச்சியின் பாதையை மாற்றவும், நமது மனித குடும்பத்தின் ஒன்றிப்புக்கு ஏற்கனவே ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்யவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
மனித குடும்பம்
நான் இப்போதுதான் மனித குடும்பத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன். இந்த உருவகம் நமது பொதுவான விதிக்கும் ஒவ்வொரு தனிநபரின் அனுபவங்களுக்கும் இடையில் ஒரு தொடர்பை - மீண்டும் ஒரு பாலத்தைக் கட்டியெழுப்ப நம்மை அழைக்கிறது. உண்மையில், நம் ஒவ்வொருவருக்கும், குடும்பம் சமூக வாழ்க்கையின் முதல் கருவாக இருந்தது, அதில் "மற்றவர்" இல்லாமல் "நான்" இல்லை என்பதை நாம் கற்றுக்கொண்டோம். மற்ற நாடுகளை விட, துருக்கிய கலாச்சாரத்தில் குடும்பம் அதிக முக்கியத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது, மேலும் அதன் மையத்தை ஆதரிக்கும் முயற்சிகளுக்கு குறையேதும் இல்லை.
மேலும், தனிமை ஒரு தொழிலாக மாறுகிறது என்பதில் நுகர்வோர் பொருளாதாரங்கள் ஏமாற்றுகின்றன. பாசத்தையும் தனிப்பட்ட தொடர்பையும் பாராட்டும் ஒரு கலாச்சாரத்துடன் நாம் இதற்கு பதிலளிக்க வேண்டும். ஏனென்றால், நாம் ஒன்றாக இருந்தால் மட்டுமே நமது உண்மை இயல்பு உள்ளவர்களாக மாறமுடியும். அன்பின் வழியாக மட்டுமே நமது உள் வாழ்க்கை ஆழமானதாகவும், நமது அடையாளம் வலுவானதாகவும் மாறும்.
அடிப்படை மனித உறவுகளை அவமதிப்பவர்கள், அவற்றின் வரம்புகளையும் பலவீனங்களையும் கூட எப்படித் தாங்குவது என்பதைக் கற்றுக்கொள்ளத் தவறுபவர்கள், மிக எளிதாக சகிப்புத்தன்மையற்றவர்களாகவும், நமது சிக்கலான உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாதவர்களாகவும் மாறுகிறார்கள். அதே நேரத்தில், குடும்ப வாழ்க்கைக்குள்தான் தாம்பத்திய அன்பின் மதிப்பும் பெண்களின் பங்களிப்பும் மிகவும் குறிப்பிட்ட முறையில் வெளிப்படுகின்றன.
குறிப்பாக பெண்கள், தங்கள் படிப்பு மற்றும் தொழில்முறை, கலாச்சார மற்றும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கேற்பதன் மூலம், உங்கள் நாட்டிற்கும், அனைத்துலக அரங்கில் அதன் நேர்மறையான செல்வாக்கிற்கும் சேவை செய்வதில் அதிகளவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். எனவே, குடும்பத்தை ஆதரிக்கும் மற்றும் சமூக வாழ்க்கையின் முழு மலர்ச்சிக்கு பெண்கள் அளிக்கும் பங்களிப்பை ஆதரிக்கும் இந்த விடயத்தில் முக்கியமான புதிய முயற்சிகளை நாம் பெரிதும் மதிக்க வேண்டும்.
துருக்கி ஓர் உறவுப்பாலம்
திரு அரசுத் தலைவர் அவர்களே, நீதியான மற்றும் நீடித்த அமைதிக்காக, மக்களிடையே உறுதித்தன்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆதாரமாக துருக்கியே சிறந்து விளங்கட்டும். 1967-ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல், 1979-இல் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 2006-இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மற்றும் 2014-இல் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய நான்கு திருத்தந்தையர்களின் துருக்கி நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டது, திருப்பீடம் துருக்கி குடியரசுடன் நல்ல உறவைப் பேணுவது மட்டுமல்லாமல், கிழக்குக்கும் மேற்கிற்கும் இடையேயும், ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயும் ஒரு உறவுப் பாலமாகவும், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களின் சந்திப்பிற்கான வழியாகவும் அமைந்துள்ள இந்த நாட்டின் பங்களிப்புடன் ஒரு சிறந்த உலகத்தைக் கட்டியெழுப்ப ஒத்துழைக்க விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது.
எனது இந்தத் திருத்தூதுப் பயணம் சிறப்பாக நீசேயா திருச்சங்கத்தின் 1700-வது ஆண்டுவிழா, சந்திப்பு மற்றும் உரையாடலைப் பற்றி நமக்குப் பேசுகிறது. அதே போல் முதல் எட்டு கிறிஸ்தவ ஒன்றிப்புசார் திருச்சங்கங்கள் இன்றைய துருக்கி நாட்டில் நடத்தப்பட்டன என்பதும் உண்மை. இன்று, எப்போதையும் விட, உறுதியான விருப்பத்துடனும் பொறுமையுடனும் உரையாடலை ஊக்குவிக்கும் மற்றும் அதை வாழ்ந்துகாட்டும் நபர்கள் நமக்குத் தேவைப்படுகின்றனர்.
இரண்டு உலகப் போர்களின் துயரங்களுக்குப் பிறகு, பொருளாதார மற்றும் இராணுவ வலிமையின் நடைமுறையில் உள்ள உத்திகளால் தூண்டப்பட்டு, உலக அளவில் மோதல்களின் உச்சக்கட்ட நிலையால் குறிக்கப்பட்ட ஒரு கட்டத்தை நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். இதைத்தான் முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், " மூன்றாம் உலகப்போர் பகுதி பகுதியாக இடம்பெற்று வருகிறது" என்று கூறினார்.
இதற்கு நாம் எந்த வகையிலும் அடிபணியக்கூடாது! மனிதகுலத்தின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. இந்த அழிவுகரமான இயக்காற்றலால் உறிஞ்சப்படும் ஆற்றல்களும் வளங்களும், மனித குடும்பம் இன்று ஒன்றாக எதிர்கொள்ள வேண்டிய உண்மையான சவால்களான அமைதி, பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம், உடல்நலம் மற்றும் கல்வி மற்றும் படைப்பின் பாதுகாப்பு ஆகியவற்றிலிருந்து திசைதிருப்பப்படுகின்றன.
திருப்பீடம், அதன் ஆன்மிக மற்றும் தார்மீக வலிமையை மட்டுமே கொண்டு, ஒவ்வொரு நபரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மையமாகக் கொண்ட அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைக்க விரும்புகிறது. எனவே, உண்மையிலும் நட்பிலும், கடவுளின் உதவியை தாழ்மையுடன் நம்பி ஒன்றிணைந்து நடப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
