தேடுதல்

ஐரோப்பிய ஆயர் பேரவையின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை ஐரோப்பிய ஆயர் பேரவையின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை   (ANSA)

கடவுள் தம் மக்களைத் தெய்வீகக் கொடைகளால் நிரப்புகிறார்!

பிரிவினை மற்றும் மோதல்கள் நிறைந்த காலகட்டத்தில், கிறிஸ்தவர்கள் தூய ஆவியாரின் வழிகாட்டுதலுக்குத் திறந்த மனம் கொண்டிருக்க வேண்டும் : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

எல்லா வல்லமையும் கொண்ட கடவுள், தம்முடைய தூய மக்களிடம் பேசுகிறார் என்றும், அவர்கள் வழியாகவும் பேசுகிறார் என்றும் நாம் நம்புகிறோம். அவர் அவர்களை அன்புகூர்கிறார், மேலும் அவர்கள் வளர்ந்து அவரது முழுமையை அடையும்படி தம்முடைய தெய்வீக கொடைகளால் அவர்களை வளப்படுத்துகிறார் என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர், 6, வியாழக்கிழமை, ஐரோப்பிய ஆயர் பேரவையின் (CCEE) கூட்டுக் குழுவின் உறுப்பினர்களுக்கும், ஐரோப்பிய திருச்சபைகளின் பேரவைகளுக்கும் (CEC) மற்றும் ஐரோப்பாவின் கிறிஸ்தவ திருச்சபைகளின் பிரதிநிதிகளுக்கும், திருப்பீடத்தில் உரை ஒன்று வழங்கியபோது இவ்வாறு மொழிந்தார் திருத்தந்தை.

ஐரோப்பாவில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, குறிப்பாக வளர்ந்து வரும் மதச்சார்பின்மை மற்றும் பல்வேறு கலாச்சார பின்னணிகளின் இருப்பை  ஒப்புக்கொண்ட திருத்தந்தை, இந்தச் சவால்கள் இருந்தபோதிலும், சில பகுதிகளில் நம்பிக்கை மற்றும் வளர்ச்சியின் அறிகுறிகளை எடுத்துக்காட்டினார்.

குறிப்பாகப் பிரிவினை மற்றும் மோதல்கள் நிறைந்த காலகட்டத்தில், கிறிஸ்தவர்கள் தூய ஆவியாரின் வழிகாட்டுதலுக்குத் திறந்த மனம் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஐரோப்பிய கிறிஸ்தவச் சமூகங்களிடையே அதிக ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிப்பிற்கு அழைப்பு விடுக்கும், நற்செய்தியைப் பரப்புவதற்கான பொதுவான இலக்குகளைப் பகிர்ந்து கொள்ளும் திருத்தப்பட்ட "Ecumenical Charter எனப்படும் ஆவணத்தையும் எடுத்துக்காட்டினார்.

இந்தக் கிறிஸ்தவப் பயணத்தை, வெவ்வேறு மரபுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் செவிசாய்த்து, இன்றைய சூழலில் எவ்வாறு திறம்பட நற்செய்தியை அறிவிப்பது என்பதை ஒன்றாகப் தெளிந்துதேர்வு செய்யும் ஒரு ஒன்றிணைந்த பயணத்துடன் ஒப்பிட்டார் திருத்தந்தை.

கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாக இயேசு கிறிஸ்துவைக் கொண்டாட கிறிஸ்தவத் தலைவர்களைச் சந்திக்கும் நீசேயா திருச்சங்கம் இடம்பெற்ற இடத்திற்குத் தனது வரவிருக்கும் திருப்பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார்திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 நவம்பர் 2025, 16:10