தேடுதல்

இத்தாலிய ஆயர் பேரவைக்கு உரை வழங்கும் திருத்தந்தை இத்தாலிய ஆயர் பேரவைக்கு உரை வழங்கும் திருத்தந்தை   (ANSA)

ஒன்றிணைந்து பயணிக்கும் ஒரு திருஅவை இறைமக்களுக்குச் செவிசாய்க்கிறது!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இத்தாலிய ஆயர்களிடம் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்திற்காக நன்றி உள்ளவர்களாக இருத்தல், சமூகத்துடனும் எண்மமுறை (டிஜிட்டல்) உலகத்துடனும் ஈடுபாடு கொள்ளுதல், குடும்பங்கள், இளைஞர்கள், முதியவர்கள், தனிமையில் இருப்பவர்கள் மற்றும் ஏழைகளிடம் நெருக்கம் காட்டுதல் ஆகியவற்றை ஊக்குவித்துள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிளவுபட்ட இவ்வுலகில் கிறிஸ்துவை மையமாகக் கொண்டு அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாக விளங்கிடுமாறு இத்தாலிய ஆயர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 20, அசிசி நகரிலுள்ள வானதூதர்களின் அன்னை மரியா பேராலயத்தில் இடம்பெற்ற இத்தாலிய ஆயர் பேரவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆயர்களுக்கு வழங்கிய உரை ஒன்றில் இவ்வாறு விண்ணப்பித்துள்ளார்.

பகிரப்பட்ட மேய்ப்புப் பணி முடிவுகள், மறைமாவட்டங்களுக்கிடையே அதிக ஒத்துழைப்பு மற்றும் சிறிய மறைமாவட்டங்களைப் பற்றி கவனமாகத் தெளிந்து தேர்தல் ஆகியவற்றில்  கவனம் செலுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஒன்றிணைந்து பயணிக்கும் ஒரு திருஅவை இறைமக்களுக்குச் செவிசாய்க்கிறது! என்றும், புதிய ஆயர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகளில் பரந்த பங்கேற்பு இருக்க வேண்டும் என்றும் உரைத்த திருத்தந்தை, புதுப்பித்தல் அவசியம், அதாவது, நாம் செயலற்ற தன்மையைக் கடக்க வேண்டும், பணிக்கான வயது வரம்பை மதிக்க வேண்டும், மேலும் நமது பணி முடிந்ததும் "விடுப்பு எடுக்க" கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்திற்காக நன்றி உள்ளவர்களாக இருத்தல், சமூகத்துடனும் எண்மமுறை (டிஜிட்டல்) உலகத்துடனும் ஈடுபாடு கொள்ளுதல், குடும்பங்கள், இளைஞர்கள், முதியவர்கள், தனிமையில் இருப்பவர்கள் மற்றும் ஏழைகளிடம் நெருக்கம் காட்டுதல் ஆகியவற்றை அவர்களிடம் ஊக்குவித்துள்ளார்.

பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதையும் அவர்களுக்குச் செவிசாய்ப்பதையும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, புனித பிரான்சிஸ் அசிசியரால் ஈர்க்கப்பட்டு, இன்றைய உலகிற்கு வலிமையான, நம்பிக்கையில் வேரூன்றிய விருப்பத்தேர்வுகளைக் கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டு தனது உரையை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 நவம்பர் 2025, 11:45