தேடுதல்

இயேசுவின் உயிர்ப்பு எதிர்நோக்கைக் கொண்டுவருகிறது!

பாஸ்கா அறிவிப்பு என்பது வரலாறு முழுவதிலும் எதிரொலித்த மிக அழகான, மகிழ்ச்சியான மற்றும் மிகப்பெரிய செய்தியாகும். பாவத்தின் மீது அன்பும், இறப்பின் மீது வாழ்க்கையும் பெற்ற வெற்றியை இது சான்றளிக்கும் "நற்செய்தி" ஆகும் : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

நவம்பர் 5, மாதத்தின் முதல் புதன்கிழமையாகிய இன்று, வத்திகானின் புனித்து பேதுரு பெருங்கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த திருப்பயணிகளால் நிறைந்திருந்தது. மிதமான காலச்சூழல் திருப்பயணிகள் அனைவருக்கும் இதமாக இருந்தது. முன்னதாக திருத்தந்தை லியோ அவர்கள், வத்திக்கான் வளாகம் முழுவதும் தனது சிறப்பு வாகனத்தில் வலம் வந்து அங்கு நிறைந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். சரியாக காலை 10 மணிக்கு திருத்தந்தை தனது புதன் பொதுமறைக்கல்வி உரையைத் தொடங்கினார். முதலில் மத்தேயு நற்செய்தியிலிருந்து (மத் 28:20) வாசகம் வாசிக்கப்பட்டது.

இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார். (மத் 28:18-20)

அதனைத் தொடர்ந்து, திருத்தந்தை தனது உரையில் இயேசுவின் பாஸ்கா நிகழ்வு குறித்த தனது சிந்தனைகளைத் திருப்பயணிகளுடன் பகிர்ந்துகொண்டார். இப்போது அவரது உரைக்குச் செவிமடுப்போம்.

அன்பான சகோதரர் சகோதரிகளே!

இயேசுவின் பாஸ்கா என்பது ஒரு தொலைதூர கடந்த காலத்தைச் சேர்ந்ததல்ல, மனித வரலாற்றின் பல தொடர் நிகழ்வுகளைப் போலவே இப்போது பாரம்பரியத்தில் நிலைபெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உயிர்ப்பு ஞாயிறன்றும், ஒவ்வொரு நாளும் நற்கருணை கொண்டாட்டத்திலும் உயிர்த்தெழுதலை உயிருள்ள நினைவாகக் கொண்டாட திருஅவை நமக்குக் கற்பிக்கிறது. இந்த விழாவில், "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத் 28:20) என்ற உயிர்த்தெழுந்த ஆண்டவரின் வாக்குறுதி முழுமையாக நிறைவேறும்.

பாஸ்கா மறைபொருள் கிறிஸ்தவ வாழ்வின் மூலக்கல்

இந்தக் காரணத்தினால்தான், பாஸ்கா மறைபொருள் கிறிஸ்தவ வாழ்க்கையின் மூலக்கல்லாக அமைந்துள்ளது, அதைச் சுற்றியே மற்ற எல்லா நிகழ்வுகளும் சுழல்கின்றன. அப்படியானால், எவ்வித வெறுப்போ அல்லது உணர்ச்சிவயப்படுதலோ இல்லாமல், ஒவ்வொரு நாளும் உயிர்ப்புப் பெருவிழா என்று நாம் கூறலாம். எந்த வகையில்?

ஒவ்வொரு மணி நேரமும், வலி, துன்பம், சோகம் என நமக்கு பலவிதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன, இவை மகிழ்ச்சி, வியப்பு, அமைதி ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளன. ஆனால் ஒவ்வொரு சூழ்நிலையிலும், மனித இதயம் முழுமைக்காகவும், ஆழ்ந்த மகிழ்ச்சிகாகவும் ஏங்குகிறது.

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த தத்துவயியலார், எடித் ஸ்டீன் என்ற இயற்பெயர் கொண்ட சிலுவையின் புனித தெரசா பெனடிக்டா, மனித ஆளுமையின் மறைபொருளை ஆழமாக ஆராய்ந்தவர், நிறைவிற்கான தொடர்ச்சியான தேடலின் இந்த முனைப்புடைமையை (செயலூக்கம்)  நமக்கு நினைவூட்டுகிறார்.

மனிதன் எப்போதும் தனக்குப் புதிதாகக் கொடுக்கப்பட வேண்டும் என்று ஏங்குகிறான், அப்போதுதான் அந்தக் கணம் அவனுக்குக் கொடுப்பதையும், அதேவேளையில்,  அவனிடமிருந்து பறிப்பதையும் அவன் பெற்றுக்கொள்ள முடியும்" என்று அவர் எழுதுகிறார். (Finite and Eternal Being: An Attempt to Ascend to the Meaning of Being”, Rome 1998, 387). நாம் வரம்புக்குள் மூழ்கியிருக்கிறோம், ஆனால் அதேவேளையில் அதைக் கடக்கவும் கடுமுயற்சி செய்கிறோம்.

பாஸ்கா அறிவிப்பு என்பது மகிழ்ச்சியான செய்தி

பாஸ்கா அறிவிப்பு என்பது வரலாறு முழுவதிலும் எதிரொலித்த மிக அழகான, மகிழ்ச்சியான மற்றும் மிகப்பெரிய செய்தியாகும். பாவத்தின் மீது அன்பும், இறப்பின் மீது வாழ்க்கையும் பெற்ற வெற்றியை இது சான்றளிக்கும் "நற்செய்தி" ஆகும், அதனால்தான் நம் மனதையும் இதயங்களையும் இடையூறு செய்யும் அர்த்தத்திற்கான தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே விடயம் இதுவாக அமைந்துள்ளது. மனிதர்கள் ஒரு உள் இயக்கத்தால் ஈர்க்கப்படுகிறார்கள், அதைத் தாண்டிய ஒன்றை நோக்கி கடுமுயற்சி செய்கிறார்கள், அதைத் தொடர்ந்து அவைகளை ஈர்க்கிறார்கள். எந்தத் தற்செயல் எதார்த்தமும் நம்மை திருப்திப்படுத்துவதில்லை.

நாம் எல்லையற்ற மற்றும் முடிவற்றவற்றை நோக்கிச் செல்கிறோம். இது துன்பம், இழப்பு மற்றும் தோல்வியால் எதிர்பார்க்கப்படும் இறப்பு அனுபவத்திலிருந்து வேறுபடுகிறது. அதனால்தான் "எந்த உயிருள்ள மனிதனும் மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது" (காண்க. சூரியனின் பாடல்) என்று புனித பிரான்சிஸ் அசிசியார் பாடுகிறார்.

என்றென்றும் வாழ்பவர் இயேசு

பெண்கள் இயேசுவின் உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கிக்கொண்டு கல்லறைக்குச் சென்றபோது, ​​அது காலியாக இருப்பதைக் கண்ட அன்று காலையிலிருந்து எல்லாம் மாறுகிறது. கிழக்கிலிருந்து எருசலேமுக்கு வந்த ஞானியர் மூவர், "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?" (மத் 2:1-2), என்று எழுப்பிய கேள்வி, உயிர்ப்பு விடியலில் பெண்களிடம் பேசும் வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் கூறும் "சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்" என்ற வார்த்தைகளில் அதன் உறுதியான பதிலைக் காண்கிறது. (மாற் 16:6)

அன்று காலை முதல் இன்று வரை, ஒவ்வொரு நாளும், “அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு" (திவெ 1:17-18), என்ற பெயர் இயேசுவுக்கு இருக்கும்.

மேலும் அவரில், நமது குழப்பமான வாழ்கைத் தருணங்களில் நம்மை வழிநடத்தக்கூடிய ஒரு விண்மீனைக் எப்போதும் கண்டுபிடிக்க முடியும் என்ற உறுதி நமக்கு உள்ளது, அவை பெரும்பாலும் குழப்பமான, ஏற்றுக்கொள்ள முடியாத, புரிந்துகொள்ள முடியாத நிகழ்வுகளால் குறிக்கப்படுகின்றன. உயிர்த்தெழுதலின் மறையுண்மையைப் பற்றி தியானிப்பதன் வழியாக, அர்த்தத்திற்கான நமது தாகத்திற்கு ஒரு பதிலைக் காண்கிறோம்.

நமது பலவீனமான மனிதநேயத்தை எதிர்கொள்ளும் போது, ​​பாஸ்கா அறிவிப்பு தனிப்பட்ட மற்றும் உலகளாவிய அளவில் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் நமக்கு முன்வைக்கும் அச்சுறுத்தும் சவால்களை எதிர்கொள்ள, கவனிப்பு மற்றும் குணப்படுத்துதல், ஊட்டமளிக்கும் நம்பிக்கையாக மாறுகிறது.

உயிர்ப்பின்  பார்வையில், சிலுவைப் பாதை, ஒளியின் பாதையாக மாற்றப்படுகிறது. ஆகவே உயிர்த்தெழுதலுக்கு முந்தைய அனைத்து நிலைகளையும் புதிய ஒளியில் மீண்டும் காண வேண்டுமெனில், வலிக்குப் பிந்தைய மகிழ்ச்சியை நாம் உளப்பூர்வமாகத் தியானிக்க வேண்டும்.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் அடத்தளம்

உயிர்ப்பு சிலுவையை ஒழிப்பதில்லை, மாறாக நமது மனித வரலாற்றை மாற்றிய அற்புதமான போராட்டத்தில் அதைத் தோற்கடிக்கிறது. பல சிலுவைகளால் குறிக்கப்பட்ட நமது காலம் கூட, பாஸ்கா நம்பிக்கையின் விடியலைக் காண நம்மை அழைக்கிறது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு கருத்தோ, ஒரு கோட்பாடோ அல்ல, ஆனால் அது நம்பிக்கையின் அடித்தளமாக இருக்கும் நிகழ்வாக உள்ளது.

உயிர்த்தெழுந்தவர், தூய ஆவியாரின் வழியாக, இதை நமக்கு தொடர்ந்து நினைவூட்டுகிறார், இதனால் மனித வரலாறு கீழ்வான வெளிச்சத்தைக் காணாத இடங்களிலும் நாம் அவருடைய சாட்சிகளாக இருக்க முடியும். பாஸ்கா எதிர்நோக்கு ஏமாற்றமளிக்காது. நமது அன்றாட வாழ்க்கைப் பயணத்தின் வழியாக பஸ்காவை உண்மையாக நம்புவது என்பது நம் வாழ்க்கையைப் புரட்சிகரமாக்குவதாகும், கிறிஸ்தவ நம்பிக்கையின் மென்மையான மற்றும் துணிச்சலான வலிமையால் உலகை மாற்றுவதற்காக மாற்றப்படுவதைக் குறிக்கிறது.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 நவம்பர் 2025, 16:21