மதம் தவறாகப் பயன்படுத்தப்படும் உலகில் அமைதியைக் கொணர்வோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், நவம்பர் 29, சனிக்கிழமை, மாலை 05.00 மணிக்கு இஸ்தான்புல்லில் உள்ள வோக்ஸ்வாகன் அரங்கத்தில் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை திருப்பலியைத் தலைமையேற்று நடத்தி வழங்கிய மறையுரைச் சிந்தனைகள்.
அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே!
இந்த நாட்டின் திருத்தூதர் மற்றும் பாதுகாவலரான புனித அந்திரேயாவை திருஅவை நினைவுகூரும் நாளுக்கு முந்தைய நாளில் இந்தத் திருப்பலியை நாம் கொண்டாடுகிறோம். அதேவேளையில், கிறிஸ்து பிறப்பில் இயேசுவின் மறைபொருளை புதிதாக அனுபவிக்க நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் பருவமான திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறோம்.
இந்தச் சூழலில், இன்றைய திருப்பலியின் முதல் வாசகம் (எசா 2:1-5) இறைவாக்கினர் எசாயாவின் நூலில் மிக அழகான பகுதிகளில் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அழைப்பு ஒன்று எதிரொலிக்கிறது, அனைத்து மக்களையும் ஒளி மற்றும் அமைதியின் இடமான கடவுளின் மலையில் ஏற அழைக்கிறது (வச. 3). அப்படியானால், இந்த இறை வசனத்தில் வழங்கப்பட்டுள்ள சில உருவங்களைப் பற்றி சிந்தித்து, இவை திருஅவையின் ஒரு பகுதியாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை உங்களோடு ஒன்றிணைந்து தியானிக்க விரும்புகிறேன்.
மிக உயரமான மலை
முதல் உருவம் மலைகளின் மிக உயரமானதாக நிலைநிறுத்தப்பட்ட மலையின் உருவம் (காண்க. எசா 2:2). நம் வாழ்வில் கடவுளின் செயலின் பலன்கள் என்பது நமக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான ஒரு கொடை என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. சீயோன் என்பது மலையின் மீது அமைக்கப்பட்ட ஒரு நகரம் மற்றும் நம்பகத்தன்மையில் மறுபிறப்பு எடுக்கும் ஒரு சமூகத்தின் அடையாளமாகும்.
அதன் அழகு எல்லா இடங்களிலிருந்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கலங்கரை விளக்கமாக உள்ளது. மேலும் நன்மையின் மகிழ்ச்சி எல்லா இடங்களுக்கும் பரவக்கூடியது என்பதை நினைவூட்டுகிறது. பல புனிதர்களின் வாழ்க்கை இதை உறுதிப்படுத்துகிறது. திருமுழுக்கு யோவானின் பேரார்வத்தால், திருத்தூதர் யோவானுடன் சேர்ந்து, இயேசுவிடம் அழைத்துச் செல்லப்பட்ட அவரது சகோதரர் அந்திரேயாவின் (யோவா 1:40-42) உற்சாக முயற்சியால், புனித பேதுரு இயேசுவைச் சந்திக்கிறார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, புனித அம்புரோஸின் ஆர்வமிக்க மறையுரையின் மூலம் புனித அகுஸ்தினார் கிறிஸ்துவிடம் வருகிறார். இதே போன்ற எடுத்துக்காட்டுகள் இன்னும் பல உள்ளன. இங்கே நமது சொந்த விசுவாச சாட்சியத்தின் வல்லமையை புதுப்பிப்பதற்கான அழைப்பை காண்கிறோம்.
அன்பான நண்பர்களே, நாம் சந்திக்கும் மக்களுக்கு உண்மையிலேயே உதவ விரும்பினால், நற்செய்தி பரிந்துரைப்பது படி (மத் 24:42) இறைவேண்டலாலும், அருளடையாளங்களாலும் நம் விசுவாசத்தை வளர்த்துக் கொண்டு, அதை பிறரன்புப் பணியில் நிலையாக வாழ்ந்து, புனித பவுல் இரண்டாம் வாசகத்தில் நமக்குச் சொல்வது போல், இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொண்டு (உரோ 13:12) நம்மை நாமே விழிப்பாக வைத்துக்கொள்வோம்.
அமைதி ஆட்சி செய்யும் உலகம்
இறைவாக்கினர் எசாயா நமக்குக் காட்டும் இரண்டாவது உருவம், அமைதி ஆட்சி செய்யும் உலகத்தைப் பற்றியது. அதை இவ்வாறு அவர் விவரிக்கிறார் : அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள் (வச. 4). இன்று நமக்கு இந்த அழைப்பு எவ்வளவு அவசரமானது! நம்மைச் சுற்றி, நமக்குள்ளும், நம்மிடையேயும் அமைதி, ஒன்றிப்பு மற்றும் ஒப்புரவுக்கான தேவை எவ்வளவு அதிகம்! இதற்கு நமது பங்களிப்பு என்னவாக இருக்க முடியும்?
எனது திருத்தூதுப் பயணத்தின் இலச்சினையிலிருந்து எடுக்கப்பட்டு, இஸ்தான்புல்லின் போஸ்போரஸ் குறுக்கிணைப்புகளால் (crossings) ஈர்க்கப்பட்ட ஒரு பாலத்தின் உருவத்தை ஒன்றிப்பின் அடையாளமாக உங்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகின்றேன். பாலங்கள் இரண்டு கண்டங்களை இணைப்பது போல, கிறிஸ்தவர்கள் ஒன்றிப்பின் மூன்று இன்றியமையாத பாலங்களைக் கட்டியெழுப்பி அதைப் பராமரிக்க அழைக்கப்படுகிறார்கள்.
1. கத்தோலிக்க சமூகத்திற்குள் ஒன்றிப்பு
இந்த நாட்டில், கத்தோலிக்கத் திருஅவை நான்கு வழிபாட்டு மரபுகளை (இலத்தீன், ஆர்மீனியன், கல்தேயர், சிரியாக்) உள்ளடக்கியது. அவற்றின் பன்முகத்தன்மை திருஅவையின் கத்தோலிக்கத்தை வளப்படுத்துகிறது. ஒன்றிப்பு என்பது கடவுளிடமிருந்து கிடைத்த ஒரு கொடை, மேலும் எப்படி ஒரு பாலத்திற்கு வலுவும் உறுதித்தன்மையும் தேவைப்படுகிறதோ அவ்வாறே, ஒன்றிப்பிற்கு தொடர் கவனிப்பு, கவனம் மற்றும் பராமரிப்பு தேவைப்படுகிறது.
2. கிறிஸ்தவ ஒன்றிப்பு
பிற கிறிஸ்தவச் சபைகளைச் சேர்ந்த தலைவர்களின் இருப்பை ஒப்புக்கொள்கிறேன். கிறிஸ்துவை நம்பும் அனைவரும் பொதுவான நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றேன். இதற்கொரு எடுத்துக்காட்டாக திருத்தந்தை 23-ஆம் யோவானை நினைவுகூர்ந்து "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!" (யோவா 17:21) என்ற கிறிஸ்துவின் விருப்பத்திற்கான உறுதிப்பாட்டை மீண்டும் இங்கே உறுதிப்படுத்த விரும்புகின்றேன்.
3. பிற மதத்தினருடன் ஒன்றிப்பு
வன்முறையை நியாயப்படுத்த மதம் சில வேளைகளில் தவறாகப் பயன்படுத்தப்படும் உலகில், விசுவாசிகள் தங்களை ஒன்றிணைப்பதை வலியுறுத்தவும், தவறான எண்ணங்களையும் மனப்போக்குகளையும் நிராகரிக்கவும், ஒருவருக்கொருவர்மீதான மரியாதையை வளர்க்கவும் அழைக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம், விசுவாசிகள் அனைவரும் நம்பிக்கையை அளித்து, அனைத்து மக்களையும் அமைதியை ஏற்படுத்துபவர்களாக மாற ஊக்குவிக்கிறார்கள்.
அன்பு நண்பர்களே, இந்த மதிப்பீடுகளை திருவருகைக் காலத்திற்கான நமது தீர்மானங்களாகவும், இன்னும் அதிகமாக நமது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கைக்கான தீர்மானங்களாகவும் ஆக்குவோம். மண்ணுலகை விண்ணுலகுடன் இணைக்கும் பொருட்டு, ஆண்டவர் இயேசு நமக்காகக் கட்டிய பாலத்தில் பயணிப்பது போல நாம் பயணிக்கிறோம். கடவுளையும் நம் சகோதரர் சகோதரிகளையும் முழு மனதுடன் அன்புகூர்ந்து, ஒன்றாகப் பயணித்து, ஒரு நாள் இறைத்தந்தையின் இல்லத்தில் ஒன்றுபட்டிருப்பதைக் காணும்பொருட்டு, இரு கரைகளிலும் (உலகத்திலும்) எப்போதும் நம் கண்களைப் பதிய வைப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
